அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 3 | பாகம் – 02

புதியவற்றை அறியும் மகிழ்ச்சி எப்படிப் பிறக்கிறது?

ன் வகுப்புக் குழந்தைகளுக்கு நடனமாடப் பிடிக்கும். சில சமயம் இடைவேளைகளின் போது அவர்களே கிராமபோனைப் போடுவார்கள். எனவே, இவர்களுக்கு நடனமாடப் பிடிக்குமெனத் தெரிகிறது. மோட்சார்ட், ஷோ பேன், சய்கோவ்ஸ்கி, பா லியஷ்வீலி ஆகிய பெரும் இசைக் கலைஞர்களின் படைப்புகளை நான் தேர்ந்தெடுத்தேன். இசைக்கேற்ப நடனமாடும் போது ராகத்தைக் கேட்க வேண்டும். இதில் எம்மாதிரியான உணர்வுகள் பிரதிபலிக்கின்றன என்று புரிந்து கொள்ள முயல வேண்டும், இவற்றைத் தம் அசைவுகளில் வெளிப்படுத்த வேண்டும் என்று விளக்க முற்பட்டேன்.

இப்போது சய்கோவ்ஸ்கியின் “பழைய பிரெஞ்சுப் பாடல்” ஒலிக்கிறது. குழந்தைகள் தம்மிடங்களிலிருந்து எழுந்து நடனமாட வசதியான இடத்தைத் தேடி வந்தனர். பல சிறுமிகள் நேர்த்தியாக நடனமாடுகிறார்கள், சில சிறுவர்கள் இந்த நடனத்தை ஒரு விளையாட்டாக மாற்றினர் – ஒருவருடன் ஒருவர் மோதிய படி அவர்கள் குதிக்கின்றனர். மாரிக்கா மட்டும் தனியே நின்று கொண்டிருக்கிறாள். சாஷாவும் தேன்கோவும் பெஞ்சில் உட்கார்ந்திருக்கின்றனர். என்னருகே வந்து, மற்றவர்கள் நடனமாடுவதைப் பார்க்கும்படி அவர்களுக்குச் சொல்கிறேன். மெதுவாக நாங்கள் பேசிக் கொள்கிறோம்.

“மாயாவைப் பாருங்கள்…. அவள் எவ்வளவு அழகாக நடனமாடுகிறாள், எவ்வளவு மென்மையாகக் கரங்களை அசைக்கின்றாள்!” என்கிறேன் நான். “சரி, யாருடைய நடனம் உங்களுக்குப் பிடித்துள்ளது?”

“யாருடைய நடனமும் எனக்குப் பிடிக்கவில்லை!” என்கிறான் சாஷா.

“ஏல்லா சிரிப்பு வரும்படி நடனமாடுவது எனக்குப் பிடித்துள்ளது. அவள் எப்படிச் சுற்றுகிறாள் பார்த்தாயா!”

“கோத்தே நடனமாடுவது உங்களுக்குப் பிடிக்கவில்லையா?”

சரி, இது என்ன? போன்தோ சிறுமிகளின் கால்களை வாரி விட்டுக் கொண்டிருக்கிறானே, அவர்கள் அவனைப் பிடித்துத் தள்ளுகின்றனர். “போ, தொந்தரவு செய்யாதே!” என்று கூறியபடியே தொடர்ந்து நடனமாடுகின்றனர். ஆனால் போன்தோ நிற்கவில்லை. போன்தோ காலை வாரியதைக் கவனிக்காத மாயா கீழே விழுந்தாள்.

“சிறுவர்களே, நீங்கள் போய் மாயாவிற்கு எழுந்திருக்க உதவுங்கள். போன்தோவை இங்கே அழைத்து வாருங்கள்.”

ஆனால் போன்தோ அவர்கள் சொல்வதைக் கேட்கவில்லை. நானே தலையிட வேண்டி வந்தது. போன்தோ பயந்தபடியே என்னைப் பார்க்கிறான். அவனுக்கு என்ன ஆயிற்று என்றே புரியவில்லை. “போன்தோ, உனக்கு நடனமாட விருப்பமில்லையா?”

“இருக்கிறதே!”

“பின், ஏன் சிறுமிகளின் கால்களை வாரி விடுகிறாய்?” என் குரலில் அச்சுறுத்தும் தொனியே தென்படாவிட்டாலும் போன்தோ கவலைப்பட்டான்.

“அவளே தான் கீழே விழுந்தாள்.” நான் என்ன செய்வது? பொய்யை அம்பலப்படுத்துவதா? சாஷா அவன் மீது பாயவே தயாராயிருக்கிறான்.

“சாஷா, சற்று பொறு. ஒருவேளை அவன் தெரியாமல் செய்திருக்கலாம்.”

பின் நான் அவனை என்னை நோக்கி இழுக்கிறேன். அவனோ முரண்டு பிடிக்கிறான். நான் குனிந்து அவன் காதில் மெதுவாகச் சொல்கிறேன்:

“சிறுமிகளுக்குத் தொந்தரவு செய்ய உனக்கு விருப்பமில்லை என்பதை நான் நம்புகிறேன். சரி, நீ போய் நடனமாடு. நாங்கள் பார்ப்போம்.”

போன்தோ அவர்களுடன் சென்று கலந்து, ஒழுங்காக நடந்து கொண்டான். இதனிடையே மாரிக்கா என் காலருகே உட்கார்ந்தாள், சாஷாவும் என்னுடன் ஒட்டிக் கொண்டான். நாங்கள் நால்வருமாக சேர்ந்து நடன மாடுபவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இசை ஒலிக்கிறது, குழந்தைகள் நடனமாடுகின்றனர். இந்த 20 நாட்களில் இவர்கள் உண்மையிலேயே வளர்ந்து விட்டார்களா, அல்லது எனக்குத்தான் இப்படித் தோன்றுகிறதா? இல்லை , இவர்கள் இன்னமும் தம் வயதைக் கடக்கவில்லை.

“நேராக உட்காருங்கள்! கைகளைப் பின்னால் கட்டுங்கள்! அசையாதீர்கள்! நான் சொல்வதைக் கேளுங்கள்!” போன்ற வழக்கமான முறைகளில் பாடங்கள் நடத்தினால் குழந்தைகள் உடனேயே சலிப்படைவார்கள், கொட்டாவி விடுவார்கள். முழுக்க முழுக்கத் தூய்மையான போதனை முறையின்படி இவர்களுக்கு கண்டிப்பாக, கருத்தாழமுள்ள வேலைகளைத் தந்தால் விரைவிலேயே குழந்தைகளுக்குப் படிப்பில் சலிப்பேற்படும்.

பாடவேளைகளில் என்ன செய்ய வேண்டுமென விரும்புகின்றார்கள் என்றெல்லாம் குழந்தைகளிடமே அடிக்கடி கேட்பது நன்றாயிருக்கும். அல்லது, பாடம் துவங்கும் முன்னரே, எப்படி பாடத்தை நடத்துவது என்று குழந்தைகளிடம் கேட்டால் நல்லதோ!

பரிசோதனைக்காக இப்படிப்பட்ட பாடங்களைச் “சொல்லிப் புரிய வைக்கும்” கோட்பாட்டின்படி நடத்த நான் முயன்றேன். இவற்றில் குழந்தைகள் என்னிடமிருந்து விலகிப் போனதாக எனக்குப்பட்டது. இத்தகைய பாட வேளைகளின் போது சலிப்பாக இருந்தது, ஏதோ நான் விசாரணை நடத்துவது போன்றும் அவர்களை ஏதோ முக்கியமான ரகசியத்தைச் சொல்லுமாறு கட்டாயப்படுத்துவது போன்றும் அவர்கள் என்னை நம்பாதது போலும் எனக்குப்பட்டது. அவர்கள் கரங்களை உயர்த்தினார்கள், என் கேள்விகளுக்குப் பதில் சொன்னார்கள். இவற்றில் மகிழ்ச்சியும் உற்சாகமும் இருக்கவில்லை. “கரங்களை உயர்த்துங்கள்! எல்லோரும்!… எல்லோரும் யோசியுங்கள்!” என்று அடிக்கடிச் சொல்லும்படி நேரிட்டது. இதே கடமைகள் சிக்கலானவையாக மாறின. இப்பாடங்களில் என்ன மாற்றம் நடந்தது. எனது உறவுமுறை மாறியது: நான் அதிகாரபூர்வமானவனாக, பிழைபடாதவனாக, கண்டிப்பானவனாக, தெரிந்தவற்றையெல்லாம் சொல்லும்படி குழந்தைகளைக் கட்டாயப்படுத்துபவனாக நான் மாறினேன். அவர்களது அறிவைப் பதிவு செய்பவனாக நான் மாறினேன். அனேகமாக இது குழந்தைகளுக்குப் பிடிக்கவில்லை போலும். பாட முடிவில் சாஷா (இவன் என்னை ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டேயிருந்தான்) என்னை அணுகிக் கேட்டான்:

படிக்க:
இந்தி : இந்தியாவை ஒன்றுபடுத்துமா ? பிளவுபடுத்துமா ?
கோயிலுக்குள் நுழைந்த தலித் சிறுவனை கொதிக்கும் வெயிலில் தள்ளிய சாதிவெறி !

“ஏன் இன்று நீங்கள் எல்லா பாடவேளைகளிலும் சோர்வாயிருந்தீர்கள்? உங்களுக்கு உடல்நிலை சரியில்லையா?”

“உனக்குப் பாடங்கள் பிடிக்கவில்லையா?” என்று நான் கேட்டேன்.

“இல்லை !” என்றான் சிறுவன். “நாங்கள் ஒரு முறை கூட சிரிக்கவில்லை“ என்று கூடச் சேர்ந்து கொண்டான் இலிக்கோ.

திடீரென எனக்குப் பட்டது: பாடம் எப்படியிருந்தது, எனக்கு அவர்களால் என்ன சொல்ல முடியும், பாடவேளைகளில் என்ன செய்ய வேண்டுமென விரும்புகின்றார்கள் என்றெல்லாம் குழந்தைகளிடமே அடிக்கடி கேட்பது நன்றாயிருக்கும். அல்லது, பாடம் துவங்கும் முன்னரே, எப்படி பாடத்தை நடத்துவது என்று குழந்தைகளிடம் கேட்டால் நல்லதோ! “குழந்தைகளே, நன்றி. எனது ஆசிரியர் திறமையை மேம்படுத்தும் ஆசிரியர்களாக உங்களைப் பார்ப்பது தற்செயல் அல்ல!” இத்தகைய பரிசோதனைகளை இனி மேற்கொள்வதில்லை, கூட்டான மகிழ்ச்சியைத் தராதபடி பாடங்களை நடத்துவதில்லையென முடிவு செய்தேன். பின்வருமாறு எனக்கு நானே முடிவு செய்து கொண்டேன்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க