லோவின் திட்டங்களின் செயற்களமான பிரான்ஸ் | பொருளாதாரம் கற்போம் – 28
அனுபவமிக்க அரசியல்வாதியும் ராஜ்ஜியப் பிரமுகருமான லோ பொறுப்பு அரசரின் ஆதரவோடு பிரான்சின் மொத்த பணவியல், கடன் வசதி அமைப்பையும் நம்பிக்கையோடு கைப்பற்றினார்.
ஸ்காட்லாந்தின் நாடாளுமன்றம் லோ கொடுத்த வங்கி நிறுவும் திட்டத்தை நிராகரித்தது. இங்கிலாந்தின் அரசாங்கம் பத்து வருடங்களுக்கு முன்பு லோ செய்த குற்றத்துக்கு மன்னிப்பு வழங்குவதற்கு இரண்டு தடவை மறுத்தது. இங்கிலாந்தையும் ஸ்காட்லாந்தையும் இணைப்பதற்குரிய சட்டம் தயாரிக்கப்பட்டு வந்தபடியால் லோ மறுபடியும் ஐரோப்பாவுக்குப் போவது அவசியமாயிற்று.
அங்கே அவர் அநேகமாகச் சூதாட்டத்தையே தொழிலாகக் கொண்டவரைப் போல வாழ்க்கை நடத்தினார். அவர் ஹாலந்து, இத்தாலி, பிளான்டர்ஸ், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் சில சமயம் குடும்பத்தோடும் வேறு சமயங்களில் தனியாகவும் வசித்தார்; எல்லா இடங்களிலுமே அவர் சூதாடினார்; பத்திரங்கள், நகைகள், பழைய காலத்து ஓவியங்கள் ஆகியவற்றில் வணிகச் சூதாட்டத்திலும் ஈடுபட்டார்.
மொன்டெஸ்க்யூ (Charles Montesquieu)
மொன்டெஸ்க்யூ தன்னுடைய பாரசீகத்திலிருந்து எழுதிய கடிதங்கள் என்ற புத்தகத்தில் (1721) பின்வரும் கிண்டலான கருத்தைச் சொல்லியிருக்கிறார். ஐரோப்பாவில் சுற்றுப் பயணம் செய்கின்ற பாரசீகக்காரர் கூறுவதாக அதை எழுதியிருக்கிறார். “ஐரோப்பாவில் எங்கும் சூதாட்டம் நடக்கிறது; சூதாடியாக இருப்பது ஒரு வகையான அந்தஸ்தாகும். உயர்ந்த குடிப்பிறப்பு, நேர்மை, செல்வம் ஆகியவற்றுக்குப் பதிலாக சூதாடி என்ற பட்டமே போதுமானதாக இருக்கிறது. அந்தப் பட்டத்தைக் கொண்டிருப்பவர்கள் எல்லோரும் நேர்மையுள்ள மனிதர்களின் வரிசையில் இடம் பெறுகிறார்கள்…”
இப்படிப்பட்ட வழியின் மூலமாகவே லோ சமூக அந்தஸ்தையும் செல்வத்தையும் அடைந்தார். சூதாட்டத்தில் அவருடைய திறமையைப் பற்றி அதிகமான கட்டுக்கதைகள் பரவின. அவருடைய உலையா அமைதி, நுண்ணறிவு, நினைவாற்றல், அதிர்ஷ்டம் ஆகியவற்றின் மூலம் பெரும் வெற்றிகள் சிலவற்றை அடைந்தார். அவர் கடைசியாகப் பாரிசில் குடியேறுவது என்று முடிவு செய்த பொழுது தன்னோடு 16 லட்சம் லிவர் பணமும் கொண்டு வந்தார். ஆனால் பாரிஸ் நகரத்தில் நடைபெற்று வந்த சூதாட்டமும் ஊக வாணிகமும் மட்டும் அவரை ஈர்க்கவில்லை.
பிரான்சில் பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடைந்த பொழுது தன்னுடைய திட்டம் அங்கே ஏற்றுக் கொள்ளப்படும் என்ற நம்பிக்கை அவருக்கு அதிகரித்தது. அங்கே அரசாங்கக் கருவூலங்கள் காலியாக இருந்தன; பெரிய அளவில் தேசியக் கடன் ஏற்பட்டிருந்தது; கடன் வசதி குறைவாக இருந்தது; பொருளாதாரத்தில் தேக்கமும் தாழ்வும் ஏற்பட்டிருந்தது. காகித நோட்டுகளை வெளியிடும் அதிகாரத்தைக் கொண்ட அரசு வங்கியை ஏற்படுத்துவதன் மூலம் இந்தக் குறைகளை நீக்க முடியும் என்ற ஆலோசனையை லோ முன்வைத்தார்.
பதினான்காம் லுயீ
1715 செப்டெம்பர் மாதத்தில் பதினான்காம் லுயீ இறந்த பொழுது அந்தத் தருணம் வந்தது. பழைய அரசர் மரணமடைந்ததால் அவருடைய வாரிசு வயதுக்கு வரும் வரையிலும் அவர் சார்பில் ஆட்சி செய்வதற்கு அதிக வாய்ப்புப் பெற்ற ஒருவரிடம் இதற்கு முன்பே லோ தன்னுடைய கருத்தைச் சொல்லிவந்தார்.
அவர் பழைய அரசரின் மைத்துனரான ஆர்லியானைச் சேர்ந்த ஃபிலீப் கோமகன். இந்த ஸ்காட்லாந்துக்காரரின் பேச்சில் ஃபிலீப்புக்கு நம்பிக்கை ஏற்பட ஆரம்பித்தது. அரசாட்சி செய்வதற்குத் தன்னோடு போட்டியிட்டவர்களை ஒழித்து விட்டு பொறுப்பு அரசர் பதவியைக் கைப்பற்றியதும் ஃபிலீப் உடனே லோவைக் கூப்பிட்டனுப்பினார்.
ஃபிலீப்பின் ஆலோசகர்களான மேற்குடியினரும் பாரிசிலிருந்த நாடாளுமன்றத்தினரும் அவருடைய திட்டத்தை எதிர்த்தனர். அவர்கள் தீவிரமான நடவடிக்கைகளைக் கண்டு அஞ்சினர்; மேலும் லோ அந்நிய நாட்டைச் சேர்ந்தவராதலால் அவர் மீது அவநம்பிக்கை கொண்டிருந்தனர். இத்தகைய எதிர்ப்புகளைச் சமாளிப்பதற்கு ஆறு மாதங்களுக்கு அதிகமாயிற்று. அரசு வங்கி என்ற கருத்தைக் கைவிட்டுத் தனியார் கூட்டுப் பங்குகளைக் கொண்ட வங்கியை ஏற்படுத்துவதற்கு லோ இணங்க நேரிட்டது. ஆனால் லோ -வின் செயல் திட்டத்தில் இது ஒரு ஏய்ப்பு நடவடிக்கையே; அந்த வங்கி ஆரம்பத்திலிருந்தே அரசுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டிருந்தது.
1716 -மே மாதத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஜெனரல் வங்கி அதன் நடவடிக்கைகளின் முதல் இரண்டு வருடங்களில் மாபெரும் வெற்றியடைந்தது. திறமைமிக்க நிர்வாகியும் நுண்ணறிவுடைய வணிகரும், அனுபவமிக்க அரசியல்வாதியும் ராஜ்ஜியப் பிரமுகருமான லோ பொறுப்பு அரசரின் ஆதரவோடு பிரான்சின் மொத்த பணவியல், கடன் வசதி அமைப்பையும் நம்பிக்கையோடு கைப்பற்றினார். இந்த வங்கி வெளியிட்ட நோட்டுகள் – வெளியீட்டின் அளவை இந்தக் கட்டத்தில் லோ வெற்றிகரமாக நிர்வகித்தார் – செலாவணியில் புகுத்தப்பட்டபொழுது அவை பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டன; சில சமயங்களில் உலோகப் பணத்தோடு ஒப்பிடும் பொழுது, உயர் மதிப்போடு அங்கீகரிக்கப்பட்டன.
பாரிஸ் நகரத்தின் லேவாதேவிக்காரர்களோடு ஒப்பிடும் பொழுது வங்கி குறைவான வட்டிக்குக் கடன் வழங்கியதோடு, வேண்டுமென்றே தொழில் துறை, வர்த்தகத்துக்குப் பணத்தைக் கொடுத்தது , தேசிய பொருளாதாரத்தில் புது ஊக்கம் ஏற்பட்டது; இதை எல்லோருமே பார்க்க முடிந்தது.
நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983