இந்திய நீதித்துறையின் தூங்கிவழியும் விசாரணை வேகத்துக்கு பயந்து செய்யாத குற்றத்துக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்திருக்கிறார் முகமது இர்ஃபான் கவுஸ். லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 2012-ம் ஆண்டு மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டவர் கவுஸ்.

கடந்த வாரம் பிணை வழங்கிய மும்பை உயர்நீதிமன்றம், “கிடைத்திருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்ட கவுஸ்-க்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நம்ப முடியவில்லை” என தெரிவித்துள்ளது.
கவுஸ் உள்ளிட்ட ஐவர் மீது உபா (சட்டவிரோத செயல்பாடு தடுப்பு) சட்டத்தின் கீழ் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்திருந்தது மகாராட்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு. இந்த வழக்கு 2013-ம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.
வழக்கு விசாரணை நடக்காமலேயே கிட்டத்தட்ட ஐந்து வருடங்களை சிறையில் கழித்திருக்கிறார்கள் கவுஸ் உள்ளிட்ட ஐவரும். மேலும், வழக்கு விசாரணை நீடிக்கப்பட்டு சிறையிலேயே வாழ்நாளை கழிக்க வேண்டியிருக்கும் என பயந்து செய்யாத குற்றத்தை செய்ததாக ஒப்புக்கொண்டிருக்கிறார்கள் இவர்கள். குற்றத்தைச் செய்ததாக அவர்களைக் கைது செய்த புலனாய்வு முகமையே இந்த யோசனையை சொல்லியிருக்கிறது.
“தேசிய புலனாய்வு முகமையின் அதிகாரிகள், ‘பெங்களூருவில் நடந்த இதுபோன்ற வழக்கு ஒன்றில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டார்; அவர்களுக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை கிடைத்தது’ என எங்களிடம் சொன்னார்கள். அதுபோல, எங்களையும் குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொன்னது. நாங்கள் ஏற்கெனவே ஐந்து ஆண்டுகளை சிறையில் கழித்துவிட்டதால், எங்களுக்கு பிணை கிடைத்துவிடும் என என்.ஐ.ஏ. சொன்னதுபோல நீதிமன்றத்தில் சொன்னோம்” என்கிறார் 32 வயதான கவுஸ்.
படிக்க:
♦ டிஜிட்டல் இந்தியா கிடக்கட்டும் ! மொதல்ல எம்.பி-களை மின்னஞ்சலுக்கு பதிலளிக்கச் சொல்லுங்க !
♦ ஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாதம் : பழம்பெரும் மொசூல் நகரின் இன்றைய நிலை | படக்கட்டுரை
கவுஸ் குற்றம்சாட்டப்பட்ட மற்றொரு நபரான முசாமில்-க்கு 2011-2012 காலக்கட்டத்தில் 214 தொலைபேசி அழைப்புகளை அழைத்து பேசியதாகவும் அவருடன் மும்பையிலிருந்து நந்தேத் நகருக்கு பயணித்ததாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. சவுதியிலிருந்து அவர்களுக்கு பணம் வந்ததாகவும் அவர்களிடம் துப்பாக்கி இருந்ததாகவும் முசுலீம் இளைஞர்களை வன்முறை பாதைக்குத் தூண்டியதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
நவம்பர் 2017-ம் ஆண்டும் ஐந்து பேரும் குற்றம் செய்ததாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டனர். நீதிமன்றம் அவர்களுடைய ஒப்புதலை நிராகரித்து பிணை வழங்க மறுத்துவிட்டது. அப்போது உயர்நீதிமன்றம், “வழக்கு விசாரணை எட்டு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்” என உத்தரவிட்டிருந்தது. ஆனாலும், எட்டு மாதங்களில் மூன்று சாட்சியங்கள் மட்டுமே விசாரிக்கப்பட்டுள்ளனர் என்றும் புலனாய்வு அதிகாரியிடம் இறுதி விசாரணை நடத்த வேண்டியிருக்கிறது என்றும் கூறுகிறார் கவுஸ்.
2012-ம் ஆண்டு கைதானபோது இன்வர்ட்டர் பேட்டரி கடையில் பணியாற்றிய கவுஸ்-க்கு மனைவியும் குழந்தையும் உள்ளனர். தான் சிறையில் இருந்தபோது தனது தந்தையும் சகோதரருமே தனது குடும்பத்தை பார்த்துக்கொண்டதாக கூறுகிறார் கவுஸ்.
முசுலீம்களையும் தலித்-பழங்குடியினர் போன்ற ஒடுக்கப்பட்ட பிரிவினரையும், அரசதிகாரத்தை கேள்வி கேட்கும் செயல்பாட்டாளர்களையும், வழக்கு விசாரணையே இல்லாமல் சிறையில் அடைக்க உபா போன்ற கொடூர சட்டங்களை எப்படி பயன்படுத்தப்படுகின்றன என்பதற்கு முகமது கவுசின் வழக்கு ஓர் உதாரணம்.
அனிதா
நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்