தமிழகத்தில் விழுப்புரம் தொடங்கி டெல்டா மாவட்டம் வரை பேரழிவை ஏற்படுத்த காத்திருக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக, பிரச்சாரம் செய்த மக்கள் அதிகாரம் தோழர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் வந்திருகிறார்கள்.
இளம் தோழரான மதுரைவீரனிடம் கைது குறித்து கேட்டபோது, “கடந்த 09.06 2019 ஞாயிறு 11 மணியளவில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் மக்கள் அதிகாரம் தோழர்கள் மணிமேகலை, தொல்காப்பியன், ஞானஒளி மற்றும் திலீபன் ஆகியோர் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தோம்.

அப்பொழுது என்பீல்டு பைக்கில் வந்த ஏட்டு ஒருவர் என்னையும் தோழர் திலீபனையும் கூப்பிட்டார். வழக்கமாக நோட்டீசு கேட்பதற்காகத்தான் கூப்பிடுகிறார் என்று அருகில் சென்றதும், உங்கள் இருவரையும் ஐயா கூப்பிட்டார் என்றார். தோழர் திலீபன் பிரச்சாரம்தானே செய்கிறோம் எதற்காக கூப்பிடுகிறார் என்றார்.
“ஒன்னுமில்லை… உங்ககிட்ட ஏதோ பேசணும் என்று சொன்னார்.”
“நாங்கள் எப்போதுமே இங்கதான் பிரச்சாரம் பண்றோம்.. இப்ப மட்டும் என்ன புதுசா கூப்பிடுறீங்க?” எனக்கேட்டதும் “எது சம்பந்தமா பிரச்சாரம் பண்றீங்க?” என்றார்.
“ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிரா”
“நீங்க மட்டும் ஏன் தனியா பண்றீங்க, எவ்வளவு பேர் அமைப்பில் இருக்கிறார்கள்..” என்று கேட்டுக்கொண்டிருக்கும்போதே ஸ்பெசல் பிராஞ்ச் மற்றும் இன்னொரு போலீசு தோழர் தொல்காப்பியனை அழைத்து வந்தனர். பல கேள்விகளுக்கு பிறகு அங்கேயே அட்ரஸை வாங்கியவுடன் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் நோட்டீஸை பெற்றுக் கொண்டு “சரி வாங்க போகலாம்” என்றார்.
தாலுக்கா காவல்நிலையம் சென்றதும் இன்ஸ்பெக்டர் ராஜன் “நோட்டீஸ் எதுவும் கொடுக்கக்கூடாது என்று மேலிடத்துல இருந்து சொல்லியிருக்காங்க. கேஸ் போட சொன்னாங்க. வேணும்னா இந்த ஒருமுறை உங்களுக்காக நான் பேசிப் பார்க்கிறேன்” என்று ‘அக்கறையோடு’ சொன்னார்.
படிக்க:
♦ ஹைட்ரோகார்பனுக்கு எதிராக பேசினாலே சிறை ! குட்கா புகழ் எஸ்.பி ஜெயக்குமாரின் அடாவடி !
♦ சிவப்புச் சட்டை!
கொஞ்ச நேரம் கழித்து எஸ்.ஐ கேஸ் போட சொன்னார். ரைட்டர் எங்களிடம் அட்ரஸ் கேட்டு சிஎஸ்ஆர் காப்பியில் பதிவு செய்து கொண்டிருந்தார். ஆனால் எந்த பிரிவில் வழக்கு போடுவது என்று தெரியாமல் இழுத்தடித்துக் கொண்டிருந்தனர். இதற்கு மூன்று மணி நேரம் ஆகிவிட்டது. மதிய உணவு நேரம் என்பதால் சாப்பாட்டை நம்மிடம் வாங்கிக்கச் சொன்னார்கள்.
வழக்கமா நீங்கதானே வாங்கிக் கொடுப்பீர்கள் என்று கேட்டதும்… காசு எதுவும் இல்ல. நீங்க உண்டியல் வச்சிருந்தீங்களே அது எங்க என்று கேட்டார்கள். பிறகு நாங்களே தோழர்களிடம் சொல்லி வாங்கி சாப்பிட்டோம்.
இவர்கள் ஒரு பொய்க் கதையை யோசித்து எழுதி முடிப்பதற்கு மாலை 5:30 மணி ஆகிவிட்டது. எங்கள் மீது வழக்கு போட என்ன காரணம் என்று சொல்லவில்லை. மேஜையில் இருந்த எஃப்.ஐ.ஆர் காப்பியை படித்ததும் அதனை பிடுங்கிக் கொண்டார்கள். எந்த பிரிவில் வழக்கு போட்டிருக்கிறார்கள் என்பதை மட்டும் காட்டினார்கள். ஒருவழியாக காவல்நிலையத்தில் இருந்து மருத்துவமனைக்கு சென்று மெடிக்கல் சர்டிஃபிகேட் எடுத்துக்கொண்டு நீதிபதியிடம் செல்வதற்கு மாலை 6:30 மணி ஆகிவிட்டது.
நீதிபதி கேட்டார். உங்கள் மீது போடப்பட்டிருக்கும் வழக்கு என்னவென்று தெரியுமா?
“தெரியாதுங்க”
போலிசை ஏற இறங்க பார்த்துவிட்டு… எஃப்.ஐ.ஆர் காபியை படித்தார்.
“புதிய பேருந்து நிலையத்தில் மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினார்கள், அவர்களை விசாரிக்கையில், மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்தவர்கள் கைகளில் கருங்கற்களை வைத்துக்கொண்டு, பேருந்து கண்ணாடிகளையும், மின்விளக்குகளையும் உடைப்பதற்காக சதி செய்து கொண்டிருந்தார்களாம். பொதுமக்களின் அமைதிக்கும் உயிருக்கும் கேடு விளைவிப்பதோடு அரசுக்கு எதிராக சதி செய்து சட்டம் ஒழுங்கு பிரச்சினையை சீர் குலைத்துவிடுவார்கள்…” என்று எழுதியதை நீதிபதி படித்துக்காட்டினார்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
உடனே போலிசை ஏறிட்டு… என்ன கதை இது. சினிமா ஸ்கிரிப்ட் எழுதி வச்சிருக்கிங்க. மின்கம்பத்தை அடிக்க போனார்கள், கல்லை எடுத்தார்கள்னு… வேற கதையே உங்களுக்கு கிடைக்கலையா? என்று கேட்டுவிட்டு…
இந்த நோக்கத்தில் தான் இருந்தார்கள் என்று உங்களுக்கு எப்படி தெரியும்? நீங்க என்ன ஜோசியக்காரர்களா? அவர்கள் மூளைக்குள் புகுந்து இதைத்தான் செய்ய நினைத்தார்கள் என்று எழுதுவதற்கு….. பொது இடம் தானே cctv camera இருக்கும் இல்லையா… அதில் நீங்கள் சொன்னதெல்லாம் பதிவாகி இருக்கிறதா? சரி பொதுமக்களை அச்சுறுத்தும்படி நடந்து கொண்டதாக தானே சொல்கிறீர்கள். பொதுமக்களிடம் வாக்குமூலம் வாங்கினீர்களா? என்று கேட்டார்.
போலீஸ்காரர்கள் எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக நின்றுகொண்டிருந்தார்கள். எஃப்.ஐ.ஆர் காப்பியில் மதுரைவீரன் வயது 21 என்று குறிப்பிட்டு இருந்ததை பார்த்து போலீஸை நோக்கி கேட்டார்.
“மதுரைவீரன்.. இவருக்கான வயது சர்டிபிகேட் இருக்கிறதா” என்றார்.
“இல்லை” என்றது போலிசு.
22 வயதிற்குள் இருப்பவர்கள் மேல் கேசு போடும்போது ஏஜ் சர்டிஃபிகேட் வைக்கணும்னு தெரியாதா? பி.காம் முடித்துள்ள இந்த மாணவன் மேல் வழக்கு போட்டிருக்கிறீர்கள். சமூகத்தைப் பாதுகாக்கும் போலீஸ் இப்படி இருந்தால் எப்படி சமூகம் முன்னேறும்?” என்று ஆவேசமாக திட்டினார்.
போலீஸ் வாயைத் திறக்கவில்லை. கடுப்பான நீதிபதி, “இதனை இன்வெஸ்டிகேசன் என்றுதான் குறிப்பிட்டுள்ளேன். கேசு ட்ரையலுக்கு வரும்போது ஆதாரம் காட்ட வேண்டும். அப்ப வச்சிக்கிறேன் உங்களுக்கு..” என்று கோவமாக சொன்னார்.
தோழர் மதுரைவீரன் “ ஐயா…பொய்க் கேஸ் என்று நீங்களே சொல்லிவிட்டீர்கள். இவர்கள் கேசு போட்டு விட்டார்கள். என் வாழ்க்கை என்ன ஆவது? பொய்க் கேசு போட்ட இவர்கள் மீது என்ன நடவடிக்கை” என்றார்.
நீதிபதி சொன்னார். “மக்கள் போலீசை எதிர்த்துப் பேசுவதில்லை, எதற்கு தொல்லை என்று கடந்து சென்று விடுகின்றனர். இந்த வழக்கில் இன்வெஸ்டிகேஷன் என்று குறிப்பிட்டுள்ளேன். டிரையலுக்கு வந்தால் நான் பார்த்துக் கொள்வேன். அப்போது நான் பேசமாட்டேன் என் பேனா தான் பேசும்” என்று சொல்லிவிட்டு எங்களுக்கு ரிமாண்ட் ஆர்டர் கொடுத்தார்.
படிக்க:
♦ பேராசிரியர் சாய்பாபாவை வதைக்கும் சிறை நிர்வாகம் !
♦ செய்யாறு டாஸ்மாக் கடை உடைப்பு: தோழர்கள் மக்கள் போர்க்கோலம்
அங்கிருந்து விழுப்புரம் பெரும்பாக்கம் சிறைக்கு அழைத்துச் சென்றனர். ஜெயில் முன்பே சென்று நாங்கள் முழக்கம் போட்டதும் ஜெயிலர் வந்து பார்த்துவிட்டு “தீவிரவாதியை உள்ளே வைத்துக் கொள்ள மாட்டோம்” என்று சொல்லிக் கொண்டே ஓடி விட்டார். எங்களைக் கூட்டி வந்த எஸ்கார்ட் போலிசு “இவர்கள் ரொம்ப நல்லவர்கள்தான். எடுத்துக் கொள்ளுங்கள்” என்றனர். ஆனால் அதனை ஜெயிலர் ஏற்றுக் கொள்ளாமல் திரும்பிவிட்டார். அங்கிருந்து கிளம்பி காவல்நிலையத்துக்கே அழைத்து வந்தனர். எங்களை அழைத்து வந்த போலிசு “என்னோட தங்கச்சிக்கு மஞ்சள் நீராட்டு இருக்கு. அதுக்கு வேற போவணும்” என்று புலம்பினார்.
காவல் நிலையத்தில் எங்களை விட்டுவிட்டு நீதிபதியிடம் சென்று கடலூர் சிறைக்கு மாற்றி ஆர்டர் வாங்கி வந்தனர். இன்ஸ்பெக்டர் ராஜன் ஜீப்பைக் கொடுத்தார். ஜீப்புன்னா டீசல் போடணும். கையில காசு இல்ல. அதனால பஸுல போயிடலாம் என்று இரண்டு எஸ்கார்ட் போலீசு பேசிக்கொண்டிருந்தனர். இறுதியாக ஜீப்பில் கூட்டிச் சென்றனர். கடலூர் மத்திய சிறையை அடைந்தபொழுது இரவு 10:30.
ஜெயிலர், “உங்கள சோதனை பண்ணனும் சட்டையை கழட்டுங்கள்” என்றார்.
“முடியாது. நாங்கள் கிரிமினல் குற்றவாளி கிடையாது. அரசியல் கைதி”.
“டேய்..! கழட்டுடா” என்றார்.
மரியாதையாக பேசுங்கள். எங்களால் கழட்ட முடியாது என்றதும்… “இவர்களை வெளியே அனுப்பு” என்றார் ஜெயிலர்.
எஸ்கார்ட் போலீஸ் ரொம்பவும் பாவமான முகத்துடன், “தயவு செஞ்சி கழட்டுங்க..” என்று கெஞ்சினர். நாங்கள் முடியாது என்று கறாராக மறுத்து விட்டோம்.
ஜெயிலர் சொன்னார். “வைகோ, திருமுருகன் காந்தி எல்லோரும் கழட்டுறாங்க நீங்க கழட்ட முடியாதா? சிறைக்குன்னு விதிகள் இருக்கு. இங்க முதல்வரே வந்தாலும் கழட்டித்தான் ஆகணும்..” என்றார் ஜெயிலர்.
எஸ்கார்டு போலிசு எங்களிடம் “நீங்க எதையும் கழட்ட வேண்டாம் லுங்கியை மாற்றிக்கொண்டு, பேண்ட்டை மட்டும் கொடுங்க. அதில் ஏதாவது இருக்கிறதா? இல்லையா? என்று நாங்கள் சோதனை செய்து கொள்கிறோம்.” என்றனர்.
முடியவே முடியாது என்று, ஜெயிலர் சொன்னார். “சிறைக்கென்று மேனுவல் உண்டு” என்றார். அரசமைப்புச் சட்டப்படி எல்லாம் ஒன்றுதான். எந்த மேனுவலாக இருந்தாலும் சட்டத்திற்குட்பட்டதுதான் என்றதும் கடுப்பாகினார் ஜெயிலர்.
கொஞ்ச நேரம் கழித்து எஸ்கார்ட் போலீசு அவர்களுடைய போனில் எங்களை வீடியோ எடுத்தனர். எடுத்த வீடியோவை டி.எஸ்.பி -க்கு அனுப்பி விட்டு பேசினார். சிறைத்துறையும் அவர்களுடைய மேலதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். எஸ்கார்டு போலீஸ் கோபப்பட்டு “நாங்க ஏதாவது தப்பு செய்தோமா… ஏன் இப்படி பண்றீங்க… வேற யாராவது என்றால் நடப்பதே வேறு” என்றார்கள். பின்பு அவர்களாகவே “நீங்க சுட்டாலும் பரவாயில்லை என்ற முடிவோடு வந்து இருக்கீங்க. நாங்க அப்படி இல்ல. போய் பொண்டாட்டி புள்ளைய பார்க்கணும்” என்று நம்மிடம் சோகமான முகத்துடன் சொன்னார்கள்.
கொஞ்ச நேரம் கழித்து.. “இவங்க சட்டைய கழட்ட மாட்டாங்க. ஒரு ஓரமா நீ ஒரு 3 மணிநேரம் தூங்கு. நான் ஒரு 3 மணி நேரம் தூங்குறேன். காலையில வரைக்கும் இப்படியேதான் போயிட்டு இருக்கும்” என்று முடிவெடுத்து விட்டனர் எஸ்கார்ட் போலீசு இருவரும்.
ஒரு கட்டத்தில் எப்படியோ மேலதிகாரிகள் மூலம் ஜெயிலரிடம் பேசிவிட்டு, மேல் ஆடையோடு செக் செய்துவிட்டு வர சொன்னார்கள். “இங்க யாராவது பெண்களா இருக்காங்க, உங்களுக்கு கூச்சமாக இருந்தால் கூட ரூமுக்கு சென்று காட்டுங்கள்..” என்று சொன்னார்கள்.
அப்போதும் நாங்கள் “முடியாது” என்றோம்.
சிவில் உடையில் எங்கிருந்தோ வரவழைக்கப்பட்ட இரண்டு போலீஸ் வந்தது. ஒவ்வொரு தோழராக வரச் சொன்னார்கள். தோழர் திலீபனிடம் சட்டையை கழட்டச் சொல்லி மிரட்டினார்கள். தோழர் திலீபன், முடியாது என்றதும் கம்ப்யூட்டர் அறைக்கு அழைத்துச் சென்று சிங்கம் சூர்யா பட பாணியில் டேபிளை தட்டிவிட்டு கழட்ட முடியுமா முடியாதா என்று அதட்டினர். அந்த சத்தத்தில் 10 போலீசு உள்ளே வந்து விட்டனர். தோழர் திலீபன் முடியாது என்று மறுக்கவே….தோழரின் கை-கால்களை ஆளுக்கொரு போலிசு பிடித்துக் கொண்டு சட்டையை கழட்டிவிட்டு பார்த்து உள்ளே அனுப்பினர்.
படிக்க:
♦ கோயிலுக்குள் நுழைந்த தலித் சிறுவனை கொதிக்கும் வெயிலில் தள்ளிய சாதிவெறி !
♦ புதிய கல்விக் கொள்கையை நிராகரிப்போம் ! ஜூன் – 20 தமிழகம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் !
மதுரைவீரன் தோழரோ “சசிகலா – ஜெயலலிதா எல்லாம் சிறைக்குப் போனார்கள் அவர்களை எல்லாம் இப்படித்தான் நடத்தினீர்களா? என்று கேட்டதும் எல்லோருக்கும் ஒரே விதிதான். அந்த வீடியோவ காட்டினாத்தான் நம்புவியா என்று எகத்தாளமாக கேட்டுவிட்டு கைகளை பிடித்துக்கொண்டு சட்டையை கழட்டியது போலிசு. நீங்கள் செய்வது “மனித உரிமை மீறல்” என்றதும்….. எதுவாக இருந்தாலும் நீதிபதிகிட்ட சொல்லிக்கோ என்று சொல்லிவிட்டு சட்டையை கழட்டியது.
“இவர்களை எல்லாம் இப்படி பண்ணத்தான் முடியும். அத விட்டுவிட்டு பிடித்து உருவிக் கொண்டு இருக்கிறீர்களா” என்று சிவில் உடையில் வந்த போலிசு தனது அதிகாரத் திமிரை வெளிப்படுத்தியது. இறுதியாக சோதனை முடிந்த பிறகு அட்மிஷன் போட்டு எங்கள் மூன்று பேரின் சட்டையைக் கொடுத்து அனுப்பினர். அப்பொழுது மணி 1:30-ஐ தாண்டியது.
மக்கள் அதிகாரம் டி-ஷர்ட்டை போடுவதற்கு முனைந்த போது அதற்கு அனுமதி மறுத்து விட்டார்கள். கேட்டதற்கு “உங்களுக்கு எதிரி யாராவது இருப்பார்கள். அவர்களிடம் இருந்து உங்களைப் பாதுகாக்கத்தான்” என்றார்கள்.
மூவரையும் தனி அறையில் போட்டு விட்டனர். அடுத்தநாள் காலையில் தலைமை ஜெயிலர், “நீங்கதான் ஆடையை கழட்டுவதற்கு அடம்பிடிச்சிங்களா? அனைத்தையும் கேள்விப்பட்டேன். மனதுக்கு கஷ்டமாக இருந்தது. நாங்களும் உங்களைப் போன்ற மனிதர்கள்தான். பல போராட்டம் படிக்கும் காலத்தில் நானும் செய்திருக்கிறேன். கொஞ்சம் ஒத்துழைப்பு கொடுங்கள். அப்போதுதான் வெற்றி பெற முடியும்” என்றார். மூன்றாவது நாள் பெயில் கிடைத்து வெளியில் வரும் பொழுது எங்களை ஒரு பார்வையுடன் பார்த்தார்.
எங்கள் அனுபவமாக, அதிகாரவர்க்கம் தலைக்கனத்துடன் இருக்கிறார்கள். ஜெயிலுக்கு வருபவர்கள் அனைவரும் அக்யூஸ்ட் என்று அவர்கள் கருதுகிறார்கள். அமைப்பு பெயரை சொன்னால்தான் மரியாதை கொடுக்கிறார்கள். அமைப்பாக இருப்பதன் மூலம்தான் உரிய மரியாதை கிடைக்கிறது. நாம் அவர்களின் அதிகாரத்தைக் கேள்வி கேட்க முடிகிறது.
தகவல் :
மக்கள் அதிகாரம்,
விழுப்புரம்.