மிழக கிராமங்கள் சமீப காலமாக சாதிய கிராமங்களாக மாறிவருகின்றன. தமிழகத்தில் ஆதிக்கசாதி இந்துக்களின் ஆதிக்கம் மிகுந்த கோவை, மதுரை போன்ற மாவட்டங்களில் பொதுவான பணிகளுக்கு தலித்துகள் பணியமர்த்தப்படும்போது, ஆதிக்க சாதிகள் அதை சாதிய வன்மத்துடன் எதிர்க்கின்றன.

கடந்த ஆண்டு கோவை அருகே ஒரு கிராமத்தில் ஆதிக்க சாதியினர் தலித் பெண் ஒருவர், பள்ளி சமையலராக பணியாற்றக்கூடாது எனப் போராட்டம் நடத்தினார்கள். அண்மையில், மதுரையில் அத்தகையதொரு சம்பவம் நடந்துள்ளது.

pappal-facing-untouchability-in-government-schoo
கடந்த 2018 -ம் ஆண்டு கோவை அருகே திருமலைக்கவுண்டன் பளையத்தில், சத்துனவு சமையலர் பாப்பம்மாள் சமைத்த உணவை ‘எங்கள் பிள்ளைகள் உண்பதா?’ என சாதிய வன்மம் கக்கினர் ஆதிக்க சாதி வெறியர்கள்.

மதுரை அருகே உள்ள வலையப்பட்டி கிராம அங்கன்வாடியில் சமையலராக பணி நியமனம் பெற்றருக்கிறார் எம். அன்னலட்சுமி. அடுத்த நாளே, அருகே உள்ள கிராமமான கிழவனேரிக்கு பணி மாறுதல் வழங்கியிருக்கிறது மாவட்ட நிர்வாகம்.

வலையப்பட்டி கிராம ஆதிக்க சாதியினர், தலித் பெண் சமைத்த உணவை அவர்களுடைய வீட்டுக் குழந்தைகள் உண்ண மாட்டார்கள் என மாவட்ட ஒருங்கிணைந்த ஊட்டச் சத்து அலுவலகத்தில் சென்று மிரட்டியிருக்கிறார்கள். அதோடு, தலித் வீடுகளின் மீது தாக்குதலையும் நடத்தியிருக்கிறார்கள். அதற்கு பயந்த நிர்வாகம், அடுத்த நாளே அன்னலட்சுமிக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டிருக்கிறது.

அதுபோல், எம். ஜோதி லட்சுமி என்ற மற்றொரு தலித் பெண்ணை மதிப்பனூருக்கு மாற்றியிருக்கிறார்கள். இவர் அதே வலையப்பட்டி கிராமத்தில் அங்கன்வாடி பணியாளராக நியமனம் பெற்றவர். இவர்கள் இருவரும் அங்கன்வாடி மையத்தில் பணியாற்றுவதேகூட, உணவை அசுத்தமாக்கிவிடும் என சனாதன இந்துத்துவ விசத்தை கக்கியுள்ளனர்.

சாதி இந்துக்களின் மிரட்டல் மாவட்ட நிர்வாகம் வரை சென்றுவிட்ட நிலையில், பணியாளர்கள் இருவரும் தனியாக வீட்டிற்குப் போவதற்குக்கூட அஞ்சுகின்றனர்.

ஜூன் 3-ம் தேதி பணி ஆணை வழங்கப்பட்ட நிலையில், ஜூன் 8-ம் தேதி தலித் காலனிக்குள் சென்று ஆதிக்க சாதியினர் வன்முறை வெறியாட்டம் நடத்தியுள்ளனர். தலித் வீடுகளை அடித்து நொறுக்கியதோடு, அவர்களுடைய வாகனங்கள், ஆடு – மாடுகளை தாக்கியுள்ளனர். சில நபர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

படிக்க:
♦ பாப்பாள் அம்மாளின் சத்துணவு சமையலில் பல்லியாம் ! சாதிவெறியர்கள் சதி தொடர்கிறது !
♦ அரசியலமைப்பை புறக்கணிக்கும் தேசியக் கல்விக் கொள்கை – 2019 !

அதன்பின்பே, ஆதிக்க சாதிகளின் வன்முறையை அடக்க முடியாத மாவட்ட நிர்வாகம், பாதிக்கப்பட்ட இரு அங்கன்வாடி பணியாளர்களுக்கு பணி மாறுதல் வழங்கியிருக்கிறது. “என் சொந்த ஊருல என்னால வேலை பார்க்க முடியலைங்கிறதுதான் எனக்கு பெரிய வருத்தமா இருக்கு” என்கிறார் அன்னலட்சுமி.

ஜூன் 4-ம் தேதி பணிக்கு செல்ல முனைந்திருக்கிறார் ஜோதி. “நான் அலுவலகத்துக்குச் சென்று என்னுடைய மருத்துவ அறிக்கை கொடுத்துவிட்டு, வேலைக்கு போகலாம் என இருந்தேன். அப்போது, அலுவலர் ஊரில் இருந்த ஆண், பெண் என பலர் இங்கே வந்து நாங்கள் அங்கே வேலை செய்யக்கூடாது என போராடியதாகச் சொன்னார். தலித்துகள் சமைத்த உணவை நாங்கள் தொடவே மாட்டோம் என அவர்கள் சொல்லியிருக்கின்றனர்” என்கிறார் ஜோதி.

அங்கன்வாடி ஊழியர்கள் அன்னலட்சுமி – ஜோதி லட்சுமி (வலது)

கடந்த ஏப்ரல் மாதம் உள்ளூரில் உள்ள முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் ஆதிக்க சாதியினர் தலித்துகள் கோயிலில் வழிபாடு நடத்த அனுமதி மறுத்துள்ளனர். அப்போதிலிருந்து இரு பிரிவினருக்கும் பிரச்சினை மையம் கொண்டதாக இவர்கள் இருவரும் தெரிவிக்கின்றனர். “கோயில் முன் எங்களை தேங்காய்கூட உடைக்க விடல” என்கிறார் அன்னலட்சுமி.

“ஜல்லிக்கட்டுக்குப் பிறகு இந்தத் திருவிழா நடக்கும். அப்போது தேர்தல் நடந்த சமயத்தில் வந்ததால் திருவிழாவுக்கு அனுமதி கொடுக்கவில்லை. ஆதிக்க சாதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஜல்லிக்கட்டு மறுக்கப்பட்டதால் தலித்துகள் கொண்டாட்டமாக இருப்பதாக கதை கட்டிவிட்டனர். உடனே, ரேஷன் கடை போன்ற பொதுவான இடங்களுக்கு தலித்துகள் போவதை தடுக்க ஆரம்பித்தனர். எங்கள் சாதியைச் சேர்ந்த மூத்தவர்களுக்குக்கூட பணிகளை வழங்க மறுத்துவிட்டனர்” என விவரித்தார் அன்னலட்சுமி.

இந்தப் பின்னணியில் ஆதிக்க சாதிகளின் சாதிவெறிக்கு இந்த இரு பெண்கள் பலியாகியுள்ளனர். “18 வயதிலிருந்து இந்தப் பணிக்கு முயற்சிக்கிறேன். குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பமாக இருந்தது” என்கிறார் ஜோதி.

படிக்க:
♦ தயவு செய்து தற்கொலை செய்து கொள் ! சுகிர்தராணி
♦ பொன்பரப்பி வன்கொடுமை : முகநூல் கண்டனக் குரல் !

ஜூன் 8-ம் தேதி ஆதிக்கசாதியினர் தலித் குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்திய சிலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், போலீசு கைதுக்கு பயந்து பெரும்பாலான ஆதிக்க சாதியினர் ஓடி ஒளிந்துகொண்டுள்ளனர். இதனால் ஊரே வெறிச்சோடிக்கிடக்கிறது. பெண்கள் மட்டுமே வீடுகளில் உள்ளனர். இந்த இரு அங்கன்வாடி பணியாளர்களின் பணி மாறுதல் கேட்டதை ஒப்புக்கொள்கிற அவர்கள், தாங்களும் தலித்துகளும் அம்மா – பிள்ளை உறவாக இருந்தாலுமே கூட, அவர்கள் சமைப்பதை தங்களுடைய குழந்தைகள் உண்ண மாட்டார்கள் என உறுதியாக சொல்கின்றனர்.

இந்த சம்பவம் ஊடகங்களில் வெளியாகி கண்டனங்களை கிளப்பிய பின், மாவட்ட நிர்வாகம் பணி மாறுதலை ரத்து செய்து, மீண்டும் வலையப்பட்டியிலேயே ஜோதி, அன்னலட்சுமி இருவரையும் பணி வழங்கியிருக்கின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை பணியைத் தொடங்கியுள்ளனர் இவர்கள் இருவரும். ஆனால், அங்கன்வாடி மையத்துக்கு வந்த 10 குழந்தைகளும் தலித் குடியிருப்புகளிலிருந்தே வந்துள்ளனர். சாதி இந்துக்களின் குழந்தைகள் எவரும் வரவில்லை. அதோடு, அங்கன்வாடி மையத்தில் சமையல் நடக்காமல், தலித் காலனியில் உள்ள சாவடியில் சமைத்துப் போட்டுள்ளனர். அங்கன்வாடி மையத்தில் உள்ள சமையல்கூடம் பயன்படுத்தும்படியாக இல்லை என்கிற காரணத்தை ‘பெருமை’யோடு சொல்லியுள்ளது மாவட்ட நிர்வாகம்.

இந்துத்துவ சக்திகள் இந்தியா முழுவதும் ஆதிக்கம் பெற்று வரும் வேளையில் தமிழகத்தில் மீண்டும் சாதிவெறி ஆழமாக வேர்விட்டுக் கிளம்பி வருகிறது. சாதிய விஷ விருட்சத்தை அடியோடு வெட்டி வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் தமிழகம் இருக்கிறது.


கலைமதி
நன்றி : தி இந்து

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க