தேசிய கல்விக் கொள்கை 2019 நிராகரிப்போம் !
தேசிய கல்விக் கொள்கை 2019 (தே.க.கொ.) குறித்த ஒருநாள் தேசிய கருத்தரங்கை பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்திருந்தது. இக்கருத்தரங்கம் 20.07.2019 அன்று வினோபா அரங்கம், சென்னையில் நடைபெற்றது. இதில் பேராசிரியர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இக்கருத்தரங்கிற்கு பேராசிரியர் வீ. அரசு தலைமை தாங்கினார். கல்வி உரிமைக்கான அகில இந்திய மன்றத்தின் தலைமைக் குழு உறுப்பினர் பேராசிரியர் ஹரகோபால் சிறப்புரையாற்றினார். இக்கருத்தரங்கில் பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட 220 பேர் கலந்து கொண்டனர்.
பள்ளிக்கல்வியையொட்டி தேசிய கல்விக் கொள்கை முன்வைத்துள்ள பரிந்துரைகளையும் அதனால் உருவாகப் போகும் பாதிப்புகள் குறித்தும் ஆசிரியர் மூர்த்தி விரிவாகப் பேசினார். இப்பரிந்துரைகள் தனியார் பள்ளிகளின் வளர்ச்சிக்கே வழிவகை செய்யும் என்று குறிப்பிட்டார்.
பேராசிரியர் ஹரகோபால் சிறப்புரையாற்றினார். அவர் தேசிய கல்விக் கொள்கை அரசியல் அமைப்புச் சட்டம் கூறியவற்றிக்கு ஏதிராக உள்ளது, அமெரிக்க பல்கலைக்கழங்கள் இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு தகுந்தாற் போல் மாற்றங்களை உயர்கல்வியில் கொண்டுவருவதற்கான பரிந்துரைகளை தே.க. கொ. முன்வைத்துள்ளது எனக் கூறினார். உலக வர்த்தக் கழகத்தின் (WTO) ஒப்பந்தத்திற்கு தகுந்தவாறு இந்திய கல்விக் கட்டமைப்பை மாற்றுவதற்கான பரிந்துரைகளையே தே.க.கொ. முன்வைத்துள்ளது. எனவே அதை நிராகரிக்க வேண்டும் எனக் கூறினார்.
அடுத்து பேசிய பேராசிரியர் வீ. அரசு, தற்போதுள்ள உயர்கல்வி கட்டமைப்பைக் கலைத்து விட்டு ஒற்றை அதிகாரம் கொண்ட ராஷ்ட்ரிய சிக்சா ஆயோக் அமைப்பை உருவாக்குவது மற்றும் தரம் என்ற பெயரில் உயர்கல்வி நிறுவனங்களை வகை பிரிப்பது போன்ற பரிந்துரைகளின் நோக்கங்களைப் பற்றி விரிவாகப் பேசினார். உயர்கல்வி மீதான ஒட்டுமொத்த அதிகாரத்தையும் மோடி தலைமையிலான சிறு குழுவிடம் கொண்டு செல்கிறார்கள். இதன் மூலம் RSS மொத்த உயர்கல்வியையும் கட்டுப்படுத்த வாய்ப்புள்ளாகக் கூறினார்.
படிக்க:
♦ தேசிய கல்விக் கொள்கை -2019-ஐ நிராகரிப்போம் ! கருத்தரங்கம் | Live Streaming
♦ தமிழகமெங்கும் புதிய கல்விக் கொள்கை நகல் எரிப்பு – செய்தி – படங்கள்
பேராசிரியர் கருணானந்தன் தே.க.கொ முன்வைக்கின்ற ஹிந்தி, சமஸ்கிருத மொழித் திணிப்பைப் பற்றி விரிவாகப் பேசினார். பேராசிரியர் கதிரவன் மருத்துவம், விவசாயம், பொறியியல் மற்றும் சட்டம் உள்ளிட்ட தொழில்முறை படிப்புகள் பற்றி தே.க.கொ. கூறியுள்ள பரிந்துரைகளையும் அதனால் உருவாகும் பாதிப்புகள் பற்றியும் விரிவாகப் பேசினார். அடுத்து பேசிய மருத்துவர் எழிலன் கடந்த எழுபது ஆண்டுகாலமாக இடஒதுக்கீடு மற்றும் சமூக நீதிக் கொள்கையினால் தமிழ்நாடு பெற்றுவந்த பலன்களை தே.க.கொ.-ன் பரிந்துரைகள் எவ்வாறு தகர்த்தெறியப்போகிறது என்பதை விரிவாகப் பேசினார். முதலாளிகளின் லாபத்திற்காக பெரும்பான்மை மக்களை ஆரம்பக் கல்வியிலிருந்து உயர்கல்வி வரை தொடர்ந்து வடிகட்டுவதே தே. க. கொ. நோக்கம் என்பதை உதாரணங்களோடும் புள்ளிவிவரங்களோடும் விளக்கினார்.
பேராசிரியர் அமலநாதன் தே.க.கொ.-யை மக்களிடம் கொண்டு செல்வதற்கான போராட்டங்களை முன்னெடுப்பதற்கான அவசியத்தைப் பற்றியும் பேராசிரியர் முருகானந்தம் உடல் ஊனமுற்ற மாணவர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சனைகள் அவர்களின் மேம்பாட்டிற்கான திட்டங்கள் பற்றி தே.க.கொ. புறக்கணிப்பதைப் பற்றியும், முனைவர் ரமேஷ் இந்தியத் தரகு முதலாளிகள் மற்றும் வெளிநாட்டு கல்வி முதலாளிகளின் நலன்களுக்காக எவ்வாறு இந்திய கல்விச் சந்தை உலக சந்தையோடு இணைக்கப்படுவதற்கான பரிந்துரைகளை தே.க.கொ. முன் வைத்துள்ளது என்றும் விளக்கிப் பேசினர்.
இறுதியாக நீதியரசர் ஹரிபரந்தாமன் நிரைவுரையாற்றினார். கல்வி மீதான மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு பறிப்பதற்கான அதிகாரத்தை அரசியலமைப்புச் சட்டமே வழங்கியுள்ளது. கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட்டாலும் என்ட்ரி 66-ன் மூலம் கல்வி நிறுவனங்களை மத்திய அரசு கட்டுப்படுத்த முடியும். எனவே நமக்கான கல்வி உரிமைகளை பெற இச்சட்டங்களை மாற்றுவதற்கான போராட்டங்கள் முக்கியம் என விரிவாக பேசினார்.
அனைத்து கருத்துரையாளர்களும் தேசிய கல்விக் கொள்கையை நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தி பேசினார். பெரும்பான்மை மக்களுக்கு கல்வி உரிமையை பறிக்கின்ற தேசிய கல்விக்கொள்கை 2019-ஐ அனுமதிக்க கூடாது. முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும்.
பெரும்பான்மை மக்களின் நலன்களுக்கான கல்விக் கொள்கையை பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் இணைந்து உருவாக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை ஆதரித்து கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கையெழுத்திட்டனர்.
தகவல் :
பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்பு குழு,
(Co-ordination Committee for Common Education)
சென்னை. தொடர்புக்கு : 94443 80211, 72993 61319