’புதிய இந்தியா’விலும் மீண்டுமொரு கும்பல் வன்முறை அரங்கேறியுள்ளது. 24 வயதான முசுலீம் இளைஞர் இந்துத்துவ வெறியேற்றப்பட்ட கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்.
பிரதமர் மோடி ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த அதே நாளில், தப்ரேஸ் அன்சாரி என்ற முசுலீம் இளைஞர் கும்பல் தாக்குதலுக்கு ஆளானார்.
ஈத் பெருநாளுக்காக வெளியூரில் பணியாற்றும் அன்சாரி, செராய்கேலா கார்சவான் என்ற தனது சொந்த கிராமத்துக்கு வந்திருக்கிறார். அவர் மீது பைக்கை திருடியதாக திருட்டு குற்றச்சாட்டு சொன்ன கும்பல், அதை காரணமாக வைத்து அவரை கடுமையாக தாக்கியுள்ளது.

அன்சாரியை ஒரு மின்கம்பத்தில் கட்டி வைத்திருக்கும் கும்பல், அவரிடம் உன் பெயர் என்ன என்று கேட்கிறது. “சோனு” என்கிறார் அவர்.
‘உண்மையான பெயரைச் சொல்லு’ என்கிறது கும்பல். பயந்துபோனவர் ‘தப்ரேஸ்’ என்கிறார். உடனே கும்பல் ‘ஜெய்ஸ்ரீ ராம்’ என முழங்குகிறது. உடனே, அன்சாரியை அனைவரும் கடுமையாக தாக்கத் தொடங்குகின்றனர். அன்சாரியை ‘ஜெய்ஸ்ரீ ராம்’, ‘ஜெய் அனுமான்’ போன்ற முழக்கங்களை எழுப்பச் சொல்லி கட்டாயப்படுத்துகிறது கும்பல். இது வீடியோவாக பதிவாக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது.
கடுமையாக தாக்குதலுக்கு ஆளான பின், அந்த இடத்துக்கு வந்த போலீசு அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. நான்கு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று இறந்துவிட்டார்.
இந்த மரணத்துடன் சேர்த்து, 2016-ம் ஆண்டு முதல் ஜார்க்கண்டில் கும்பலால் அடித்துக்கொல்லப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 13. இறுதியாக ஏப்ரல் 10-ம் தேதி இறந்த எருதின் தோலை உரித்ததற்காக பழங்குடியான பிரகாஷ் லக்ரா கும்பல் தாக்குதலுக்கு ஆளாகி மரணமடைந்தார்.
இந்த 13 பேரில் பெரும்பாலானோர் முசுலீம்கள். மாட்டிறைச்சி உண்டார்கள் அல்லது கால்நடை வர்த்தகம் செய்தார்கள் என்ற வதந்திகள் மூலம் கும்பல் வன்முறைக்கு ஆளானவர்கள் இவர்கள். சிலர் மாடுகளைத் திருடியதாகவும் கொல்லப்பட்டார்கள். 2015-ம் ஆண்டு முதல் உ.பி., இராஜஸ்தான், ஹரியாணா, ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் கும்பல் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் அன்சாரியின் மரணமும் நிகழ்ந்திருக்கிறது. அன்சாரி கும்பல் வன்முறையாளர்களால் தாக்கப்படும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது. இந்த வீடியோ ஆதாரத்தைக் கொண்டு, அன்சாரியின் மனைவி சைஷ்தா பர்வீன், காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள். போலீசு பப்பு மண்டல் என்பவரை கைதுசெய்துள்ளது. 100-க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத நபர்கள் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
படிக்க:
♦ காவிரி ஆணையம் : கர்நாடகாவின் கைத்தடியா ?
♦ இந்து தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக இந்திய அரசு : அமெரிக்கா அறிக்கை !
தலையில் அடிபட்ட நிலையில் தன் கணவருக்கு போதிய சிகிச்சை அளிக்கவில்லை என அன்சாரியின் மனைவி குற்றம்சாட்டியுள்ளார். போலவே, அன்சாரியை தாக்கியவர்களை கைது செய்வதில் தாமதிப்பதாகவும் அன்சாரியின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அன்சாரியின் மரணம் மருத்துவமனையில் நிகழ்ந்தது என போலீசு தரப்பில் சொல்லப்பட்டாலும், உண்மையில் போலீசு காவலில்தான் அவர் இறந்துள்ளார் என செயல்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
திருட்டு குற்றச்சாட்டை தண்டிக்க காவல்துறையும் நீதிமன்றமும் உள்ள நாட்டில், முசுலீம் என்பதற்காக மட்டுமே ஒருவரை அடித்துக்கொல்ல முடியும் என்பது புதிய இந்தியாவின் நடைமுறையாகி இருக்கிறது. இதுவே திருடியவர் இந்துவாக இருந்திருந்தால் கொல்லப்பட்டிருக்க மாட்டார் என்கின்றன கண்டனக் குரல்கள்.
“முன்பொரு நாள் இந்தியா ஜனநாயக நாடாக இருந்தது. இப்போது கும்பல் வன்முறையின் நாடாக மாறியுள்ளது” என்கிறார் சமீபத்தில் முகநூல் பதிவுக்காக உ.பி. அரசால் கைதாகி விடுதலையான பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியா.
Once upon a time India was democratic country but its turning into Mobocratic nation. #JharkhandLynching
— Prashant Kanojia (@PJkanojia) June 24, 2019
“தவறு செய்து விடாதீர்கள், ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்பது ராமனை துதிப்பது மட்டுமல்ல, ஒருவரை கொல்லும் முன் சொல்வது, அல்லது கொல்லப்படும் முன் சொல்வது. ராமர் கோயில் கட்டப்படுமானால், கொலை செய்வதற்கான தூண்டுதலை தருவதுதான் அந்தக் கோயிலின் முதன்மையான நோக்கமாக இருக்கும்” என்கிறார் சுபீர் சின்ஹா.
Make no mistake,"Jai Shree Ram" is not a call to the glory of Ram, it is what you say before you prepare to kill someone, or are forced to say while getting killed. Ram Mandir, if it is built, will be primarily be a temple to this urge to kill. #JharkhandLynching
— Subir Sinha (@PoMoGandhi) June 23, 2019
“கடந்த சில ஆண்டுகளில் கும்பல் வன்முறை வெகுஜனத்தன்மையை அடைந்திருக்கிறது. தேர்தல் பேரணிகளில் காட்டும் வலுவான சர்வாதிகாரத்தை இத்தகைய மனிதாபிமானமற்ற செயல்களை எதிர்ப்பதில் காட்டுமா?” எனக் கேட்கிறார் ரோனாக் காமத்.
The #JharkhandLynching is yet another example of how the mob has become mainstream in the last few years. Does the strong authoritarianism this Government shows at Election rallies translate into combating such inhuman acts? No.
Deeply deeply disturbing.
— Ronak Kamat (@Ronak_Kamat) June 25, 2019
“தப்ரேசுக்கு நடந்தது வெட்கக் கேடானது. மக்கள் எப்படி கொல்ல முடியும்? அவர்களுக்கு யார் அந்த உரிமையை வழங்கியது? கொல்லப்பட்டவரின் குடும்பத்தை இனி யார் காப்பாற்றுவார்கள்? அன்சாரியின் மரணத்துக்கு நீதி வேண்டும்” என்கிறார் இனாயா ஃபரோக்கி.
சமூக ஊடகங்களில் பலர் அன்சாரியின் கொலைக்கு நீதி கேட்கத் தொடங்கியுள்ள நிலையில், பாஜக தலைவர்கள் ‘திருட்டு வழக்கில் எதிர்பாராமல் கொலை நடந்துவிட்டது’ என காரணம் சொல்கிறார். திருட்டு வழக்கில், கும்பல் வன்முறை ஏன் வந்தது, முசுலீம் பெயரைச் சொன்னதும் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என முழங்கச் சொல்லி அடிக்கும் கும்பலின் நோக்கம், திருட்டு தொடர்புடையது மட்டும்தானா? ஜனநாயக அமைப்புகள் செத்துக்கொண்டிருக்கும் நாட்டில், கும்பல் ஆட்சி அரங்கேறிக்கொண்டிருக்கிறது. பாஜக – ஆர்.எஸ்.எஸ். கும்பல் இதில் மறைக்க என்ன இருக்கிறது?
கலைமதி
செய்தி ஆதாரம்: சப்ரங் இந்தியா