சத்யபாமா பல்கலைக் கழக  – வாகன ஓட்டுநர்கள், டெக்னீசியங்கள் மற்றும் ஊழியர்கள் சங்க – ஊதிய உயர்வு போராட்டம் வெல்லட்டும் !

சென்னை செம்மஞ்சேரி OMR சாலையில் இயங்கி வரும் ‘காலஞ்சென்ற முன்னாள் மந்திரி’ ‘திருவாளர்’ ஜேப்பியார் அவர்களின் சுயநிதி பொறியியல் கல்லூரி குழுமத்தின் முதன்மை நிறுவனமான சத்யபாமா பல்கலைக் கழகம் செயல்பட்டு வருகிறது. அதில் மாணவ, மாணவிகளுக்கான போக்குவரத்து, உணவகம், அலுவலக உதவியாளர்கள் மற்றும் தூய்மைப் பணி என பணிபுரியும் சுமார் 1500-க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு இந்த ஆண்டுக்கான வருடாந்திர ஊதிய உயர்வு ரூபாய் 100-லிருந்து தொடங்கி ரூபாய் 650 வரை போடப்பட்டுள்ளது.

சத்யபாமா பல்கலைக்கழகம்.

பெரும்பான்மையான தொழிலாளிகளுக்கு ரூபாய் 200-க்கும் குறைவாகவே உயர்வு போடப்பட்டுள்ளது. மிகச் சொற்பமான சீனியர்களுக்கு மட்டுமே ரூபாய் 500-வரை ஊதிய உயர்வு போடப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக இதே நடைமுறையிலேயே ஊதிய உயர்வைக் கொடுத்து வருகிறது நிர்வாகம்.

2018-ம் ஆண்டு நிர்வாகம் இதே போன்ற ஊதிய உயர்வை வழங்கியதை தொழிலாளர் தரப்பு நிர்வாகத்தின் சேர்மேனிடம் நேரில் பார்த்து முறையிட்டது. அதன் காரணமாக இப்பிரச்சினையில் முன்னின்ற முன்னணி தொழிலாளிகளை பல்வேறு பொய்க்குற்றச் சாட்டுகளின் பேரில் ‘ஒழுங்கு நடவடிக்கை’ என்ற பெயரில் வெளியேற்றி பழிவாங்கியது.

அதுமட்டுமின்றி, பொய்க்குற்றச்சாட்டு சுமத்த முடியாத சங்க முன்னணியாளர்களை இந்தியாவின் கடை கோடி வட மாநிலங்களில் உள்ள காசி-வாரணாசி, அசாம் போன்ற இடங்களுக்கு தற்காலிக பணிமாறுதல் செய்தது. அதுவும் அவர்கள் பணிமுடித்து வீடு புறப்படும் தருனத்தில், “நீங்கள் நாளைமுதல் வாரணாசிக்கு அல்லது அசாமுக்கு போக வேண்டும்” என ரயில் டிக்கட்டுடன் பணிமாற்ற ஆணையையும் வழங்கி பழிவாங்கியுள்ளது நிர்வாகம்.

படிக்க:
♦ ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு – மரணங்கள்
♦ சத்தியபாமா பல்கலைக் கழக தொழிலாளிகளின் போனஸ் வழக்கு வெற்றி !

மேற்படி செயல் மூலம் கடந்த 10 ஆண்டுகளாக உரிமையைப் பற்றி பேசும் தொழிலாளர் அனைவரையும் ஒழித்துக்கட்டியுள்ளது நிர்வாகம். மேற்கண்ட வடிவத்தில் மட்டும் இதுவரை 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வழக்குகள் போட்டு அலைகழித்திருக்கிறது நிர்வாகம். போடப்பட்ட அனைத்து வழக்குகளும் ‘மாண்புமிகு’ உயர் நீதிமன்றதில் கிடப்பில் கிடக்கின்றது.

10 ஆண்டுக்கு முன் தொழிற்சங்கத்தின் மூலம் எழுப்பப்பட்ட ஊதிய உயர்வு தொழிற்தாவாவும் இன்றுவரை தொழிலாளர் தீர்ப்பாயத்தில் தீர்க்கப்படாதவண்ணம் இழுத்தடித்து வருகிறது நிர்வாகம். கடந்த 3 ஆண்டுகளாக ஏரிவரும் விலைவாசி உயர்வை எதிர்கொண்டு, தொழிலாளர் குடும்பங்கள் வாழ உகந்த ஊதிய உயர்வை அளிக்காததுடன், இது பற்றி பேசும் தொழிலாளரையும் தனது பழிவாங்கும் சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் ஒழித்துக்கட்டி வருகின்றது.

சத்தியபாமா நிர்வாகத்தில் பணிபுரிந்து வந்த தொழிலாளிகள் 10 ஆண்டுகளுக்கு முன் தாங்கள் ஒரு தொழிலாளி என்ற அங்கீகாரம் மறுக்கப்பட்டதுடன் எந்தவித அடிப்படை உரிமையும் இல்லாமல் கொத்தடிமையைப் போல வேலை வாங்குவதும்; உரிமைக் கேட்டால் அடுத்த நாள் கேட்டிலேயே தடுத்து “வேலை இல்லையென நிர்கதியாக துரத்தப்பட்டது”; என தொழிலாளிகள் அலைகழிக்கப்பட்டும் அவமானப்படுத்தப்பட்டும் வந்தனர்.

அதை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி உதவியுடன் எதிர்கொண்டு தமிழகத்திலேயே முதல் முறையாக கல்வி நிறுவனத்தில் சங்கம் துவங்க வழிகோலும் விதம், புதிய ஜனநாயக வாகன ஓட்டுநர்கள், டெக்னீசியன்கள் மற்றும் ஊழியர்கள் சங்கம் என்ற தொழிற்சங்கத்தைத் தொடங்கி பதிவு செய்தனர் தொழிலாளிகள்.

உரிமை கோரியதற்காக 20-க்கும் மேற்பட்ட முன்னணித் தொழிலாளிகளை தனது சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் வெளியேற்றிய நிர்வாகத்தின் செயலுக்கெதிரான வழக்குகள் சிலவற்றில் வெற்றி பெற்றும் வேலை தராமல் மேல்முறையீடு என்ற பெயரில் வழக்குகளை இழுத்தடித்து வருகின்றது நிர்வாகம்.

நிர்வாகத்தின் அனைத்து பழி வாங்கும் நடவடிக்கைக்கும் அஞ்சாமல் எதிர்த்துப் போராடி பணி நிரந்தர உரிமையை நிலை நாட்டியது சங்கம். இதன் விளைவாக கல்வி நிறுவனங்கள் “சேவை நிறுவனம்” என ஏமாற்றிவந்த கல்வி முதலாளிகளின் பல கல்வி நிறுவனங்களில் சங்கம் கட்டப்பட்டதுடன் பணி நிரந்தரமும்; சில சட்டப் பூர்வ அங்கீகாரமும் கல்வி நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளி வர்க்கம் பெற வழி அமைக்கப்பட்டது.

அடுத்தபடியாக மாதாந்திர சம்பளத்திற்கான ரசீது வழங்க 6-ஆண்டுகாலம் சட்டப் போராட்டம் நடத்தி அதில் வென்றது சங்கம். பிறகு சம்பள ரசீதில் தொழிலாளிக்கு வழங்கும் விடுப்பைப் ( EL, CL ) பதிவு செய்யவைக்கப் போராடியதின் அடிப்படையில் தற்போது வெறும் CL –விடுப்பை மட்டும் பதிவு செய்துள்ள நிர்வாகம். வருடத்திற்கு 180 நாட்கள் மட்டுமே கல்லூரி நடப்பதால் EL – வழங்க இயலாது என தவிர்த்து வருகின்றது.

தொழிலாளர் தரப்பு எமது ஒரு நாள் வேலை நேரம் என்பது காலை 6.00 மணி முதல் இரவு 7.00மணிவரை என்பதால் அதற்கு OT – யோ விடுப்போ வழங்காத நிலையில். எமது வேலை என்பது சுமார் 270 நாட்களுக்கும் மேல் என்பதால்,  EL  வழங்க வேண்டும் என்பதற்கான தொழிற்தாவாவை தொழிலாளர் ஆய்வாளர் மூலம் நடத்தப்பட்டு வழங்க வேண்டும் என அறிவுருத்தப்பட்டும், அதனை வழங்காமல் இழுத்தடித்து வருகின்றது நிர்வாகம்.

இதே போல் தொழிலாளிகளுக்கான ஓய்வறையை ஒதுக்காமல் பேருந்திலும், கட்டிட நிழல்களிலும் அலைய விட்டுவந்த நிர்வாகம். தொழிலாளர்களின் தொடர்ச்சியான போராட்டத்தின் விளைவாக இப்போது டிரான்ஸ்போர்ட் தொழிலாளிக்கு மட்டும் ஓய்வறை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.

அந்த வகையில் தனது சோரம் போகாத தொழிலாளிவர்க்க உணர்வால் எந்தவித இழப்பிற்கும் அஞ்சாமல் தொடர்ந்து போராடிவரும் புதிய ஜனநாயக வாகன ஓட்டுநர்கள், டெக்னீசியங்கள் மற்றும் ஊழியர்கள் சங்கத்தை ஒழித்துக்கட்ட நினைக்கிறது நிர்வாகம்.

பெரும்பான்மை தொழிலாளர்களை வேலை பயம் ஏற்படுதுவதின் மூலம் அச்சுறுத்தி பணிய வைக்க முடியாத நிலையில், நிர்வாகமே தொழிலாளர் நல ஆணையகத்தின் முன்னாள் ஆணையாளர்கள் மூலம், தொழில்முறை தரகு வேலை மூலம் ஒரு கைக்கூலி சங்கத்தை உருவாக்கி; தொழிலாளிகளை மிரட்டி அதன் உறுப்பினர்களாக சித்தரித்து வருகின்றது.

இதில் தொழிலாளர் இருக்க வேண்டும் என்பதற்காக கல்விப் படியென ஆண்டிற்கு ரூபாய் 2500 வரையும், பண்டிகைப் பணம் என்ற பெயரில் ரூபாய் 1000, 500 எனவும் முறையற்ற கணக்குகள் மூலம் அந்த தொழிலாளிகளுக்கு மட்டும் வழங்கி, அதற்கான கையொப்பம் பெற்று, அதையே சங்கத்தின் பொதுக்குழுவாக சோடித்து நமது சங்கத்திற்கு எதிராக தொடர்ந்து நிறுத்திவருகின்றது நிர்வாகம். இந்த அற்பத்தனங்கள் எதற்கும் எப்போதும் சோரம் போகாத நமது உறுப்பினர்கள் தங்களின் சட்டப் பூர்வ உரிமைகளுக்காக உறுதியாக நின்று போராடி நிலை நாட்டி வருகின்றார்கள்.

படிக்க:
♦ மணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை ! தாகோர் சாதிக் கட்டுப்பாடு !
♦ டிஜிட்டல் இந்தியா கிடக்கட்டும் ! மொதல்ல எம்.பி-களை மின்னஞ்சலுக்கு பதிலளிக்கச் சொல்லுங்க !

மேற்படி சத்தியபாமா நிர்வாகம் தொழிலாளர் உரிமைக்கான போராட்டம் படிப்படியான வெற்றியை பெற்று வரும் நிலையில் பழைய தொழிலாளர்கள் ஓய்வு பெரும் வயதை தொடும் நிலையிலும், அடுத்ததாக ESI, உரிமை போனசு, ஊதிய உயர்வு ஒப்பந்த உரிமைக்கு என தங்கள் 10 ஆண்டுகால நீதிமன்ற வழக்குகளிலும் வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டுள்ளார்கள்.

நமது சங்கம் ESI கோரி எடுத்த நடவடிக்கையை முறியடிக்க 400 சுய நிதி கல்வி முதலாளிகள் சேர்ந்து வழக்கு தொடர்ந்து உச்ச நீதி மன்றத்தில் அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. தங்கள் போராட்ட பலன்களை தங்களது வருங்கால தொழிலாளி வர்க்கத்திற்கும் நிலைக்கும்படி நிலைநாட்டி வருகின்றார்கள் சத்யபாமா பல்கலைக் கழக தொழிலாளர்கள்.

தொழிலாளர் போராட்டங்கள் நிலவும் அரசுக் கட்டமமைப்பிற்குள் ஜனநாயகப் பூர்வமாகத் தீர்க்க, தொழிலாளர் வாழ்நாளே போதாது என்பதைத்தான் மேற்கண்ட வழக்கு விவரங்கள் உணர்த்தும் உண்மைகள்.

எனவே தொழிலாளி வர்க்கத்தின் தனித்தனியான போராட்ட முறைகள் இனி தீர்வாக முடியாது. மாற்று அரசுக் கட்டமைப்பிற்கான போராட்டமே தீர்வு.

தகவல்:
புதிய ஜனநாயக வாகன ஓட்டுநர்கள் மற்றும் டெக்னிஷியன்கள் சங்கம்
இணைப்பு : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
சத்தியபாமா பல்கலைக் கழகக் கிளை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க