
இங்கிலாந்தில் வாழும் இந்திய ராப் பாடகரான ‘ஹார்ட் கவுர்’ பஞ்சாபி, தமிழ் உள்பட பல இந்திய மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார். உத்தர பிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஆகியோரை முகநூலில் விமர்சித்து எழுதியதற்காக இவர் மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது.
உ.பி. வாரணாசியைச் சேர்ந்த வழக்கறிஞரும் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினருமான சஷான்க் சேகர் என்பவர் கவுர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் புகார் அளித்ததன் பேரில் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது போலீசு.
தேசத்துரோக வழக்கு, இரண்டு பிரிவினரிடையே மதரீதியாக பகைமையை ஊக்குவித்தல், அவதூறு செய்தல், தூண்டும் நோக்கத்தில் செயல்படுதல் மற்றும் தகவல் தொழிற்நுட்பப் பிரிவுகளின் கீழ் கவுர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கவுர் தனது முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஆதித்யநாத்தின் படத்தைப் போட்டு, “இந்த நபர் சூப்பர் ஹீரோ எனில், இவருடைய பெயரை ‘ரேப்மேன் யோகி’ என மாற்றவேண்டும்” என்றும் “இவர் தேசிய ஹீரோ எனில், நான் இவரை காவி ரேப் மேன் என அழைப்பேன்” என்று அந்தப் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளார்.
மோகன் பகவத்தின் படத்தைப் பகிர்ந்து, இந்த நபர்தான் மும்பை தாக்குதல், புல்வாமா தாக்குதல் உள்பட இந்தியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குக் காரணம் எனவும் இந்தியாவில் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்குக் காரணம் எனவும் எழுதியுள்ளார். காந்தியின் படுகொலைக்குப் பிறகு சர்தார் பட்டேலால் ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டதையும், இந்திய வரலாற்றில் பார்ப்பனிய சாதி அமைப்பை எதிர்த்து புத்தரும் மகாவீரரும் போராடினார்கள் என்றும் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார். “நீங்கள் தேசியவாதி அல்ல, இனவெறி பிடித்த கொலைகாரர்” எனவும் கடுமையாக சாடியுள்ளார்.
படிக்க:
♦ ஜெயமோகன் : மாவு புளிச்சிடுச்சு ! ஃபேஸ்புக் பொங்கிடுச்சு !
♦ ஆர்.எஸ்.எஸ். கூறும் இந்து ராஷ்டிரத்தின் இறுதி நோக்கம்தான் என்ன ?
ராப் பாடகர் கவுர், மும்பை தாக்குதல் கொல்லப்பட்ட தீவிரவாத தடுப்புப் பிரிவு அதிகாரி ஹேமந்த் கார்கரே, இந்துத்துவ பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட கவுரி லங்கேஷ் ஆகியோரின் மரணத்துக்கு நீதி கேட்டும் தனது சமூக ஊடகப் பதிவுகளில் எழுதியுள்ளார். பார்ப்பனிய சாதி ஒடுக்குமுறைகள் குறித்து நிறையவே எழுதியிருக்கிறார்.
கவுரின் மேற்கண்ட பதிவுகளால் ‘மனம் நொந்த’ சேகர் அவர் மீது புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு தொடுத்துள்ள போலீசு விசாரணை செய்து வருகிறது.
கடந்த காலங்களில் தொடரப்பட்ட தேசவிரோத வழக்குகள், நீதிமன்றங்களில் காணாமல் போனாலும் அந்தப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்வது அரசுகளின் மிரட்டல் பாணியாகவே தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அனிதா
செய்தி ஆதாரம்: தி வயர்.