மோடியின் “குஜராத் மாடல்” வளர்ச்சிக்கு மாடலிங் செய்ய பொருத்தமானவர் கௌதம் அதானி. குஜராத் எனும் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருந்த அந்நாளைய வைர வியாபாரியான அதானிக்கு மோடி அம்மாநிலத்தில் அதிகாரத்திற்கு வந்ததில் இருந்து ஜாக்பாட் அடித்தது.

அதானி குழுமம் என்கிற ஓட்டை வாளியைக் கொண்டு கடலளவு மூலதனத்தை கௌதம் அதானி வாரிக் குவித்தது எப்படி என இந்தக் கட்டுரை விளக்குகிறது : மோடி இந்தியப் பிரதமரானார் ! அதானி உலகக் கோடீசுவரரானார் !

இனி எதிர்காலம் இணையமும் செயற்கை நுண்ணறிவு சார்ந்ததாகவும் இருக்கப் போவதால் “மின் தரவு தான் புதிய எண்ணெய்” (Data is new oil) என்பதை முதலாளித்துவ உலகம் தாரக மந்திரமாகச் சொல்லி வருவதால்; அதிலும் கால் வைத்துப் பார்த்து விடுவது என வைரவியாபாரி முடிவு செய்துள்ளார் என்கின்றன பத்திரிகைச் செய்திகள்.

அதாவது கூகிள், அமேசான், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் இந்தியர்களின் இணையப் பயன்பாட்டில் இருந்து சேகரிக்கும் மின் தரவுகளை இந்தியாவிலேயே சேமிக்க வேண்டும் என மத்திய அரசு சட்டம் ஒன்றை உருவாக்கவிருக்கிறது.

இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் இணைய இணைப்புகள், திறன்பேசிகள் போன்றவற்றின் ஊடாக சேகரிக்கப்படும் மக்களுடைய சமூக வலைத்தள செயல்பாடுகள் குறித்த விவரங்கள் என்பது இதன் ஒரு பகுதி.

எதிர்காலத்தில் அனைத்து மின்னணு உபகரணங்கள் மற்றும் போக்குவரத்து வாகனங்கள் அனைத்துமே நுண்திறன் (Smart) வாய்ந்தவைகளாக இருக்கும். அதாவது, அனைத்து மின் உபகரணங்களும், போக்குவரத்து வாகனங்களும் பல்வேறு சென்சார்கள் மூலமாக அந்த குறிப்பிட்ட உபகரணம் அல்லது வாகனத்தில் இருந்து சேகரிக்கும் மின் தரவுகளை இணையத்தின் மூலம் மையமாக ஓரிடத்தில் சேர்க்கும். இதன் மூலம் அந்த உபகரணங்களின் பயன்பாடு மற்றும் பராமரிப்பை தானியக்கமயமாக்க (Automation) முடியும்.

படிக்க:
கடந்த வாரத்தில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்கள் – ஒரு பார்வை
♦ தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விடுபட்டவர்களின் உயிரி மாதிரிகள் சேகரிப்பு !

இந்த தொழில்நுட்பத்தின் மிக அடிப்படையானது அனைத்து வகைகளில் இருந்தும் சேகரிக்கப்படும் மின் தரவுகளை (IOT – Internet of Things) சேமிப்பது. கூகிள் பேஸ்புக் போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்கள் இதற்கென தனியே மின் தரவுக் கிடங்குகளை அல்லது பண்ணைகளை (Data Farms) ஏற்படுத்தி உள்ளன. தற்போது இந்தியாவில் இருந்து சேகரிக்கப்படும் மின் தரவுகள் உலகின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் மினி தரவுப் பண்ணையில் உள்ள ஏதோ ஒரு கணினியில் சேகரிக்கப்பட்டிருக்கும். கடந்த மாதம் நீங்கள் ஒரு ஃபேக் ஐடி மூலம் அம்மணிக்கு ஹார்ட்டின் விட்ட விவரம் துவங்கி முகநூலில் நீங்கள் போடும் புரட்சிப் பதிவுகளின் விவரங்கள், அதற்கு விருப்பம் தெரிவித்தவர்கள், பகிர்ந்தவர்கள், அவர்களின் ஊர், பெயர், தொலைபேசி எண் விவரங்கள் வரை இவ்வாறு சேமிக்கப்படும்.

தற்போது இந்திய அரசு கொண்டு வரவுள்ள சட்டத்தின் படி, இந்த விவரங்களை மேற்படி நிறுவனங்கள் இந்தியாவிலேயே சேமிக்க வேண்டும். இப்படி ஒரு உட்கட்டமைப்பு வசதியை கூகிளோ, பேஸ்புக்கோ அமேசானோ ஏற்படுத்திக் கொள்வதற்கு மூலதனம் ஒரு தடையாக இருக்க வாய்ப்பில்லை – ஆனால் அதானியின் ஆசை நிச்சயம் ஒரு தடையாக இருக்கக் கூடும். மோடியின் ஆட்சி ஆயிற்றே.

எனவே அடுத்த சில மாதங்களில் அல்லது வருடங்களில் தென்னிந்திய மாநிலம் ஒன்றில் சுமார் 70 ஆயிரம் கோடி முதலீட்டில் மின் தரவுப் பூங்காக்களை உருவாக்க அதானி குழுமம் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வழக்கமாக பத்திரிகைகளுக்கு அதிகம் பேட்டியளிக்காத அதானி இது குறித்து, இதன் மூலம் மின் தரவுகளை சேமிக்க வேண்டிய தேவை அதிகரிக்கும் என்றும், இது பல்லாயிரம் கோடி மதிப்பிலான முதலீடுகளைக் கோருவதாக இருக்கும் எனவும், கூகிள்’கள் மற்றும் அமேசான்’களை இது அழைத்து வரும் எனவும் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதே தொழிலின் மீது அம்பானி சகோதரர்களும் கண் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் மின் தரவுகள் இந்தியாவிலேயே சேமிக்கப்பட்டு இந்தியர்களாலேயே கட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும் இதில் பன்னாட்டு நிறுவங்கள் தலை நுழைக்க அனுமதிக்க கூடாது எனவும் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். அவரது இளைய சகோதரர் அனில் அம்பானியும் இதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை நிறுவும் முயற்சியில் உள்ளதாக பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியர்களின் மின் தரவுகள் இந்தியர்களின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்கிற சர்க்கரை தடவிய வார்த்தைகளின் பின் வேறு சில அர்த்தங்களும் இருக்கின்றன. எந்த “இந்தியர்களின்” கட்டுப்பாட்டில் அவை இருக்கப் போகின்றன? அதானியும் – அம்பானிகளுமே அந்த இந்தியர்கள். மக்களுடைய அன்றாட நடவடிக்கைகள் அனைத்துமே இணையத்தோடு பிரிக்க முடியாதபடி பின்னிப் பிணைந்துள்ள ஒரு சூழலை தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

மக்களின் அன்றாட நடவடிக்கைகள் அனைத்துமே (நீங்கள் ஒரு நாளில் எங்கே துவங்கி எங்கெங்கெல்லாம் சென்று எங்கே சென்றடைகிறீர்கள் என்பதுவரை) மின் தரவுகளாக சேமிக்கப்படுகின்றன. இவை மக்களுடைய தனிப்பட்ட விவரங்கள் – அவற்றை ஒழுங்குபடுத்துவது அல்லது சேமிப்பது என்பது அரசின் கட்டுப்பாட்டில் இருக்கலாம் என்பதே பிரச்சினை எனும் பட்சத்தில் சில தனியார் முதலாளிகளின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது இன்னும் மோசடியானது. அதாவது இந்தியர்களின் நடவடிக்கைகளை இம்முதலாளிகளின் கண்காணிப்புக்கும் கட்டுப்பாட்டுக்கும் கீழ் கொண்டு வருவதே அதன் பொருள்.


சாக்கியன்
நன்றி: தி பிரிண்ட்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க