“பெரும்பான்மை மக்களின் கல்வி உரிமையை மறுக்கும், புதிய கல்விக் கொள்கை – 2019-ஐ நிராகரிப்போம் !” என்கிற தலைப்பில் பு.மா.இ.மு. தலைமையில் ம.க.இ.க. உள்ளிட்ட தோழமை அமைப்புகளின் பங்கேற்புடன் மதுரை கோரிப்பாளையம், பள்ளிவாசல் தெரு பகுதியில், கடந்த 21.06.2019, வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மதுரை பகுதி பு.மா.இ.மு. தோழர் ரவி தலைமை தாங்கினார். அவர் பேசுகையில் “அரசுப் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் இவையெல்லாம் மூடப்படும் அபாயம் தற்போது நமது கண்முன்னே உள்ளது. இந்த கல்விக்கொள்கை அம்பானி, பிர்லா மற்றும் கார்ப்பரேட்டுகள் நலனுக்கானது. பல தேசிய இனங்களின் மொழி, கலாச்சாரம், பண்பாடு இவற்றை அழித்து ஒரே மொழி, கலாச்சாரம், பண்பாடு கொண்ட இந்து, இந்தி, இந்தியா என்ற இந்துத்துவ சித்தாந்தத்தை இந்த கல்விக்கொள்கையின் மூலமாக திணிக்கத் தீவிரமாக முயற்சி செய்கிறது RSS, BJP கும்பல். நீட் தேர்வு மூலமாக காசிருந்தால்தான் மருத்துவர் ஆக முடியும் என்ற நிலையை உருவாக்கிவிட்டார்கள். விளைவு மாணவி அனிதா தொடங்கி தொடர்ச்சியான தற்கொலைகள். இந்த வருடம் நான்கு மாணவிகள் அப்படி இறந்துள்ளார்கள். அதே போன்ற நிலையை ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை கொண்டு வருவதே இந்த புதிய கல்விக் கொள்கையின் நோக்கம். இந்த அபாயகரமான திட்டத்தை ஜல்லிக்கட்டு போராட்டம் போல மக்கள் ஒன்று சேர்ந்துதான் முறியடிக்க முடியும்” என பேசி முடித்தார்.

அடுத்ததாக, ஓய்வு பெற்ற பேராசிரியர் ராஜமாணிக்கம் பொன்னையா அவர்கள் பேசியபோது “புதிய கல்விக்கொள்கை என்பது இந்திய அரசு அமைத்த மூன்றாவது கல்விக்கொள்கை. முதலில் ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த மெக்காலே கல்விக் கொள்கை. இந்த கல்விக் கொள்கையின் நோக்கம் ஆங்கிலேய ஆட்சிக்கு தேவையான அடிமைகளை உருவாக்குவதே. பின் 1966-ல் கோத்தாரி கமிசன் அடிப்படையில் கல்விக்கொள்கை கொண்டு வரப்பட்டது. இந்த கல்விக் கொள்கை கல்வி நிலையங்களை அதிகரிக்க வேண்டும்; மாணவர்கள் அனைவரும் படிக்க வேண்டும் என்றது; கல்வி தேசியமயமானது. இந்த காலகட்டத்தில் பல பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. அதே சமயம் சுயசார்பான பொருளாதார கொள்கை இந்திய அரசால் பின்பற்றப்பட்டது.
ஆனால் இருபது ஆண்டுகளுக்கு முன் உலகமயமாக்கல் பொருளாதார கொள்கையாக அமல்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மாவட்டந்தோறும் நவோதயா பள்ளிகளைக் கொண்டு வர மத்திய அரசு முயற்சித்தது. தமிழகத்தில் உள்ளே விடவில்லை. நவோதயா பள்ளிகள் அடிப்படையிலேயே சமமற்ற கல்வியை வழங்கியது. உலகமயமாக்கல் காலத்தில் கஸ்தூரி ரங்கன் அறிக்கை மூலமாக புதிய உலகக் கட்டமைப்பை உருவாக்க முயற்சிக்கிறார்கள். நவீன தாராளமயத்தில் உற்பத்தி பற்றி கவலையில்லை. இந்தியாவை நுகர்வு இந்தியாவாக மாற்ற ஏதுவான கல்விக் கட்டமைப்பை தந்துவிட்டு உயர்கல்வியை வணிகமயமாக்குவதுதான் திட்டம். இந்த கல்வித் துறையை கலைத்து விட்டு மத்திய கல்வி கமிசன் அமைத்து கல்லூரிக் கல்வியை சிதறடிக்கிறார்கள். மிகப்பெரிய பாகுபாடுடையதாக கல்வியை மாற்றுகிறார்கள். இந்தியை திணிப்பது முதல் பழங்கதைகளையும், புராணங்களையும் கொண்டு வருகிறார்கள். 3 வயதிலிருந்தே தொழில் கல்வியை கொண்டு வருகிறார்கள். +2 முடித்து தேசிய தகுதித் தேர்வை கொண்டு வருகிறார்கள். வேதகால சமுதாயத்தை தாராளமயத்திற்கு ஏற்ப புதிய கல்விக் கொள்கையில் கொண்டு வருகிறார்கள். இதை தடுத்து நிறுத்திட வேண்டும்” என பேசி முடித்தார்.

அடுத்ததாக தோழர் கதிரவன், மாநில செயற்குழு உறுப்பினர், ம.க.இ.க. அவர்கள் பேசியதாவது, “1986 – களில் புதிய கல்விக்கொள்கை, புதிய மருந்துக்கொள்கை புதிய ஜவுளிக்கொள்கை ஆகியவற்றை எதிர்த்து அரசியல் மாநாடு நடத்தினோம். டங்கல் திட்டத்தில் கையெழுத்துப்போட இந்தியாவை ஏகாதிபத்தியங்கள் அழுத்திக் கொண்டிருந்த காலகட்டம் அது. இன்று உலக வங்கி உலகை கிராமமாக ஆக்கிவிட்டது. நவீன smart city அமைக்கிறார்கள். இது காசுள்ளவர்களுக்கான நகரம். இதுபோல இந்தக் கல்விக்கொள்கை காசு இருப்பவன் மட்டுமே படிக்க முடியும். என் மொழியை அழிக்க வருகிறது செத்துப்போன சமஸ்கிருதம். ஆட்சி அலங்காரத்திற்கு கொண்டு வரப்பார்க்கிறார்கள். கல்வி உரிமையை பறிக்கும் இந்தத் திட்டம் ஆபத்தானது. இத்திட்டத்தை முறியடிப்போம்” என பேசி முடித்தார்.

தோழர் சிநேகா, பு.மா.இ.மு. அவர்கள் பேசியபோது, “கல்வி நிறுவனங்கள் இப்போதே கட்டணக் கொள்ளையடிக்கிறார்கள். இந்தாண்டு இதுவரை பள்ளிகளுக்கு கட்டணத்தை நிர்ணயிக்காமல் கட்டணக் கொள்ளையை வேடிக்கை பார்க்கிறது அரசு. புதிய கல்விக் கொள்கையின் ஷரத்து 334, இட ஒதுக்கீடு அவசியம் இல்லை என்கிறது. டாஸ்மாக்கிற்கு இலக்கு வைத்து விற்பனை செய்யும் அரசு, சாதாரண மக்கள் படிக்கக்கூடிய அரசுப்பள்ளிகளை தரம் உயர்த்தாமல் இழுத்து மூடப்பார்க்கிறது. இந்த புதிய கல்விக் கொள்கையை முறியடித்தே ஆக வேண்டும்” எனப் பேசி முடித்தார்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் அ.சீனிவாசன், (ஓய்வு), அவர்கள் பேசியதாவது ‘‘1975-க்கு பின்னால் மாநில ஆட்சிக்கு உட்பட்டிருந்த கல்வி மத்திய பட்டியலுக்குக் கொண்டுவரப்பட்டது. இதில் மாநிலம் தலையிட முடியாததாக ஆகியது. இன்று இந்த புதிய கல்விக் கொள்கைக்கான வரைவுத் திட்டத்தை இந்தி ஆங்கிலம் தவிர பிற மொழிகளில் தரவில்லை. பன்நெடுங்காலமாக இருந்து வந்த கருத்துக்களைத்தான் கொள்கையாக முன்வைக்கிறார்கள். சமஸ்கிருத, இதிகாச, புராணக் கல்வியை கொண்டு வருகிறார்கள். சுயநிதி கல்லூரிகள், பள்ளிகள் எம்.ஜி.ஆரால் கொண்டு வரப்பட்டன. இன்று கல்வியே முழுவதுமாக வணிகமயமாகிறது இதை அனைவரும் சேர்ந்து எதிர்த்து நின்று முறியடிக்க வேண்டும்” என பேசினார்.
தோழர் ஆசை, செக்கானூரணி, பகுதி ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம் அவர்கள் பேசியதாவது, ‘‘489 பக்க வரைவு அறிக்கையில், நம் பிள்ளைகள் முட்டாள்கள் என்றும் 5,8 -வது படித்த பின் வீட்டு வேலை செய்யவும், தொழிற்சாலைகளில் அடிமை வேலைகளில் ஈடுபடவும்தான் இலாயக்கு என்கிறார்கள். வேதகால கல்விமுறை எப்படி இருந்தது. உயர் சாதியினருக்கு இரண்டு வகையான கல்வி இருந்தது. அது சத்ரியர்களுக்கு சண்டை போடும் கல்வி. வைசிய கல்வி வணிக பிரிவினருக்கு. அடிமைகளுக்கு, உழைத்து வாழ்ந்தவர்களுக்கு கல்வி கொடுக்கப்படவில்லை. இதையேதான் புதிய கல்விக்கொள்கையும் கொண்டு வரப்போகிறது. இந்திய அரசியல் சாசனத்தில் சொன்ன விசயங்களை குழி தோண்டிப் புதைத்து விட்டார்கள். இனி பெரும்பான்மையான மக்களுக்கு கல்வியை மறுப்பதே கல்விக் கொள்கை. இதை மக்கள் ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும்.’’ என பேசினார்.
படிக்க:
♦ புதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 ! புதிய கலாச்சாரம் நூல் !
♦ தமிழில் தேசியக் கல்விக் கொள்கை 2019 – பிடிஎஃப் டவுண்லோடு
இறுதியாக நன்றியுரை நிகழ்த்திய நெல்லைப் பகுதி பு.மா.இ.மு. தோழர் சிவா, ‘‘நீதிமன்றங்கள் மூலமாக இந்த கல்விக்கொள்கையை இரத்து செய்ய முடியாது. ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் போன்ற மக்கள் போராட்டங்களின் மூலமாகத்தான் முறியடிக்க முடியும்.’’ என பேசி நிறைவு செய்தார்.

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.