தார் அறிமுகம் செய்யப்பட்ட போதும், பின்னர் அது குடிமக்களின் தனியுரிமையில் தலையிடுவதாக உச்சநீதிமன்றத்தில் செயல்பாட்டாளர்கள் வழக்கு தொடர்ந்த போதும் மத்திய அரசு அதை மறுத்தது. நலத் திட்டங்கள் சிந்தாமல் சிதறாமல் பயனாளிகளைச் சென்றடைவதை உறுதிப்படுத்துவது, ஒருங்கிணைந்த அடையாள அட்டை உட்பட ஆதார் எண்ணை ”நல்ல நோக்கங்களுக்காகவே” பயன்படுத்தப் போவதாகவும், அதைக் கொண்டு குடிமக்களின் தனியுரிமையில் தலையிடும் நோக்கம் தனக்கு இல்லை என்றும் மத்திய அரசு வியாக்கியானம் செய்தது.

ஆனால், ஆதார் என்னென்ன மாதிரியான கேடான நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படலாம் என செயல்பாட்டாளர்கள் அஞ்சினார்களோ அவையெல்லாம் நடக்கத் துவங்கியுள்ளன. தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC – National Register of Citizens) என்கிற திட்டத்தை அசாம் மாநிலத்தில் செயல்படுத்தி வரும் மத்திய அரசு, 1971-ம் ஆண்டு மார்ச் 25-க்கு முன்பிருந்தே அந்த மாநிலத்தில் வசிப்பவர்களின் பெயர்களை தொகுத்து அவர்களே இந்திய குடியுரிமை பெற்றவர்கள் என வகைப்படுத்தி வருகிறது.

இதன்படி, கடைசியாக வெளியிடப்பட்ட வரைவுப்பட்டியலில் இடம் பெற விண்ணப்பித்த 3.29 கோடி பேரில், 2.89 கோடி பேரின் பெயர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளது. மீதமுள்ள 40 இலட்சம் மக்கள் (பெரும்பாலும் இசுலாமியர்கள்) இந்தியக் குடியுரிமையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு இந்தியக் குடியுரிமை மறுக்கப்பட்டவர்களில் பலர் பரம்பரை பரம்பரையாக இந்தியாவிலேயே வசிப்பவர்கள் என்பதும், சிலர் இராணுவத்திலும் அரசு துறைகளிலும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. குடியுரிமை நீக்க பட்டியலில் இடம் பெற்ற பெயர் விவரங்களில் ஏராளமான குளறுபடிகள் இருப்பது பத்திரிகை செய்திகளில் வெளி வந்த வண்ணம் உள்ளது. இசுலாமிய மக்களை குறிவைத்து அவர்களது குடியுரிமையைப் பறிக்கும் மத்திய அரசின் இந்நடவடிக்கை பாரபட்சமானதும் பழிவாங்கும் போக்குடையதுமாகும் என பலரும் விமரிசித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆதார் விவரங்களை கையாளும் “இந்திய ஒருங்கிணைந்த அடையாள ஆணையத்தின்” (UIDAI) துணை இயக்குநர் பியூஷ் சேத்தியா, மத்திய உள்துறை அமைச்சகத்தின் துணைச் செயலருக்கு கடிதம் ஒன்றை கடந்த 21 மே 2019 அன்று எழுதியுள்ளார். அதில், தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விடுபட்டவர்களின் உயிரி மாதிரி (Biometrics) விவரங்களைச் சேகரிக்க தனியான ஒரு வழிகாட்டுதல் நடைமுறை இருப்பதாகவும் அதைப் பின்பற்ற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

படிக்க:
தேசிய குடிமக்கள் பதிவேடு : பா.ஜ.க – வின் வதைமுகாம் திட்டம் !
தலித் இளைஞரோடு திருமணம் – மகளுக்கு ஆணவக் கொலை மிரட்டல் விடுத்த பாஜக எம்எல்ஏ !

மேலும் உயிரி மாதிரி விவரங்களைச் சேகரிப்பது ஆதாருடைய துறைசார்ந்த நடைமுறைகளின் படி இல்லாமல், தேசிய குடிமக்கள் பதிவேட்டின் நடைமுறைகளின் படி என்பதும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குடிமக்களின் தனியுரிமையில் ஆதார் தலையிடுகிறது என்பதையும், ஆதாரைக் கட்டாயமாக்க கூடாது என உத்தரவிடக் கோரியும் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பில் தாம் வென்று விட்டதாகவும், தனியுரிமை நிலைநாட்டப்பட்டு விட்டதாகவும் லிபரல் அறிவுஜீவிகள் சொல்லி வந்தனர். ஆனால், அந்த தீர்ப்பின் வாசகங்களை திருகித் திருகிப் பொருள் கொள்வது மற்றும் அதில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தியே மத்திய அரசு தனது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்பதற்கு இது ஒரு சான்று.

மேலும் ஜூலை 7-ம் தேதி ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான ஒரு செய்தியின் படி, அசாம் மாநில அரசு ஆதார், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் அரசின் துணை அமைப்பான வெளிநாட்டினர் தீர்ப்பாயம் உள்ளிட்ட துறைகள் மின் தரவுகளாக சேகரித்து வைத்துள்ள விவரங்களை ஒருங்கிணைப்பது என முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் ”சட்டவிரோதக் குடியேறிகள்” பிற மாநிலங்களுக்குத் தப்பிச் சென்றாலும் எந்த அரசுத் துறையின் நலத்திட்ட உதவிகளையும் பெறாமல் தடுக்க முடியும் என அம்மாநில அரசு குறிப்பிடுகிறது.

உச்சநீதிமன்றம் தனியுரிமை வழக்கில் அளித்த தீர்ப்பு, அரசின் எந்த கரம் குடிமக்களின் விவரங்களை சேகரிக்கிறது, அப்படி சேகரிக்கப்பட்ட விவரங்களை எந்த கரம் பயன்படுத்துகின்றது, எதற்காக பயன்படுத்துகின்றது என்பதை தெளிவாக வரையறுக்கவில்லை. மேலும், ஆதார் அட்டையில் இடம்பெறும் அடையாள எண் குறிப்பானதாக இல்லாமல் குத்துமதிப்பாக ஏற்படுத்தப்படுபவை எனவும், யாருக்கு எந்த எண் ஒதுக்கப்படும் என்பதை மனிதர்கள் தீர்மானிப்பதில்லை என்றும், கணினிகளே அந்த வேலையைச் செய்வதால் அதில் பாரபட்சம் இருக்காது என்பதோடு  அதைக் கொண்டு குடிமக்களை வகைபிரிப்பதும் சாத்தியமில்லை என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால், தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம் பெறாத மக்களை தனிமைப்படுத்தி அவர்களிடம் இருந்து உயிரி விவரங்களைச் சேகரிப்பது – ஏற்கனவே ஆதார் எண் எடுத்தவர்கள் உட்பட – அவர்களை ஆதார் எண்ணைக் கொண்டே வகைபிரித்துப் பார்ப்பது சாத்தியம் என்பதை உணர்த்துகின்றது.

ஏற்கெனவே குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெறாமல் 40 இலட்சம் ஏழை இசுலாமியர்கள் தங்கள் எதிர்காலம் குறித்து அச்சப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு தனியே அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் அவர்களது அச்சத்தை கூட்டியுள்ளது.  ”மக்களெல்லாம் என்ன காரணத்திற்காக தங்கள் கண்களை படம் பிடித்து கைரேகைகளை சேகரிக்கிறது அரசு என்பது தெரியாமல் குழம்பிப் போயுள்ளனர். உங்கள் பக்கத்து வீட்டுக்காரர்களின் கைரேகைகளை எடுக்காமல் உங்களை மட்டும் கைரேகையைப் பதிவு செய்யச் சொல்லி கிரிமினல் போல் நடத்தினால் எப்படி உணர்வீர்கள்?” எனக் கேட்கிறார் தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பான வழக்குகளைக் கையாளும் வழக்கறிஞர் முயிஜ் உத்தீன் மஹ்மூத்.

நாஜி ஜெர்மானியில் யூதர்களை அடையாளப்படுத்திக் காட்ட மஞ்சள் நட்சத்திரப் பட்டைகள் அணிவிக்கப்பட்டன. பின்னர் கூட்டம் கூட்டமாக அவர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். கம்யூனிஸ்டுகள், தொழிற்சங்கவாதிகள், யூதர்கள் என இரத்த ருசி கண்ட நாஜிப் படை ஒரு கட்டத்தில் ஆரிய வெறியேறி மனித இனத்திற்கே அச்சுறுத்தலாக வளர்ந்து நின்றது. இப்போது சொல்லுங்கள் ! நாட்டின் இன்னொரு கோடியில் உள்ள அசாம் மாநிலத்தின் முசுலீம்களுக்குத் தானே சிக்கல் என அசட்டையாக இருக்கப் போகிறீர்களா என்ன?

சாக்கியன்

மேலும் வாசிக்க  : All Your Aadhaar Fears Are Coming True In Assam

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க