பணிபுரியும் இடத்தில் பெண்கள் எதிர்கொண்ட பாலியல் ஒடுக்குமுறை, அத்துமீறல்களை உலகளவில் வெளிக்கொண்டுவந்த #MeToo இயக்கம், இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் பரபரப்பு கொண்டது. சினிமா, அரசியல், கலை, இலக்கியம், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிபுரியும் பெண்கள் தாங்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டார்கள்.
மோடி அமைச்சரவையில் மத்திய இணை அமைச்சராக இருந்த பத்திரிகையாளர் எம்.ஜே. அக்பர் மீது ஏராளமான பெண்கள் பாலியல் புகார் கூறினர். அதனைத் தொடர்ந்து உருவான சமூக அழுத்தத்தின் பேரில் எம்.ஜே. அக்பர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

பல்வேறு தரப்பிலிருந்து எழுந்த கோரிக்கையின் பேரில் பணிபுரியும் இடங்களில் பாலியல் அத்துமீறல்களை சட்டரீதியாக எதிர்கொள்ளச் செய்யவேண்டிய கட்டமைப்பு ரீதியிலான மாற்றங்கள் குறித்து ஆராய மோடி அரசு மூத்த அமைச்சர்களைக் கொண்ட குழுவை அமைத்தது. ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், மேனகா காந்தி, நிதின் கட்கரி ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
இந்த அமைச்சரவை கமிட்டி அமைக்கப்பட்டு ஒன்பது மாதங்கள் ஆன நிலையில் இணைய ஊடகமான “த க்விண்ட்” தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், இந்த கமிட்டி குறித்து கேட்டிருந்தது. அதற்கு அரசு, ‘அந்தக் கமிட்டி கலைக்கப்பட்டுவிட்டது’ என பதிலளித்துள்ளது. மேலும், அதில் இதுதொடர்பாக நடந்த அமைச்சரவை கமிட்டி கூட்டங்களில் என்ன பேசப்பட்டது என்கிற தகவலையும் தெரிவிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது அரசு.
எத்தனை முறை, எந்தெந்த தேதிகள் கமிட்டி கூடியது, கமிட்டியில் எடுக்கப்பட்ட முடிவுகள் – பரிந்துரைகள் என்னென்ன என்பது குறித்தும் ஆர்.டி.ஐ -யில் கேட்கப்பட்டிருந்தது. மேற்கண்ட அனைத்து தகவல்களும் ஆர்.டி.ஐ சட்டப் பிரிவு 8 (i)ன் படி பகிர்ந்துகொள்ளத் தக்கவை அல்ல என மறுத்துள்ளது மோடி அரசு.
படிக்க:
♦ #MeToo : படுக்கை அறைக்கு வந்தால் பாட வாய்ப்பு ! கர்நாடக சங்கீதத்தின் பார்ப்பன ராகம் !
♦ மோடியின் தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் ! மதுரையில் அரங்கக் கூட்டம்
“இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, மாநிலத்தின் பாதுகாப்பு, அரசின் அறிவியல் அல்லது பொருளாதார நலன்கள், வெளிநாட்டு உறவு அல்லது குற்றத்தை தூண்டுவதற்கு வழிவகுக்கக்கூடிய” என்கிற காரணத்தைக் கொண்ட மேற்கண்ட சட்டப்பிரிவின் படி தகவல்களை தர மறுக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம், பாலியல் ஒடுக்குமுறைகளுக்கு தற்போதிருக்கும் சட்டங்கள் மற்றும் கொள்கைகளை மேலும் பலமாக்கும் வகையில் பரிந்துரைகளை வழங்கும், என அரசு அறிவித்திருந்தது. ‘காலவரையறை அற்று’ நீதியை வழங்கும் வழிகளோடு சட்டங்களை கொண்டுவருவோம் எனவும் சொன்னது அரசு.
ஏற்கெனவே உள்ள பணியிட பாலியல் ஒடுக்குமுறை தடுப்புச் சட்டங்களில் உள்ள ஓட்டைகள், குறைபாடுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் நிலையில் இல்லை. உதாரணத்துக்கு, சம்பவம் நடந்து மூன்று மாதத்துக்குள் புகார் அளிக்கப்பட்டிருக்க வேண்டும் என சொல்கிறது இந்தச் சட்டம். பாலியல் ஒடுக்குமுறை தடுப்புக் கமிட்டி, பணியிடத்தில் உள்ள நிர்வாகி அல்லது மேலதிகாரிகளால் அமைக்கப்பட வேண்டும் எனவும் சட்டம் சொல்கிறது. மேலும், பாதிக்கப்பட்ட பெண் தனது வழக்கைப் பற்றி பேசுவதற்கும், விசாரணை முடிந்த பிறகும்கூட பேசுவதற்கு தடை சொல்கிறது.
இந்த சட்டத்தின் கீழ் நீதிபதிகள் அல்லது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது பாலியல் ஒடுக்குமுறை புகார் அளிக்க அனுமதிக்கப்படவில்லை என்பதையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியுள்ளது.
சட்டத்தை வகுப்பவர்கள், சட்டத்தின் மூலம் நீதியை அளிப்பவர்களும் பெண் மீதான ஒடுக்குமுறைகளை ஆதரிப்பவர்களாகவே இருக்கிறார்கள் என்பதை மேற்கண்ட நிகழ்வுகள் உறுதிபடுத்துகின்றன. இந்துத்துவ பிற்போக்குத்தனத்தை கொள்கையாகக் கொண்டவர்களிடம் ‘புரட்சிகரமான விசயங்களை’ எதிர்நோக்குவது மிகையான எதிர்ப்பார்ப்பாகவே முடிந்திருந்திருக்கிறது.
கலைமதி
நன்றி : த வயர்.