“ஜெய் ஸ்ரீராம் என்பது போர்க்கால அழுகையாக மாறிவிட்டது” : கும்பல் வன்முறைகளுக்கு எதிராக திரைக்கலைஞர்கள், செயல்பாட்டாளர் கடிதம்

நாற்பதுக்கும் மேற்பட்ட திரைக்கலைஞர்கள், செயல்பாட்டாளர்கள், கல்வியாளர்கள் கும்பல் வன்முறைகளை தடுத்து நிறுத்தும்படி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்தக் கடிதத்தில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற முழக்கம் தூண்டிவிடக்கூடிய போர்க்கால முழக்கமாக மாறி, நாட்டின் பல்வேறு இடங்களில் கும்பல் வன்முறைகளுக்குக் காரணமாக உள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

“முசுலீம்கள், தலித்துக்கள், மற்ற சிறுபான்மையினர் மீதான கும்பல் வன்முறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் கடிதத்தின் மூலம் கோரியுள்ளனர். 2016-ம் ஆண்டு முதல் 840-க்கும் மேற்பட்ட தலித்துகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் கூறியுள்ளதை கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள அவர்கள், இந்த வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்களுக்கு மிகச் சொற்ப அளவிலேயே தண்டனை கிடைத்துள்ளதையும் கூறியுள்ளனர்.

அண்மையில் ஜார்க்கண்டில் கும்பல் வன்முறையாளர்களால் முசுலீம் இளைஞர் ஒருவர் அடித்து கொல்லப்பட்டார். இது தேசிய அளவில் பேசுபொருள் ஆன பின், மோடி நாடாளுமன்றத்தில் அதுகுறித்து வாயைத் திறந்து பேசினார். இதை விமர்சித்துள்ள கலைஞர்கள், “திரு. பிரதமர் அவர்களே நீங்கள் நாடாளுமன்றத்தில் பேசிவிட்டால் மட்டுமே கும்பல் வன்முறைகளுக்கு தீர்வு காண முடியாது. இந்தக் குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். பிணையில் வரமுடியாத குற்றமாக இதைப் பார்க்க வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.

படிக்க:
மேற்கு வங்கம் : தொடர்கிறது காவிக் குண்டர்களின் ‘ஜெய் ஸ்ரீராம்’ தாக்குதல்கள் !
♦ #SaveVAIGAIFromRSS : ஆர்.எஸ்.எஸ் சதியிலிருந்து வைகை நதியைக் காப்போம் !

அபர்ணா சென், அனுராக் காஷ்யப், அடூர் கோபாலகிருஷ்ணன், மணிரத்னம், ஷ்யாம் பெனகல், ரேவதி, கொங்கனா சென் சர்மா உள்ளிட்ட திரைக்கலைஞர்களும் வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா, எழுத்தாளர் அமித் சவுத்ரி, கல்வியாளர் ஆசிஸ் நந்தி உள்ளிட்ட 49 பேர் இந்தக் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.

“வருத்தமளிக்கும் விதமாக ஜெய் ஸ்ரீராம் என்பது தூண்டக்கூடிய போர்க்கால அழுகையாக இன்று மாறி, சட்டம் – ஒழுங்குப் பிரச்சினையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. பல கும்பல் வன்முறைகள் அதன் பெயரால் நடக்கின்றன. மதத்தின் பெயரால், இத்தனை கொடூரமான வன்முறைகள் நடப்பது அதிர்ச்சியளிக்கிறது! இது ஒன்றும் பழங்காலம் அல்ல! நாட்டின் பெரும்பான்மையினருக்கும் ராமன் என்கிற பெயர் புனிதமானது. இந்நாட்டின் உயர்ந்த அதிகாரம் படைத்த நீங்கள், ராமனின் பெயரை சீர்குலைக்கும் இதுபோன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த வேண்டும்.” என பிரதமரிடம் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் அதில், “எதிர்க்குரலோ, மாற்றுக்கருத்தோ இல்லாமல் ஜனநாயம் என்பது இல்லை. எனவே, மக்களை ‘தேசவிரோதி’; ‘நகர்ப்புற நக்ஸல்’ என முத்திரை குத்துவது தடுக்கப்பட வேண்டும். ஆளும் கட்சியை எதிர்ப்பது நாட்டை எதிர்ப்பது ஆகாது. ஆட்சியில் இருக்கும் கட்சி, நாடாகிவிடாது. அது நாட்டில் உள்ள ஒரு அரசியல் கட்சி அவ்வளவே. எனவே, அரசுக்கு எதிரான நிலைப்பாடு, நாட்டுக்கு எதிரான நிலைப்பாடாக சமன்படுத்த முடியாது. எதிர்ப்புணர்வுக்கான திறந்த சூழல் நசுக்கப்படக்கூடாது, அது நாட்டை பலமாக்கத்தான் பயன்படும்.” எனவும் தெரிவித்துள்ளனர்.

படிக்க:
அர்னாப் கோஸ்வாமி : ஏன் இந்த தேசியக் கொலைவெறி ?
♦ தேசிய கல்விக் கொள்கை 2019 நிராகரிப்போம் ! – ஒரு நாள் கருத்தரங்கச் செய்திகள் படங்கள்

இந்தக் கடிதம் வெளியான சில மணி நேரங்களில் காவி கும்பல், கடிதம் எழுதியவர்களை ‘அர்பன் நக்ஸல்’ என முத்திரை குத்தி, வெறுப்பை சமூக ஊடகங்களில் விதைக்க ஆரம்பித்தது. மேற்கண்ட கடிதத்தில் கையெழுத்திட்டவர்களை புறக்கணிக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு வாய்ப்பளிக்காமல் பட்டினி போட்டுக் கொல்ல வேண்டும் என்றும் நச்சை கக்கினர் சிலர்.

காவி கும்பலின் ஊடக தலைவரான அர்னாப், ‘வெறுப்பின்மை லாபி’ நடத்துவதாக கடிதத்தில் கையெழுத்திட்டவர்கள் குறித்து நஞ்சு கக்கினார்.

அர்னாபின் வெறுப்பு பிரச்சாரத்தை திரைக்கலைஞர் அபர்ணா சென் முறியடித்தபோது, மூளை மழுங்கிய சங்கியாக அதை எதிர்க்கொள்ளும் நிலையில் அவர் இல்லை.

பிரதமருக்கு அனுப்பிய கடிதத்துக்கு அரசு ஆதரவாக பதிலளிக்கும் என்பது குறைந்தபட்ச நாகரிக நடைமுறை. கசாப்புக் கடைக்காரனிடம் ஆட்டை வெட்டாதே என மனு அனுப்பினால் பதில் கிடைக்குமா என்ன ? நாகரிகத்துக்காகக் கூட பதிலளிக்காத காவி அரசு, தனது ட்ரோல்களையும் ஊடக ரவுடிகளையும் வைத்து எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தியவர்களை ஒடுக்கப்பார்க்கிறது. எல்லா விதங்களிலும் தான் ஒரு பாசிச அரசு என்பதை சொல்லிக்கொண்டே இருக்கிறது இந்த அரசு.


அனிதா
நன்றி : ஸ்க்ரால்