போதை : விளையாட்டு உலகின் இருண்ட பக்கம் ! ஆவணப்படம்

அல்ஜசீரா தொலைக்காட்சி வெளியிட்ட “இருண்ட பக்கம் : போதை விளையாட்டு வீரர்களின் இரகசியங்கள்” என்கிற ஆவணப்படம் விளையாட்டு உலகத்தை திகைக்கச் செய்தது.

0

லியெம் கோலின்ஸ் ஒரு வெற்றியடைந்த விளையாட்டு வீரர்; தோல்வியடைந்த தொழில் முனைவோர். இங்கிலாந்தைச் சேர்ந்த கோலின்ஸ், தடை ஓட்டப்பந்தயம் மற்றும் தொடர் ஓட்டப்பந்தயங்களில் பங்கேற்று பல வெற்றிகளைக் குவித்தவர்.

தனது 18 வது வயதில் – 1998-ல் – பள்ளி அளவில் நடந்த 110 மீட்டர் தடை ஓட்டப்பந்தயத்தில் வென்ற கோலின்ஸ், கடைசியாக தனது 35-வது வயதில் (2014-ம் ஆண்டு) நடந்த யுரோப்பியன் மாஸ்டர்ஸ் விளையாட்டுப் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். தடகள விளையாட்டு அரங்கில் மிக நீண்ட காலம் தாக்குப் பிடித்து நின்ற கோலின்ஸ், அதே காலகட்டத்தில் ரியல் எஸ்டேட் தொழிலில் கால் வைத்து பெரும் சரிவையும் சந்தித்தவர்.

லியெம் கோலின்ஸ்

தனது சாதனைகளுக்காகவோ, தோல்விகளுக்காகவோ பெரிதும் அறியப்படாத கோலின்ஸ் 2017-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி வெளியான ஒரு ஆவணப்படத்தைத் தொடர்ந்து அட்லாண்டிக்கின் மறுமுனையில் இருக்கும் வட அமெரிக்க கண்டமெங்கும் பரபரப்பாக பேசப்படும் நபராகினார். அல்ஜசீரா தொலைக்காட்சியின் மறைபுலனாய்வுப் பிரிவு வெளியிட்ட “இருண்ட பக்கம் : போதை விளையாட்டு வீரர்களின் இரகசியங்கள்” (The Dark Side: Secrets of the Sports Dopers) என்கிற ஆவணப்படம் அமெரிக்க விளையாட்டு உலகத்தை மட்டுமின்றி இரசிகர்களையும் திகைக்கச் செய்தது.

“நான் நினைத்தால் சாதாரண மரபணுக்கள் கொண்ட ஒரு விளையாட்டு வீரரை ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல வைக்க முடியும். போதைப் பொருட்கள் பயன்பாட்டை கண்டறியும் அமைப்பின் கண்களில் மிக எளிதாக மண்ணைத் தூவி விடலாம்” என இரகசிய கேமரா முன் சொல்கிறார் மருத்துவர் சாட் ராபர்ட்சன். இவர் கனடாவின் வான்கூவர் நகரைச் சேர்ந்தவர். பல்வேறு அமெரிக்க விளையாட்டு வீரர்கள் இவரது வாடிக்கையாளர்கள். ஆவணப்படமெங்கும் ஒரு விளையாட்டு வீரர் எப்படி ஊக்க மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பின் விதிகளை பரிசோதனைகளில் மாட்டிக் கொள்ளாமல் மீற முடியும் என மருத்துவர்கள் விளக்குகின்றனர்.

டெக்சாசைச் சேர்ந்த சார்லி ஸ்லை எனும் மருத்துவர் அமெரிக்க கால்பந்தாட்டம் மற்றும் பேஸ்பால் விளையாட்டு வீர்களின் பிரத்யேக “மருத்துவர்”. இவரது சிறப்பு மருந்து டெல்டா 2 எனப்படும் ஊக்க மருந்து. இந்த மருந்தைப் பயன்படுத்தி விளையாட்டில் சாதித்த வீரர்களின் பெயர்களை அனாயசியமாக பட்டியலிடுகிறார் சார்லி. அமெரிக்க கால்பந்தாட்டம், பேஸ்பால் மற்றும் கூடைப் பந்தாட்டம் போன்ற விளையாட்டுக்கள் அமெரிக்கா மற்றும் கனடாவில் பரவலாக தனியார் கிளப்புகள் மூலம் தொழில்முறைப் போட்டிகளாக நடத்தப்படுகின்றன. ஒரு கட்டத்தில் இரசிகர்களின் ஆதரவை இழந்திருந்த அமெரிக்க கால்பந்தாட்டமே ஊக்க மருந்து பயன்படுத்தும் விளையாட்டு வீரர்களின் வரவுக்குப் பின்னர் சூடுபிடிக்கத் துவங்கியது என ஆவணப்படத்தின் ஓரிடத்தில் குறிப்பிடப்படுகின்றது.

டிம் மோண்ட்கோமெரி

ஆவணப்படத்தின் இயக்குநர் முதலில் போதை மருந்து உபயோகத்தின் காரணமாய் தடை செய்யப்பட்ட முன்னாள் 100 மீட்டர் ஓட்டப்பந்தய வீரர் டிம் மோண்ட்கோமெரியைச் சந்திக்கின்றனர். தனது விளையாட்டு வாழ்வின் உச்சமாக 100 மீட்டர் தூரத்தை 9.78 நொடிகளில் கடந்து உலக சாதனை புரிந்தவர் டிம். ஆனால், பின்னர் அந்தப் போட்டியின் போது அவர் ஊக்க மருந்து பயன்படுத்தியது கண்டறியப்பட்டதும் அவர் தடை செய்யப்பட்டதுடன் அவரது உலக சாதனையும் பறிக்கப்படுகின்றது.

“வெல்ல வேண்டும் என்பது மட்டுமே எனது குறிக்கோள். எனக்கு அந்தப் புகழ் பிடித்திருந்தது; அது வேண்டுமாய் இருந்தது. எனது சிறிய வயதில் பெரியவர்களோடு ஓடி வென்ற அந்த தருணங்கள் மீண்டும் மீண்டும் தேவைப்பட்டது. அதை நான் உணர வேண்டும் என்பதற்காய் ஊக்க மருந்துகளை நாடினேன். பின்னர் பிடிபட்டு தடை செய்யப்பட்டேன்” என்கிறார் டிம். தற்போது போதை உலகில் இருந்து வெளியேறியுள்ள டிம், இளம் வீரர்களுக்கு பயிற்சியளித்துக் கொண்டிருக்கிறார்.

டிம் யார் மூலமாக ஊக்க மருந்துகளைப் பெற்றார் என்பதை அறிந்து கொள்ளும் ஆவணப்பட இயக்குநர், கோலின்சை தொடர்பு கொண்டு “ஓய்வு பெறும் முன் இறுதியாய் ஒரு முறை ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளத் துடிக்கும் வீரர்” என்கிற போர்வையில் போதை மருத்துவர்கள் மற்றும் முகவர்களைச் சந்திக்க வைக்கின்றனர் – இரகசிய கேமராவுடன். முதலில் பகாமஸ் தீவுகளுக்குச் செல்லும் ஆவணப்படக் குழு அங்கே டிம்முக்கு மருந்துகள் சப்ளை செய்த மருத்துவர்களைச் சந்திக்கின்றனர். பின்னர் அங்கிருந்து நூல் பிடித்து கனடாவின் வான்கூவரில் உள்ள சாட் ராபர்ட்சன் மற்றும் டெக்சாசைச் சேர்ந்த சார்லி ஸ்லை ஆகியோரை அடைகின்றனர்.

பகாமஸ் மருத்துவர்களிடம் சொன்ன அதே கதையுடன் இவர்களையும் அணுகுகின்றது ஆவணப்படக் குழு. இரகசிய கேமராவின் முன் இவ்விருவரும் அவிழ்த்து விட்ட உண்மைகள் ஒவ்வொன்றும் அமெரிக்க இரசிகர்களை அணுகுண்டுகளாய்த் தாக்கியுள்ளன. நேரலைக் கட்டணப் (pay per view) போட்டிகளுக்கு தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு காசு கட்டி பல மணி நேரங்கள் ஆராவாரித்து கொண்டாடிய வீரர்கள் தங்களை ஏமாற்றி விட்டதாய்ப் பொருமினர்.

எனினும், அமெரிக்க விளையாட்டு உலகம் இதில் அதிர்ச்சியடைவதற்கு ஏதுமில்லை என்பதே எதார்த்தம். வென்றே தீர வேண்டும் என்கிற வெறி ஒருபுறம் – அமெச்சூர் போட்டிகளில் எப்பாடுபட்டாவது வெற்றிகளைக் குவித்து விட்டால் தொழில்முறை விளையாட்டு உலகினுள் ஒரு நல்ல இடம் கிடைத்து விடும் என்கிற உத்திரவாதம் மறுபுறம். தொழில்முறை விளையாட்டு உலகிலும் வெற்றி ஒன்றே ஒரு வீரனின் இருப்பையும் வருமானத்தையும் தக்கவைத்துக் கொள்வதற்கான வழி என்கிற நிலை இன்னொரு புறம். இந்த நெருக்கடிகளோடு பண்டைய ரோமானிய கிளாடியேட்டர்களைப் போல் பார்வையாளர்களை மகிழ்விக்க வேண்டிய கட்டாயமும் சேர்ந்து கொள்ள அவர்கள் மிக இயல்பாக ஊக்க மருந்துகளை நாடுகின்றனர்.

ஊக்க மருந்துகளை எடுத்துக் கொள்ளும் விளையாட்டு வீரன் வெல்கிறான் – விளையாட்டு தோற்றுப் போகின்றது. இந்த நச்சு சூழலை ஓரளவிற்கு நேர்மையாக படம்பிடித்துக் காட்டுகின்றது அல்ஜசீராவின் இந்த ஆவணப்படம், அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒன்று.


சாக்கியன்
நன்றி: அல்ஜசீரா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க