தலித் ஒருவரை திருமணம் செய்துகொண்டதால் தன்னுடைய தந்தை கொலை மிரட்டல் விடுப்பதாக உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. மகள் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராஜேஷ் மிஸ்ராவின் மகள், சாக்ஷி மிஸ்ரா (23), பரேலியில் சொந்த தொழில் செய்துவரும் அஜிதேஷ் குமார் (25) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அஜிதேஷ் குமார் தலித் என்பதால் தன்னுடைய தந்தை கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தங்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கக்கோரியும் சமூக வலைத்தளங்கள் மூலம் உதவி கோரியிருக்கிறார் சாக்ஷி.
BJP MLA from Bareilly, Rajesh Kumar Mishra alias Pappu Bhartaul's daughter has married a man of her choice. The BJP MLA is now after their life, has sent goons. His daughter has released this video requesting help! @Uppolice
Source: @saurabh3vedi
— Gaurav Pandhi गौरव पांधी (@GauravPandhi) July 10, 2019
தன்னுடைய தந்தை, சகோதரன் மற்றும் சில குண்டர்களால் உயிருக்கு ஆபத்திருப்பதாகவும் பரேலி போலீசு தங்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் அந்த வீடியோவில் பேசியுள்ளார் சாக்ஷி.
தங்கள் இருவரும் கொல்லப்பட்டால் பரேலி மாவட்டத்தைச் சேர்ந்த எம். பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ் மிஸ்ராவுக்கு யாரும் உதவக்கூடாது எனவும் அந்த வீடியோவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

சாக்ஷியின் வீடியோ வைரலான நிலையில், அதுகுறித்து பேசியுள்ள போலீசு அதிகாரிகள் சாக்ஷிக்கு அவருடைய கணவருக்கும் போதிய பாதுகாப்பு வழங்க முடிவு செய்திருப்பதாகவும் ஆனால், அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என தெரியவில்லை எனவும் கூறுகிறார்கள்.
சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ள வீடியோவில் தன் தந்தையிடம் தன்னை வாழ விடும்படி கேட்கிறார் அந்தப் பெண். தன் கணவருக்கு ஏதேனும் நேர்ந்தால், அவரை சிறைக்கு அனுப்பவும் தயங்கமாட்டேன் எனவும் எச்சரித்துள்ளார். உயிருக்கு பயந்து தற்போது இருவரும் தலைமறைவாக உள்ளனர்.
படிக்க:
♦ கேள்வி பதில் : ஆணவக் கொலைகளை சட்டம் போட்டு தடுக்க முடியுமா ?
♦ ஆணாதிக்க சமூகமே பெண்ணடிமைத்தனத்தின் ஆணிவேர்!
“அப்பா உங்களுடைய சிந்தனையை மாற்றிக்கொள்ளுங்கள். அபியும் அவருடைய குடும்பத்தினரும் விலங்குகள் அல்லர். அவர்கள் நல்ல மனிதர்கள். அவர்களுடன் நான் மகிழ்ச்சியாக இருப்பேன்” என வீடியோவில் தந்தையிடம் கெஞ்சுகிறார் சாக்ஷி.
இந்த நிலையில், தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி அஜிதேஷ் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். ஜூலை 15-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ள இந்த மனுவில் பார்ப்பனரான ராஜேஷ், தான் ஒரு தலித் என்பதால் தங்களுடைய திருமணத்தை ஏற்க மறுப்பதாக தெரிவித்துள்ளார்.

ராஜேஷ் மிஸ்ரா மீது மிரட்டல், கொள்ளை, மிரட்டி பணம் பறித்தல் மற்றும் மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் பதியப்பட்ட பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடைந்தெடுத்த கிரிமினல்களின் கூடாரமான பா.ஜ.க., ராஜேஷ் மிஸ்ராவை அரசியல்வாதி ஆக்கியதில் வியப்பில்லை.
சாதி படிநிலையை தூக்கிப் பிடிக்கும் கட்சியிலிருக்கும் ஒருவர் சமத்துவம் பேசுகிறவராக இருக்க முடியாது. முதிர்ச்சியடைந்த வயதில் இருக்கும் ஒரு பெண் தனக்கு பிடித்த ஆணுடன் வாழும் அடிப்படை உரிமைக்குக்கூட போராட வேண்டியிருக்கிறது. காவிகள் முன்வைக்கும் இந்து ராஷ்டிரத்தில் பெண்ணுரிமையையும் இருக்காது; சாதி சமத்துவமும் இருக்காது. ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கிய அடிமைச் சமூகமாக இருக்கும்.
கலைமதி
நன்றி: இந்தியா டுடே, டெலிகிராப் இந்தியா