கருத்துரிமையைக் காக்க போராட வாரீர் ! சட்டமன்ற முற்றுகை !
ஜூலை – 17, 2019 | காலை 11.00 மணி
“மக்களின் வாழ்வை சூறையாடும் அழிவுத்திட்டங்களுக்கு எதிராகப் போராடுவது நமது அடிப்படை உரிமை ! போராடிய மக்கள் மீதான அனைத்துப் பொய் வழக்குகளையும் திரும்பப் பெறு !” ஆகிய முழக்கங்களை முன்வைத்து மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் இன்று காலை 11 மணியளவில் சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் நடைபெறுகிறது..
வினவு நேரலை !
முதல் பாகம் :
முகநூலில் பார்க்க :
அன்புடையீர், வணக்கம் !
நாசகார திட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்த துடிக்கிறது அரசு. வளர்ச்சி என்ற பெயரில் ஹைட்ரோ கார்பன், அணுக்கழிவு, எட்டுவழிச்சாலை என அனைத்தையும் வலுக்கட்டாயமாக திணிக்கப்பார்க்கிறது.
இவற்றை எதிர்த்து மாற்றுக் கருத்துக்களை முன்வைக்கும் மக்கள் இயக்கங்கள், செயல்பாட்டாளர்கள் மீது அடக்குமுறையை ஏவுகிறது போலீசு. கூட்டம் நடத்த தடை, ஆர்ப்பாட்டம் நடத்த தடை, மாநாடு, அரங்க கூட்டம், கருத்தரங்கம் என எந்த அரசியல் நிகழ்வுக்கும் அனுமதி இல்லை.
கொடுங்கோன்மையின் உச்சமாக துண்டறிக்கை வழங்கினால் கைது, அலுவலகத்தில் அமர்ந்து (மக்கள் அதிகாரம் நிர்வாகிகள்) பேசினால் வழக்கு, சுவரொட்டி மற்றும் சுவரெழுத்துக்களுக்காக வழக்கு பதிவது, மாணவர்கள் மீது தேசப் பாதுகாப்பு வழக்கு பதிவது என நீள்கிறது இப்பட்டியல். கிட்டத்தட்ட ஒரு அறிவிக்கப்படாத அவசர நிலை இங்கு சகஜமாக்கப்படுகிறது. அரசாட்சி போலீசு ஆட்சியாக மாறி வருகிறது.
இந்த நெருக்கடிகள் – ஒடுக்குமுறைகள் மக்கள் அதிகாரம் அமைப்பிற்கு எதிராக மட்டும் இல்லை. காவிரி நீர் உரிமைக்காக நெய்வேலியில் நடத்தப்பட்ட பேரணியில் கலந்து கொண்ட பலர் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. பிறகு வேறு வழக்கில் கைதான த.வா.க. தலைவர் வேல்முருகன் அவர்களை நெய்வேலியில் போடப்பட்ட தேசதுரோக வழக்கிலும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
படிக்க:
♦ மக்கள் அதிகாரம் அமைப்பை ஒடுக்கும் போலீசு | டிஜிபி-யிடம் மனு !
♦ ஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு
கதிராமங்கலத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராகப் பிரச்சாரம் செய்த பேரா.ஜெயராமன் மற்றும் பலர் மீது எண்ணற்ற வழக்குகள். மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீதும் எண்ணற்ற வழக்குகளை பல ஊர்களில் பதிவு செய்து வைத்துக் கொண்டு, ஒரு வழக்கில் கைதானவுடன் அடுத்தடுத்த வழக்குகளுக்கு கைது செய்து, இறுதியில் உபா சட்டத்திலும் சிறைவைக்க முயற்சி நடந்தது.
எனவே இனியும் இந்த போலீசு ஆட்சியை நாம் அனுமதிக்க கூடாது. இதற்கு எதிராக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளும், மக்கள் மன்றத்தில் இயக்கங்களும்; அறிவுத்துறையினரும் ஊடகங்களும் குரல் எழுப்ப வேண்டும், போராட வேண்டுமென்று கோருகிறோம்.
இத்தகைய போலீசு ஆட்சியை நடத்திவரும் எடப்பாடி அரசைக் கண்டித்து நாங்கள் 17.7.2019 அன்று நடத்தவிருக்கும் சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றும் உங்கள் ஆதரவை வழங்க வேண்டும்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை,
தொடர்புக்கு : 99623 66321