பீகார் மாநிலத்தில் மூளைக்காய்ச்சலுக்கு பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 100-ஐத் தொட்டுள்ளது. வெப்பம், ஊட்டச்சத்து பற்றாக்குறை மற்றும் போதிய விழிப்புணர்வின்மை காரணமாக மூளைக்காய்ச்சல் அதிவேகமாகப் பரவி வருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
2018-ம் ஆண்டில் ஏழு பேர் உள்பட இந்த ஆண்டு மொத்தம் 103 பேர் மூளைக்காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகள்.
பீகாரில் அடுத்தடுத்து குழந்தைகள் பலியாவது தேசிய அளவிலான செய்தியாகிவிட்ட நிலையில், குழந்தைகளின் மரணம் குறித்து அறிக்கையை சமர்பிக்கும்படி மனித உரிமைகள் ஆணையம் மத்திய, மாநில அரசுக்கு நோட்டீசு அனுப்பியுள்ளது.

மருத்துவரீதியாக மூளைக்காய்ச்சல் மரணங்களுக்கு வெப்பம், ஊட்டச்சத்து பற்றாக்குறை மற்றும் போதிய விழிப்புணர்வின்மை ஆகியவை காரணங்களாக சொல்லப்படுகின்றன. இப்படியொரு உயிர்க்கொல்லி நோய் வேகமாகப் பரவி வரும் நிலையில், அதைத் தடுக்க இணக்கமாக உள்ள மத்திய, மாநில அரசுகள் என்ன நடவடிக்கை எடுத்தன? போதிய விழிப்புணர்வின்மைக்கு பின்னால் உள்ள காரணங்கள் என்ன? பீகாரின் அவலத்தை அலசுகிறது இந்தக் கட்டுரை…
புரோமிளா தேவி, பீகாரின் மொதிஹாரி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர். கடந்த செவ்வாய்கிழமை பூஜை ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். பூஜை முடிந்து தனது நான்கரை வயது மகள் பிரியான்சு-வுக்கு 11 மணியளவில் ரொட்டியும், புஜியா எனப்படும் உருளைக்கிழங்கு கறியும் உண்ணக் கொடுத்துள்ளார். அதன் பிறகு, பிரியான்சு உறங்கிவிட்டார்.
அந்த நாளில் பணிகள் அதிகமாக இருந்ததால், புரோமிளா அடுத்த நாள் காலையில் நீண்ட நேரம் கழித்து எழுந்திருக்கிறார். அப்போது, பிரியான்சுவையும் எழுப்ப முயற்சித்திருக்கிறார். ஆனால், தன் மகள் கண் திறக்கவில்லை, அவளுடைய உடல் விறைத்துப் போயிருக்கிறது.
தனது மாமியாரின் துணையுடன் பிரியான்சுவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். ஒரு மருத்துவமனையில் மருத்துவர் இல்லை. இறுதியாக மருத்துவர் இருந்த மருத்துவமனைக்கு மகளை தூக்கிச் சென்றிருக்கிறார்கள். அங்கே பிரியான்சுவுக்கு தற்காலிக மருந்துகள் தரப்பட்டுள்ளன. பிரியான்சுவை முசாபர்பூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தியிருக்கிறார் அந்த மருத்துவர்.
ரூ. 4000 -க்கு ஆம்புலன்சை வரவழைத்து, தனது மகளை முசாபர்பூருக்கு அழைத்து வந்திருக்கிறார் புரோமிளா. ஆக்ஸிஜன் மாஸ்க் பொறுத்தி, அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டிருக்கிறாள் சிறுமி. தனது கணவரும் குடும்பத்தை சுமக்கும் பொறுப்பை ஏற்றுள்ளவருமான மோகன் ராம் பஞ்சாபில் தொழிலாளியாக உள்ளார். மகளின் சிகிச்சைக்கு முழு பொறுப்பையும் ஏற்றுள்ள நிலையில், வெளியே கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருக்கிறார் புரோமிளா.
படிக்க:
♦ மூளைக் காய்ச்சல்: பட்டினி போட்டது அரசு! கொன்று போட்டது தொற்றுநோய்!!
♦ பீகார் : வெப்பத்தால் அதிவேகமாகப் பரவும் மூளைக் காய்ச்சல் – 80 பேர் பலி !
“முந்தைய நாள் காலையில் லிட்சி பழத்தை உண்டாள். ஆனால், இரவு ரொட்டியும் புஜியாவும் மட்டும்தான் உண்டாள்” என்கிற புரோமிளா, “நாங்கள் அவளை எழுப்ப முயற்சித்தபோது, அவள் வித்தியாசமாக நடந்துகொண்டாள், நாங்கள் பயந்துபோய்விட்டோம்” மிரட்சியோடு சொல்கிறார்.
நூறு பேரை பலிவாங்கிய காய்ச்சல்தான் தன் மகளை இப்படி கிடத்தியிருக்கிறது என அறியும்போது, புரொமிளாவுக்கு பயம் அதிகமாயிருக்கிறது.
முசாபர்பூரில் மட்டும் நோய்த்தாக்குதல் அதிகமாக இருக்க என்ன காரணம்?
ஒவ்வொரு ஆண்டும் முசாபர்பூர் ஒட்டியுள்ள பகுதிகளில் மே, ஜூன் மாதங்களில் Acute Encephalitis Syndrome (AES) எனப்படும் மூளைக்காய்ச்சல் வெப்பத்தின் காரணமாக மக்களை தாக்குகிறது. முதன்முதலாக இந்தப் பகுதியில் 1995-ம் ஆண்டு இந்த நோய்த்தாக்குதல் கண்டறியப்பட்டது. அதுமுதல் மூளைக்காய்ச்சல் தாக்குதல் காரணம் குறித்து பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. மக்களின் உணவுப் பழக்கம், வாழ்வியல், பொருளாதார நிலை, சாதி பின்னணி உள்ளிட்ட பல அம்சங்களை வைத்து ஆராயப்பட்ட நிலையில், உண்மையான காரணம் என்னவென்பது இதுவரை கண்டறியப்படவில்லை.

மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த ஆய்வொன்றில் முசாபர்பூரில் நோய்த்தாக்குதல் கண்ட குழந்தைகளில் 123 பேர் பட்டியலினம், பழங்குடிகள் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களே இருந்தனர். 100 குழந்தைகளின் குடும்பங்கள் படிப்பறிவில்லாதவர்கள் என்றும் 114 குழந்தைகளின் குடும்பங்கள் வேளாண் தொழிலை அடிப்படையாகக் கொண்டவர்கள் என்றும் அந்த ஆய்வு கூறியது.
பல குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பற்றாக்குறை, தூய்மையான குடிநீர் இல்லாமை, போதிய சத்து கிடைக்காமல் இருப்பது, தூய்மையில்லாமல் இருப்பது, விழிப்புணர்வின்மையே நோய்க்கு ஊக்கியாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்திய மருத்துவர் சங்கத்தைச் சேர்ந்த டாக்டர் அஜய் குமார், நோய்க்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றாலும், நோய்க்குக் காரணமான வைரஸை தனிமைப்படுத்த முடியவில்லை என்கிறார். பலமுறை இந்த நோய்க்கென்று பிரத்யேகமாக பரிசோதனைக்கூடம் அமைக்கக் கேட்டும் இதுவரை அதன் பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்கிறார்.
மூளைக்காய்ச்சலை லிச்சி பழம் தூண்டுகிறதா?
சில நிபுணர்கள் லிச்சி பழத்தை உண்பதால், உடல் வெப்பநிலை அதிகமாவதாகவும் இது வைரஸ் பரவலைத் தூண்டுவதாகவும் தெரிவிக்கின்றனர். முசாபர்பூர் லிச்சி உற்பத்திக்குப் பெயர் பெற்றது. தற்போது லிட்சிக்கும் மூளைக்காய்ச்சல் பரவலுக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டால் மட்டுமே உண்மை தெரியவரும்.
மூளைக்காய்ச்சல் கண்டு, முசாபர்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் உறவினர்களிடம் பேசியதில், காய்ச்சல் வருவதற்கு முன் அவர்கள் லிச்சி பழத்தை உண்டதை கூறியுள்ளனர்.
படிக்க:
♦ தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் ! அரசே இதற்குக் காரணம் !
♦ நோஞ்சான் தேசம் : போரில் தோற்றது மோடியின் இந்தியா !
நோய்ப் பரவலைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன?
மூளைக்காய்ச்சல் நோய்க்கான வேர்க்காரணியை கண்டுபிடிக்க முடியாத நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மட்டுமே நோயைக் கட்டுப்படுத்த உதவும். பீகார் அரசு யுனிசெஃப் -உடன் இணைந்து நிலையான இயக்க நடைமுறைகளை வகுத்துள்ளது.
அதன்படி அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார பணியாளர்கள் (ஆஷா) மூலம் கிராமங்களில் ஆய்வு செய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உப்பு – சர்க்கரை கரைசல் தரவேண்டும் என்பது முதல், எந்தக் குழந்தையும் வெறும் வயிற்றில் உறங்கச் செல்லக்கூடாது என்பதை உறுதி படுத்துவது வரை செய்யவேண்டும். இதன்படி கடந்த நான்கு ஆண்டுகளில் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்துள்ளதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

அதே சமயத்தில், இந்த ஆண்டு நிலையான இயக்க நடைமுறைப்படுத்தலில் காட்டிய அலட்சியமே அதிக உயிரிழப்புகள் ஏற்பட காரணம் என நம்பப்படுகிறது. அரசு தரப்பில் இதை மறுத்தாலும் ஆஷா பணியாளர்கள் அரசு தரப்பிலிருந்து தங்களுக்கு போதிய ஒத்துழைப்பில்லை என கூறுகிறார்கள். போதிய அளவு உப்பு – சர்க்கரை கரைசல் பாக்கெட்டுகள் வழங்கப்படவில்லை என்றும் நோய் வேகமாக பரவிய பின்பே, அது பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபடும்படி அரசு தரப்பில் ஆணை வந்ததாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
திங்கள்கிழமை தன்னுடை நான்கு வயது மகனை மருத்துவமனையில் அனுமதித்திருக்கும் சஞ்சய் ராம், “இந்த நோய் பரவாமல் தடுக்க எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து எங்களுக்கு அறிவிக்கப்படவில்லை” என்கிறார். வேளாண் கூலித் தொழிலாளியாக உள்ள இவர், தனது மகனின் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனக் கவலை கொள்கிறார். தனது வீட்டின் அருகே உள்ள மருத்துவமனையில் போதிய வசதி இல்லாத நிலையில், செலவு பிடிக்கும் தூரத்தில் உள்ள இந்த மருத்துவமனையில் மகனை சேர்த்துள்ளதாக தெரிவிக்கிறார் இவர்.
கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இந்தக் காலக்கட்டத்தில் நோய்த்தாக்குதல் இருந்து வரும் நிலையில், அதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதையும் மத்திய – மாநில அரசுகள் செய்யவில்லை. இதோ இந்த ஆண்டு அதன் விளைவாக நூறைக் கடந்து பலிகளின் எண்ணிக்கை சென்று கொண்டிருக்கிறது.
இத்தனை குழந்தைகளின் உயிரிழப்பில் தனக்குரிய மிகப் பெரும் பங்கை மறைக்கும்விதமாக இழந்த குழந்தைகளின் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிதி உதவி அறிவித்திருக்கிறார் நிதிஷ் குமார். ஏகபோகமாக அரியணை ஏறியிருக்கும் மோடி அரசு அதைக்கூட செய்யவில்லை. வழக்கம்போல ஏழை வீட்டு மரணங்கள் நாட்டின் பிரதமரை உலுக்கவில்லை.
செய்திக் கட்டுரை : உமேஷ் குமார் ராய்
அனிதா
நன்றி : தி வயர்