டந்த ஒராண்டில் இல்லாத அளவிற்கு, 2019, ஜூன் மாதத்தில் இந்திய சேவைத்துறை தேக்க நிலையை எட்டியிருப்பதாக நிக்கி / ஐஎச்எஸ் மார்கிட் குறியீடு (Nikkei / IHS Markit index) ஆய்வறிக்கை கூறுகிறது. ஒருபுறம் விற்பனை தேக்கமடைந்திருக்கிறது. மறுபுறமோ 22 மாதங்களில் இல்லாத அளவிற்கு வேலை வாய்ப்பு உருவாக்கம் மிகவும் குறைந்திருக்கிறது என்று அந்த ஆய்வு மேலும் கூறுகிறது.

பர்சேசிங் மேனேஜர் இண்டெக்ஸ் (Purchasing Managers’ Index) என்பது முதலாளித்துவ பொருளாதார வளர்ச்சி குறித்த ஒரு குறியீடு. தனியார் நிறுவனங்களில் வளர்ச்சி குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இந்த ஆய்வறிக்கை வெளியிடப்படுகிறது.

நிக்கி / ஐஎச்எஸ் குறியீடு 2018 டிசம்பர் மாதம் 53.2-ஆக இருந்து. 2019 ஜனவரியில் 52.2-ஆகக் குறைந்தது. அது கடந்த 2019, மே மாதம் மேலும் குறைந்து 50.2-ஆகவும், ஜூன் மாதத்தில் 49.6-ஆகவும் குறைந்து, கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகிவிட்டது.

பலவீனமான விற்பனை, போட்டி அழுத்தங்கள் மற்றும் சாதகமற்ற வரிவிதிப்பு அனைத்தும் சேர்ந்து இந்த மோசமான நிலையை ஏற்படுத்தி விட்டதாக அறிக்கை கூறுகிறது. ஆனால், வியாபாரத்திற்கு சாதகமான வழிமுறைகளை ஏற்படுத்துவதாகக் கூறி மோடி மீண்டும் பிரதமரானது குறிப்பிடத்தக்கது.

“சில தனியார் நிறுவனங்கள், பொருள்கள் மற்றும் சேவை வரியை குறிப்பாக ஹோட்டல் வரியை இதற்கு காரணமாகக் குறிப்பிடுவது சற்று ஆச்சரியமாக இருக்கிறது” என்று ஐஎச்எஸ் மார்க்கிட்டின் முதன்மை பொருளாதார வல்லுனரும் அறிக்கையின் ஆசிரியருமான பொலியானா டி லிமா கூறினார்.

மேலும் ஆர்டர்கள் குறைந்து விட்டதால் உற்பத்தித்துறையிலும் வளர்ச்சி குறைந்து விட்டதாக இதன் துணை நிறுவன ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. நிக்கி இந்தியா உற்பத்தி கொள்முதல் மேலாண்மைக் குறியீடு (The Nikkei India Manufacturing Purchasing Managers’ Index) மே மாதம் 52.7-ஆக இருந்து ஜூனில் 52.1-ஆக சரிந்து விட்டது என்று அது குறிப்பிடுகிறது.

படிக்க:
NEP 2019 : மனுநீதியின் புதிய பதிப்பு | பேராசிரியர் கருணானந்தன் நேர்காணல்
அசாம் : குடியேறி தடுப்பு முகாம்களில் 25 பேர் மரணம்

சேவைத்துறை மற்றும் உற்பத்தித்துறை இரண்டையும் சேர்த்துப் பார்த்தால் நிக்கி இந்தியா தொகுப்பு குறியீட்டு வளர்ச்சி (Nikkei India Composite PMI Output Index) மே மாதம் 51.7-லிருந்து ஜுனில் 50.8-ஆக வீழ்ச்சியடைந்து விட்டது.

“ஆண்டுத் தொடக்கத்தில் காணப்பட்ட, நிறுவனங்களின் வலுவான வளர்ச்சி விகிதங்களும் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு உருவாக்கும் தன்மையும் நீடிக்குமா என்பது குறித்த கவலையை இந்த ஆய்வறிக்கையின் முடிவுகள் ஏற்படுத்துகின்றன” என்று கூறியிருக்கிறார் டி லிமா.

நிலவும் உலக பொருளாதார நெருக்கடி சூழலில், இந்தியாவில் உற்பத்தித்துறை ஏற்கெனவே படுத்துவிட்ட நிலையில் தற்போது சேவைத்துறையும் சரிந்து வருகிறது. வேலைவாய்ப்பு நிலைமைகளும் மோசமடைந்து வருகிறது. இது அடுத்துவரவிருக்கும் பொருளாதார வீழ்ச்சியின் முன்னறிவிப்பு எனப் பதட்டமடைகின்றன உலக நாடுகள். இங்கே பியர் க்ரில்லுடன் இணைந்து கரடி மேய்க்கச் செல்கிறார் மோடி !


சுகுமார்
நன்றி : Economic times, The wire

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க