ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராகப் பேசினால் கைது ! குட்கா புகழ் விழுப்புரம் எஸ்.பி ஜெயக்குமாரின் புது சட்டம் !
தமிழகமே ஹைட்ரோ கார்பன் என்ற அழிவுத்திட்டத்திற்கு எதிராகப் போராடுகிறது, போராடிக்கொண்டு இருக்கிறது. “ஹைட்ரோ கார்பன் திட்டம் சரியானது, அது தேவையானது” என்று அரசு பேசும் போது, “ஹைட்ரோ கார்பன் திட்டம் தவறானது” என்று பேசுவதற்கு உரிமை இருக்கிறதா? என்றால் “உரிமை இல்லை” என்கிறது போலீசு.
தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிதான் நிலவுகிறது. ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக போராடுகின்ற ஏன் பேசுகின்ற அனைவரையும் போலீசு அடக்குகிறது.

விழுப்புரத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த 3 பேர் ஹைட்ரோகார்பன் திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புக்களை விளக்கும் பிரசுரங்களை கொடுத்துக்கொண்டு இருக்கும்போது, போலீசு ‘விசாரிக்க வேண்டும்’ என்று விழுப்புரம் தாலுகா போலீசு நிலையத்திற்கு வலுக்கட்டாயமாக கொண்டு போய் ஒரு நாள் முழுவதும் சட்டவிரோதக் காவலில் வைத்திருந்தனர். இது பற்றி டி.எஸ்.பி திருமாலிடம் பேசினால் அவரோ நான் எதுவும் செய்ய முடியாது, எல்லாம் மேலிடத்து உத்தரவு என்றார்.
முதல் தகவல் அறிக்கையில் போலீசு குறிப்பிட்டுள்ளபடி,
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
“மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினார்களாம், அவர்களை போலீசு விசாரித்ததாம், மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்தவர்கள் கைகளில் கருங்கற்களை வைத்திருந்தார்களாம், பேருந்து கண்ணாடிகளையும் மின்விளக்குகளையும் உடைப்பதற்காக சதி செய்து கொண்டிருந்தார்களாம். பொதுமக்களின் அமைதிக்கும் உயிருக்கும் கேடு விளைவிப்பதோடு அரசுக்கு எதிராக சதி செய்து சட்டம் ஒழுங்கு பிரச்சினையை சீர் குலைத்துவிடுவார்கள் என்ற நியாயமான காரணத்தாலும் ரிமாண்ட் செய்தார்களாம்.”
குட்கா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயக்குமார்தான் தற்போது விழுப்புரம் எஸ்.பி. ஹைட்ரோ கார்பன் மட்டுமல்ல, டாஸ்மாக் எதிர்ப்பு மற்றும் பல்வேறு மக்கள் பிரச்சினையை யார் பேசினாலும்; போஸ்டர் ஒடினால் கூட, ரிமாண்ட்தான் செய்கிறார்.

மக்களுக்கு ஆதரவாகவும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகவும் நோட்டீசு கொடுத்தவர்கள் கைது செய்யப்பட்டு 4 நாட்கள் கழித்து கடலூர் மத்திய சிறையிலிருந்து பிணையில் வந்திருக்கிறார்கள். நீதிமன்றத்தில் தினமும் கையெழுத்து போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். குட்கா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயக்குமாரோ விழுப்புரம் எஸ்.பி-யாகிவிட்டார்.
பிரசுரம் கொடுத்தது தவறா? அணுக்கழிவு – ஹைட்ரோகார்பன் – எட்டுவழிச்சாலை என தமிழகத்தை அழிவுத்திட்டங்களால் நாசமாக்காதே என்று பேசக்கூட உரிமை இல்லை என்கிறார் குட்கா கேஸ் அக்கியூஸ்டு எஸ்.பி. ஜெயக்குமார்.
விழுப்புரத்தில் எந்த அமைப்பிற்கும் மக்கள் பிரச்சினையைப் பேச அனுமதி இல்லை. அனைத்து அமைப்புக்களும் இந்த ஜனநாயக விரோதத்துக்கெதிராக, ஒருங்கிணைந்த போராட்டங்களை முன்னெடுக்க வேண்டுமென்பதே தற்போதைய தேவையாக உள்ளது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு.
தொடர்புக்கு : 99623 66321.