நாட்டின் ஏதோ ஒரு இடத்தில் காவிக் குண்டர்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கமிடச் சொல்லி முசுலீம்கள் மீது தாக்குதல் நடத்துவது வாடிக்கையாகிவிட்டது. கடந்த வாரம் மேற்கு வங்கத்தின் தலைநகர் கொல்கத்தாவில் ஒரு தாக்குதல் சம்பவம் நடந்துள்ள நிலையில், மீண்டுமொரு தாக்குதல் சம்பவத்தை நடத்தியுள்ளது காவி குண்டர் படை.

வடக்கு தினாஜ்பூர் அருகே, மீன்பிடிக்கச் சென்ற முசுலீம் இளைஞர்களை, கால்நடைகளைத் திருட வந்தவர்கள் எனக்கூறி பாஜக ஆதரவாளர்கள் என்ற போர்வையில் காவி குண்டர்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

தாக்குதல் சம்பவம் குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில், தாக்குதலுக்கு ஆளான ஐந்து இளைஞர்களும் புகார் அளித்துள்ளனர். முகமது முக்தார், தில்பர் உசைன், நவுசாத் அலி, எண்டாப் அலி, அனோர் ஆலம் ஆகியோர் செவ்வாய்கிழமை அருகில் உள்ள கிராமத்தில் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான தில்பர், “நாங்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, சில பாஜக ஆதரவாளர்கள், உள்ளூர் பஞ்சாயத்து உறுப்பினரின் கணவர் தலைமையில் அங்கே வந்தார்கள். அவர்கள் எங்களை அந்தக் கிராமத்தில் கால்நடைகளை திருட வந்தவர்கள் எனக்கூறி, குற்றம்சாட்டினார்கள். நாங்கள் அதை மறுத்தபோது, அடிக்கத் தொடங்கினர். ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என முழக்கமிடவும் கட்டாயப்படுத்தினர். எங்களை விட்டுவிடுங்கள் என்று சொன்னபோது, மீண்டும் எங்களைத் தாக்கத் தொடங்கினர். ஒரு கூட்டம் எங்களை சூழ்ந்துகொண்டு தாக்குதலை அதிகப்படுத்தியது” என்கிறார்.

இளைஞர்கள் தாக்கப்படுவதை அறிந்த அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்களும், திரிணாமூல் கட்சியினரும் அவர்களை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். “அவர்களைப் பார்த்ததும் தாக்கியவர்கள் ஓடிவிட்டனர். போகும்போது சட்டரீதியிலான நடவடிக்கை எடுத்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்தனர்” என்கிறார் தாக்குதலுக்குள்ளான மற்றொரு இளைஞர் முக்தர்.

படிக்க:
கும்பல் வன்முறைக்கு எதிராக சட்டம் இயற்றக்கோரி முசுலீம்கள் போராட்டம் !
♦ ‘ஜெய் ஸ்ரீ ராம்’ சொல்ல மறுத்த சிறுவனைத் தாக்கிய காவி குண்டர்கள் !

தாக்குதலுக்கு ஆளான ஐவரும் இப்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மூவர் உள்ளூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில்; தில்பரும், முக்தரும் மாவட்ட தலைநகரில் உள்ள ராஜ்கஞ்ச் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் சிறுபான்மையினர் அதிகமாக வாழும் சிங்கர்தாகா பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக போலீசு தரப்பு கூறுகிறது.

அண்மையில் நடந்த மக்களவை தேர்தலில் மேற்கு வங்கத்தில் பாஜக 18 இடங்களில் வெற்றி கண்டது. தேர்தல் முடிவுகள் வெளியான சில வாரங்களில் திரிணாமூல் எம்.எல்.ஏ -க்கள், பாஜகவில் இணைந்தனர். பல கவுன்சிலர்களும் பாஜக-வில் இணைந்தனர். மேற்கு வங்கம் காவிமயமாகிவரும் நிலையில், சிறுபான்மையினர் மீதான தாக்குதலை அதிகப்படுத்தி பிரிவினை அரசியல் மூலம் ஆதாயம் தேடப்பார்க்கிறது காவிக் கும்பல்.


கலைமதி
செய்தி ஆதாரம்: டெலிகிராப் இந்தியா. 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க