சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் ஸ்டெர்லைட் நிர்வாகம் – மீளவிட்டான் மக்கள் ஆட்சியரிடம் புகார் !

மதிப்புடையீர்,

எங்கள் கிராமத்தில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் கிராமத்தில் நாடார், கோனார், பறையர், அருந்ததியர் என அனைத்து சமூக மக்களும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம்.

கடந்த ஆண்டு ஸ்டெர்லைட் ஆலை பாதிப்புகளிலிருந்து விடுபடுவதற்காக ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தொடர் போராட்டம் நடந்தது. எங்கள் கிராமத்திலும் ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி எங்கள் ஊரில் தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அமைதிப் போராட்டம் நடத்தினோம்.

மே-22, 2018-ல் நடந்த இப்போராட்டத்தில் காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டிற்கு அப்பாவி மக்கள் 13 பேர் பலியானார்கள். நிறைய பேர் நிரந்தர ஊனமாகி காணப்படுகின்றனர். அதன் பிறகு தமிழக அரசு அரசாணை பிறப்பித்து அதன் மூலம் ஸ்டெர்லைட் ஆலையை தற்போது வரை மூடியுள்ளது. இந்த நிலைமையில் ஸ்டெர்லைட் நிறுவனம் எங்கள் ஊரில் மரக்கன்று நடுவது, குடிதண்ணீர் விநியோகிப்பது, பள்ளிக் குழந்தைகளுக்கு கல்விக் கடன் கொடுப்பது, மாதா மாதம் சிலர் பெயரில் வங்கியில் பணம் டெபாசிட் செய்வது என்ற பெயரில் எங்கள் ஊரில் பொது அமைதியைக் குலைக்கிறது.

தற்போது அரசாணை மூலமும், நீதிமன்றத் தீர்ப்பாணை மூலமாகவும் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. இதனால் எந்த பிரச்சினையும் இன்றி நாங்கள் அமைதியாக எந்த போராட்டமும் செய்யாமல் அரசு ஆணைக்கு கட்டுப்பட்டு உள்ளோம்.

மக்கள் தூத்துக்குடி ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் அளித்த மனுவின் நகல் :

(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)

ஆனால் எங்கள் ஊரைச் சேர்ந்த ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் சிலர் ஸ்டெர்லைட்டிடமிருந்து முறைகேடாக பணத்தைப் பெற்றுக்கொண்டு ஊரின் பெயரை தவறாக பயன்படுத்தி லாபம் அடைந்து வருகின்றனர். அவர்களால் எங்கள் ஊரில் பொது அமைதி குலைந்து சட்டம் ஒழுங்கு சீர்குலையும் நிலையில் உள்ளது. இது சம்பந்தமாக சம்பத்தப்பட்ட காவல் நிலையங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் – இதற்கு முன்பு பல புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது 18.6.2019-ம் தேதி நாளிதழ்களில் ஸ்டெர்லைட் சார்பில் தூத்துக்குடி பகுதியை சுற்றி சிறுதொழில்களை ஊக்குவிக்கும் விதமாக, கிராம மக்கள் 122 பேருக்கு ரூபாய் 5 லட்சம் மதிப்பில் இஸ்திரி பெட்டி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியதாகவும் செய்திகள் வந்துள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு எங்கள் ஊரைச் சேர்ந்த முத்துராஜ் மற்றும் பழனிக்குமார் உள்ளிட்டோர் தங்களை ஊர்த் தலைவர் என்று அறிவித்துக் கொண்டு அந்த நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்துள்ளனர். இந்தச் செய்தி எங்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

படிக்க :
♦ ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை ! பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லாது ! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு !
♦ ஹைட்ரோ கார்பன் : தமிழகத்தைச் சுடுகாடாக்க மீண்டும் நுழைகிறது வேதாந்தா !

ஏனெனில் எங்கள் கிராமத்தில் மேற்படி இருவரும் கிராமத் தலைவர்கள் கிடையாது. அவர்கள் தங்களைத் தாங்களே கிராமத் தலைவர்கள் என்று அறிவித்துக் கொண்டு ஸ்டெர்லைட்டிடம் இருந்து பணம் பெற்று வருகின்றனர். ஊரில் உள்ள ஒரு சிலருக்கு பணத்தாசை காண்பித்து ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேண்டும் என்று அரசாணைக்கு எதிராக பிரச்சாரம் செய்கிறார்கள்.

இதனால் எங்கள் ஊரில் சட்டம் ஒழுங்கு கெட்டு பொது அமைதி சீர்குலைந்து வருகிறது. எங்கள் கிராமத்தில் நாடார் சமூகத்திற்கு தங்கவேல் நாடார் என்பவரும், கோனார் சமூகத்துக்கு மாடசாமி கோனார் என்பவரும் தலைவர்களாக உள்ளனர். உண்மை இவ்வாறு இருக்க மேற்படி முத்துராஜ் மற்றும் பழனி குமார் தங்களை தலைவர்களாக அறிவித்துக்கொண்டு ஸ்டெர்லைட் நிறுவனம் வழங்கி வரும் முறைகேடான பணத்தையும், பொருட்களையும் பெற்றுக்கொண்டு எங்கள் ஊர் நற்பெயருக்கு களங்கம் விளைவித்து வருகின்றனர். நாங்கள் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து பணம் பெறுவதை பாவம் என்றும், இறந்த 15 பேருக்கு செய்யும் துரோகம் எனவும் கருதுகிறோம்.

எங்கள் ஊர் பொதுமக்கள் முடிவுக்கு விரோதமாகவும், ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகவும் செயல்பட்டுக்கொண்டு ஊரில் குழு மோதல்களை ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கு பிரச்சினையைத் தூண்டிவிடும் ஸ்டெர்லைட் நிர்வாகத்தினர் மீதும், முத்துராஜ் மற்றும் பழனிக்குமார் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவரிடமும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் மனு அளித்துள்ளோம்.

இப்படிக்கு
மீளவிட்டான் கிராம பொதுமக்கள்,
தூத்துக்குடி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க