மகாராஷ்டிர மாநிலத்தின் மராத்வாடா தொடர் வறட்சிகளால் பாதிக்கப்பட்ட பகுதி. தொடர் வறட்சி இந்த பகுதி மக்களின் வாழ்க்கைச் சூழலையும் புரட்டிப் போட்டிருக்கிறது. குடும்பம் குடும்பமாக வசித்தவர்கள் என்பது போய், இப்போது வயதானவர்களும் பலவீனமானவர்கள் குழந்தைகளும் மட்டுமே வசிக்கும் நிலைக்கு மராத்வாடா கிராமங்கள் தள்ளப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் தங்கள் வீட்டு இளையவர்களுக்காக காத்திருக்கிறார்கள்; மழைக்காகவும்தான்!
இந்த 3 நிமிட காணொளியில் வரும் சகல்வாடி என்ற கிராமம், மராத்வாடா பகுதியின் வறட்சி சூழலைப் படம் பிடித்துக் காட்டுகிறது. இந்த கிராமத்தைச் சேர்ந்த முதியோர் தங்கள் பிள்ளைகளின் வருகைக்காக விடியலிலிருந்து இருட்டும்வரை காத்திருக்கிறார்கள்.
“தண்ணீர் இல்லை, நிலம் வறண்டு விட்டது, மழை இல்லையென்றால், புல்லும் இல்லை. எங்களுடைய வாழ்க்கை மழையை மட்டுமே நம்பியுள்ளது” என்கிறார் சகல்வாடியைச் சேர்ந்த ஒரு மூத்த பெண்.
பாறை கற்களும் மண்ணும் சேர்ந்து கட்டிய, ‘பழங்கால’ வீடுகளில் வசிக்கும் இவர்களுடைய பிள்ளைகள், பிழைப்பைத் தேடி புனே, மும்பை போன்ற நகரங்களுக்குச் சென்று விட்டனர். தினக்கூலிகளாகவும் ஓட்டுநர், கட்டுமானப் பணிகளிலும் உள்ள அவர்கள் பெரும்பாலும் கிராமங்களுக்குத் திரும்புவதில்லை.
“எங்களுடைய குடும்பம் சாப்பிடும் அளவுக்கு விளைவிக்க எங்களிடம் போதுமான நிலம் உள்ளது. ஆனால், நான்கு வருடங்களாக மழை இல்லை.” என்கிறார் மற்றொரு பெண்.
“போன வருடமே கிணறுகள் எல்லாம் வற்றி விட்டன. தண்ணீர் இல்லாததால் எதுவும் இல்லை.” என்கிறார் ஊரின் சாவடியில் அமர்ந்திருக்கும் பெண்.
“விறகு சேகரித்து சமைப்போம். வேலையெல்லாம் முடிந்தபின், சாவடிக்கு வந்துவிடுவோம்” என்கிறார் அருகில் உள்ள பெண். மழை பொய்த்துவிட்டபடியால் வேறு எந்தப் பணிக்கும் வாய்ப்பில்லாததால், ஊரில் உள்ள ஆண்கள், பெண்கள் அனைவரும் சாவடியில் குழுமியிருக்கின்றனர்.
படிக்க :
♦ தஞ்சாவூர் : உழைக்கும் மக்களை விரட்டிவிட்டு யாருக்கு ஸ்மார்ட் சிட்டி ?
♦ மாரத்வாடா : சர்க்கரை முதலாளிகள் உருவாக்கிய வறட்சி !
கரும்பு தோட்டப் பணிகளில் பணிபுரிந்த கணவர்கள் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்ட நிலையில், அவர்களுடைய கைம்பெண்கள் அந்த ஊரில் இருப்பதையும் ஒரு பெண் சுட்டிக்காட்டுகிறார்.
“கரும்பு தோட்டத்தில் வேலை செய்யும் போது இதோ அவளுடைய கணவரும், அவளுடைய கணவரும், அதோ அவளுடைய கணவரும்கூட இறந்துவிட்டார் ” என சிலரைச் சுட்டிக் காட்டி சொல்கிறார் அந்தப் பெண்.
“எனக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தார்கள், இருவரும் அடுத்தடுத்து இறந்துவிட்டார்கள். அதிசயமாக மகன் பிறந்தான். அவனையும் நகரத்துக்கு அனுப்பி விட்டேன்” என்கிற காணொளியின் தொடக்கத்தில் பேசிய பெண், “மழையை நம்பித்தான் எங்கள் வாழ்க்கை. மழை இல்லாவிட்டால் வாழ முடியாது” என வானத்தை நோக்கிக் கைக்காட்டுகிறார்.
அனிதா
நன்றி : சப்ரங் இந்தியா.