ந்தியாவில் பள்ளி செல்லும் பருவத்திலுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 22 கோடியாகும். இதில் 12 கோடி குழந்தைகளால் மட்டுமே கல்விக்கூடம் செல்ல முடிகிறது. இந்த 12 கோடி குழந்தைகளிலும் பள்ளிப் படிப்பை முழுவதுமாகப் படித்து முடிப்பவர்களின் எண்ணிக்கை 3 கோடிக்கும் குறைவாகும்.

பள்ளி முடிப்பவர்களின் எண்ணிக்கை மொத்த மாணவர்களில் சுமார் 20 சதவிகிதமாகும். இதுதான் இந்தியா கல்வியில் சாதித்துள்ள மகத்தான சாதனையாகும்.

1951-ல் இந்தியா குடியரசான பிற்பாடு இருந்த தொடக்கப் பள்ளிகளின் எண்ணிக்கை சுமார் 2,10,000. 2005-ல் தற்போதுள்ள தொடக்கப் பள்ளிகளின் எண்ணிக்கை சுமார் 5, 81,000. அறியாமை இருள் விலக்கி ஜனத்தொகை வளர்ச்சிக்கேற்ப, பொருளாதார, கலாச்சார வளர்ச்சிக்கேற்ப கல்விக் கூடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருக்குமானால் குறைந்தபட்சம் 20 லட்சம் தொடக்கப் பள்ளிகளாவது இந்தியாவில் தற்போது இருந்திருக்க வேண்டும்.

ராணுவச் செலவுக்கு தன்னுடைய பட்ஜெட்டில் 30 சதவிகிதத்திற்கு மேல் பணம் ஒதுக்கி தாராளமாகச் செலவு செய்யும் நமது அரசாங்கம் எதிர்காலத் தலைமுறையைப் பட்டை தீட்டும் கல்விக்கூடங்களுக்கு மட்டும் கஞ்சத்தனமாக 3.4 சதவிகிதத்தைத் தான் ஒதுக்குகிறது.

ஆகவே கல்வி என்பது ஏழைகளைப் பொறுத்த அளவில் எட்டாக்கனியாகவே நாளுக்கு நாள் விலகிச் சென்று கொண்டிருக்கிறது.

கல்விக்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு 3.4 சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதமாக வேண்டும் என்றும், மாநில அரசின் கல்விக்கான நிதி ஒதுக்கீடு 21 சதவிகிதத்திலிருந்து 30 சதவிகிதமாக உயர வேண்டும் என்றும் தொடர்ந்து கல்வியாளர்கள் வற்புறுத்தி வருகின்றனர். ஆனால் இக்கோரிக்கைகள் கிடப்பில் உள்ளன.

இந்தியாவில் தனிப்பட்ட வி.வி.ஐ.பி.க்களையும், வி.ஐ.பி.க்களையும் பாதுகாக்க அரசாங்கம் ஒதுக்கி வரும் நிதி கூட ஒட்டுமொத்தக் கல்விக்காக ஒதுக்கும் நிதியைக் காட்டிலும் அதிகம்!

இழுத்து மூடப்பட்டு வரும் அரசுப் பள்ளிக்கூடங்கள், புற்றீசல்கள் போல் பெருகிவரும் தனியார் பள்ளிகள் என தமிழகக் கல்விச் சூழல் கதிகலங்கிக் கொண்டிருக்கிறதே?

ஆம்! தமிழகக் கல்விச் சூழலைப் பொறுத்தவரை அது மிகவும் கதி கலங்கிக் கிடக்கிறது. நாளுக்கு நாள் அரசாங்கப் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டு வருகின்றன. இதற்குப் பிரதான காரணம் ஆசிரியர்கள் பற்றாக்குறைதான். தமிழகத்தில் ஐந்தாம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளிகள் 37,000 உள்ளன. எட்டாம் வகுப்பு வரையிலான நடுநிலைப் பள்ளிகள் 6,200 உள்ளன. இவற்றிற்குத் தேவைப்படும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 1,93,000. இதில் நிரப்பப்படாத காலியிடங்கள் சுமார் 70,000. தொடர்ந்து பல ஆண்டுகளாக இப்படி காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாததால் கல்விச் சூழல் மிகவும் சீர்கேடடைந்துள்ளது.

தமிழகத்தில் 3,200 தொடக்கப் பள்ளிகளுக்குத் தலைமை ஆசிரியர்களே இல்லாத நிலை தொடர்ந்துகொண்டிருக்கிறது. பள்ளிக் கூடங்கள் என்றால் உடற்பயிற்சிக் கல்வி, விளையாட்டு என்பது மிக அவசியம். ஆனால் 6,200 நடுநிலைப் பள்ளிகளில் உடற்பயிற்சி ஆசிரியர்களையே நியமிக்கவில்லை தமிழக அரசு.

இப்படியாகப் பள்ளிக்கூடத்தை வழிநடத்தும் தலைமை ஆசிரியர், மற்றும் தேவையான ஆசிரியர்கள் இல்லாத நிலையில் அப்பள்ளிகள் எவ்வாறு சிறப்பாகச் செயல்பட முடியும்? ….

….. 2002-ம் ஆண்டு வரை மூன்று ஆசிரியர்களைக் கொண்டு செயல்பட்ட பள்ளிகளை ஈராசிரியர் பள்ளிகளாக மாற்றியது தமிழக அரசு. இவ்விதம் ஆசிரியர்கள் குறைக்கப்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கை 18,000. நடைமுறையில் இந்த ஈராசிரியர்களில் ஒருவர் நிர்வாக நடைமுறைகளைக் கவனித்துக்கொள்ளும் அலுவல்களையே பார்க்க வேண்டியுள்ளதால் இந்தப் பதினெட்டாயிரம் பள்ளிகளும் ஏறத்தாழ ஓராசிரியர் பள்ளிகளாகவே தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதுதான் யதார்த்தமான நிலவரம். (நூலிலிருந்து பக்கம் 4,5)

தமிழகத்தில் இன்னும் ஏழை எளிய மாணவர்கள் சுமார் 70 லட்சம் பேர் அரசாங்கக் கல்விக்கூடங்களில்தான் கல்வி பயின்று வருகின்றனர். எத்தனையோ விதமான தனியார் பள்ளிகள் இருந்தும் அதில் சேரக்கூடிய வசதி வாய்ப்புகள் இல்லாததினாலேயே பெரும்பாலான மாணவர்கள் அரசு பள்ளிக் கூடங்களில் படித்து வருகின்றனர்.

படிக்க:
அரசியலமைப்பை புறக்கணிக்கும் தேசியக் கல்விக் கொள்கை – 2019 !
♦ நூல் அறிமுகம் : தமிழக ஆறுகளில் மணல் கொள்ளை

குறிப்பாக நகர்ப்புற மாணவர்களில் 20 சதவிகிதம் பேர் குழந்தைத் தொழிலாளர்களாக அவ்வப்போது வேலைக்குச் செல்லக்கூடியவர்களாக உள்ளனர். பீடி சுற்றுதல், பூட் பாலீஸ் போடுதல், பேப்பர் போடுதல், மெக்கானிக் ஷாப்புகளில் வேலை செய்தல், டீக்கடைகள், ஹோட்டல்களில் வேலை செய்தல் அல்லது தந்தை செய்யும் தொழில்களில் உதவுதல், விவசாய வேலைகள் செய்தல், ஆடு, மாடு மேய்த்தல் போன்ற பல வேலைகளை இம்மாணவர்கள் செய்கின்றனர். அரசாங்கப் பள்ளிகளில் கல்வி ஒழுங்காகக் கிடைக்காத சூழ்நிலை தொடரும்போது இம்மாணவர்களில் கணிசமானோர் பள்ளிக்கூடங்களை விட்டு நின்றுவிடுகின்றனர். முழுநேரக் குழந்தைத் தொழிலாளர்களாகி விடுகின்றனர்.

தமிழக அரசு தரும் புள்ளி விபரப்படியே சுமார் 16 சதவிகித மாணவர்கள் ஐந்தாம் வகுப்பு படித்து முடிப்பதற்குள்ளாகவே பள்ளிக் கல்வியைப் பாதியிலேயே விட்டுவிடுகின்றனர். ஐந்து முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களில் சுமார் ஐம்பது சதவிகிதத்திற்கு மேற்பட்டோர் பள்ளிப் படிப்பைத் தொடர முடியாமல் இடையிலேயே நின்றுவிடுகின்றனர். (நூலிலிருந்து … பக்கம் 6)

மாணவர்களுக்கான பாடத்திட்டங்களை உருவாக்குவதில் சமூகப் பிரக்ஞையுள்ள ஆசிரியர்களின் பங்களிப்பு போதுமான அளவில் இல்லை. பெரும்பாலான ஆசிரியர்களிடையே இது குறித்த விழிப்புணர்வே இல்லாமல் உள்ளது.

கற்பித்தல் என்ற வகையிலும் மாணவர்களை மனப்பாடம் செய்து எழுத வைக்கும் இயந்திர ரீதியிலான திறமைசாலிகளாக உருவாக்குவதில்தான் ஆசிரியர்கள் சிரத்தை எடுத்துக் கொள்கின்றனரேயன்றி மாணவர்களை உயிர்ப்புள்ள, சமூக அனுபவங்களோடு தொடர்புடைய கல்வியைப் பயிலுபவர்களாக உருவாக்குவதில் பெரும்பாலான ஆசிரியர்கள் ஆர்வம் காட்டுவதில்லை.

அமெரிக்கா போன்ற, மிகவும் வளர்ச்சியடைந்த நாடுகளில் கூட மாணவர்களின் முழுப் படிப்புச் செலவுகளையும் அரசாங்கமே கவனித்துக்கொள்கிறது. அமெரிக்காவில் மிகப் பெரும்பாலானவர்கள் அரசாங்கப் பள்ளிக்கூடங்களில்தான் படிக்கின்றனர். தனியார் பள்ளிகள் என்பதே மிகக் குறைவாகத்தான் அமெரிக்காவில் உள்ளது. ‘இளந் தலைமுறையினருக்கு முறையான கல்வி பெறச் செலவழிக்கும் பணம் என்பது நாட்டின் வருங்கால முன்னேற்றத்திற்கான முதலீடேயன்றி வேறல்ல’ என்ற கருத்து முதலாளித்துவ நாடான அமெரிக்காவிற்கு உள்ளது. இதனால்தான் அமெரிக்காவில் பள்ளிக் கல்வியை முடித்தவர்களில் 76 சதவிகிதத்தினர் உயர் கல்வி வாய்ப்பைப் பெற்றுவிடுகின்றனர். ஜப்பானில் 87 சதவிகிதத்தினரான மாணவர்களுக்கு உயர் கல்வி வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் இந்தியாவிலோ இது இன்னும் ஏழு சதவிகிதத்தைக் கூட தாண்ட முடியவில்லை. (நூலிலிருந்து… பக்கம் 8)

நூல் : கல்வித் துறை அவலங்கள்
ஆசிரியர் : சாவித்திரி கண்ணன்
முதற்பதிப்பு :  ஏப்ரல் 2005

வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
எண்:7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
தொலைபேசி எண்: 044 – 24332424, 24332924.
மின்னஞ்சல்: thamizhbooks@.com

பக்கங்கள்: 32
விலை: ரூ 5.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க