ராஜஸ்தான் குண்டுவெடிப்புக் குற்றச்சாட்டில் கடந்த 1996-ம் ஆண்டு கைதான போது கார்பெட் தொழில் செய்துகொண்டிருந்த அலி பாட்டின் வயது 25. குண்டுவெடிப்புக் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என இராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தால் கடந்த வாரம் விடுவிக்கப்பட்டார் அலி. அதாவது 23 ஆண்டுகள் கழித்து குற்றவாளி இல்லை என அறிவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். தனது இளமையையும், பெற்றோரையும் இழந்த அவர், செய்யாத குற்றத்துக்கு கால் நூற்றாண்டு தண்டனை பெற்று குற்றமற்றவராக திரும்பியிருக்கிறார்.

Acquitted after 23 years in jail
23 ஆண்டுகால சிறைவாசத்துக்கு பிறகு விடுதலை பெற்ற அப்பாவிகள்.

கடந்த செவ்வாய்கிழமை லதீப் அகமது பாஜா (42), அலி பாட் (48), மிர்சா நிசார் (39), அப்துல் கோனி (57), ரயாஸ் பெக் (56) ஆகியோர் சிறையிலிருந்து விடுதலை பெற்றனர். ரயாஸ் கடந்த 1997-ம் ஆண்டு முதல் சிறையில் இருந்தார். மற்றவர்கள் 1996 முதல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். 23 ஆண்டுகாலத்தில் இவர்கள் டெல்லி, அகமதாபாத் சிறைகளில் இருந்த நிலையில், இவர்களுக்கு பிணையோ, பரோலோ வழங்கப்படவில்லை.

திங்கள்கிழமை சம்லேதி குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து இவர்களை விடுவித்த நீதிமன்றம், இவர்களுக்கு இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான டாக்டர். அப்துல் ஹமீதுக்கும் உள்ள தொடர்பு நிரூபிக்கப்படவில்லை என்றும், அரசு தரப்பு இவர்களுக்கு எதிரான சதிக் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்கள் தரவில்லை என்றும் கூறியது.

சிறையிலிருந்து விடுதலையான இவர்கள் ஐவரும், குற்றப் புலனாய்வு பிரிவு தங்களை இந்த வழக்கில் குற்றச்சாட்டில் சேர்த்திருப்பது தெரியாது என்கின்றனர். ஐவரும் வெவ்வேறு ஊர்களைச் சேர்ந்தவர்கள். ரயாஸ் அக்ராவைச் சேர்ந்தவர். அப்துல் கோனி, ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தைச் சேர்ந்தவர். மற்ற மூவர் ஸ்ரீநகரைச் சேர்ந்தவர்கள்.

குண்டுவெடிப்பில் கைதாகும் முன், அலி கார்பெட் வியாபாரம் செய்துகொண்டிருந்தார். அகமது காஷ்மீர் கைவினைப்பொருட்களை டெல்லியிலும் காத்மாண்டுவிலும் விற்பனை செய்துகொண்டிருந்தார். நிசார் பத்தாம் வகுப்பு மாணவர். அப்துல் கோனி, பள்ளி நடத்திக் கொண்டிருந்தார்.

23 ஆண்டுகால சிறைவாசத்தால் “நாங்கள் காலடி எடுத்து வைக்கும் உலகம் குறித்து எங்களுக்கு எதுவுமே தெரியவில்லை” என்கிறார் அப்துல்.

“நாங்கள் சிறையில் இருந்தபோது உறவுகளை இழந்தோம். என்னுடைய அம்மாவும் அப்பாவும் இறந்துவிட்டார்கள். நாங்கள் விடுதலையாகிவிட்டோம். ஆனால், நாங்கள் இழந்த நாட்களை யார் மீட்டுத் தருவார்கள்” என்கிறார் ரயாஸ். தன்னுடைய சகோதரிக்கு திருமணமாகி, அவருடைய மகளும் திருமணத்துக்கு தயாராகிவிட்டார் என்கிறார் அவர்.

படிக்க:
♦ ரஞ்சன் கோகாய் பாலியல் பிரச்சினை : பெண்ணிற்கு எதிராக புகார் அளித்தவர் எஸ்கேப் !
♦ ராமனின் பெயர் சீர்குலைக்கப்படுவதை நிறுத்துங்கள் : மோடிக்கு கலைஞர்கள், செயல்பாட்டாளர்கள் கடிதம் !

1996-ம் ஆண்டு மே 22-ம் தேதி, ஜெய்ப்பூர் – ஆக்ரா நெடுஞ்சாலையில் உள்ள சம்லேதி என்ற கிராமத்தின் அருகே பேருந்தில் குண்டுவெடித்ததில் 14 பேர் கொல்லப்பட்டார்கள். 37 பேர் காயமடைந்தார்கள். 13 பேர் இறக்கக் காரணமான டெல்லி லஜ்பத் நகர் குண்டுவெடிப்பு நடந்த அடுத்த நாள் இந்த குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது.

இந்த வழக்கில் 12 பேர் மீது குற்றம்சாட்டப்பட்ட நிலையில், ஏழு பேர் இதுவரை விடுதலையாகியுள்ளனர். 2014-ம் ஆண்டு ஒருவர் விடுவிக்கப்பட்டார். கடந்த செவ்வாய்க்கிழமை ஏழு பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

23 ஆண்டுகளுக்குப் பின் அனைத்தையும் இழந்து திரும்பியிருக்கிறார்கள் இவர்கள். ஊருக்குத் திரும்பிய அலி பாட், தன்னுடைய பெற்றோரின் கல்லறையில் விழுந்து அழுகிறார். இரக்கமற்ற, உயிரற்ற நீதி அமைப்பின் முன் தான் இழந்த 23 ஆண்டு காலத்தைக் கேட்டு அழுவதுபோல் உள்ளது அந்தக் காட்சி.

படிப்படியாக இந்துத்துவமயமாக்கப்பட்ட இச்சமூகம் எவ்வித உணர்ச்சியுமின்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது !


அனிதா
நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ் 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க