எங்கள் மாணவர் ஒருவர் மிகையான மனக்கவலைக்காக என்னை சந்திக்க வந்திருந்தார். எப்போது நீங்கள் இந்த சிக்கல் குறித்து கவுன்சிலரிடம் பேச வேண்டும் என முடிவு செய்தீர்கள் என கேட்டேன். ஓராண்டுக்கு முன்பு என பதில் சொன்னார். தாமதமாக சந்திப்பதற்கு ஏதேனும் காரணம் இருக்கிறதா என கேட்டேன். எங்கம்மாகிட்ட அனுமதி கேட்டேன், அதெல்லாம் மெண்ட்டலா பிரச்சினை இருக்குறவங்களுக்குத்தான் தேவை. உனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அதனால் போக வேண்டாம் என்று சொல்லிவிட்டார்” என்றார். (குறிப்பு: என்னை சந்தித்தபோது அவருக்கு மகிழ்ச்சியின்மையோடு மரண விருப்பமும் இருந்தது.)
பள்ளியொன்றில் பணியைத் துவங்கிய ஆறு மாதத்தில் ஒரு உயர்நிலை வகுப்பு ஆசிரியர் கேட்டார் “ ஆறு மாசமா வேலை செய்யிறீங்க, ஆனாலும் பசங்க பிஹேவியர்லயும் படிப்புலயும் எந்த முன்னேற்றமும் இல்லையே?”
இவை எல்லாமே சென்னையில் உள்ள பெயர்பெற்ற பள்ளி வளாகங்களில் கேட்ட குரல்கள். ஆகப்பெரும்பாலான பள்ளிகளுக்கு ஆற்றுப்படுத்துனர் எனும் பதமே அறிமுகமாகியிருக்காது. கவுன்சிலிங் / கவுன்சிலர் போன்ற வார்த்தைகளை அறிந்தவர்களுக்கும்கூட அவர்கள் பணி என்ன என்பது பற்றியும் அதன் அவசியம் பற்றியும் தெளிவில்லை. தெரியாதவர்களால் உருவாகும் சிக்கல்கள் ஒரு பக்கம் என்றால் அரைகுறையாக தெரிந்தவர்களும் / தவறாக புரிந்தவர்களும் வேறு வகையான சிக்கல்களை உருவாக்குகிறார்கள். கவுன்சிலர் சமூகத்திற்குள்ளும் பல அதிர்ச்சிகளை காண முடிகிறது.
நான்-வெஜ் நெறைய சாப்பிடுறதால இப்போ பசங்களுக்கு அதிகமாக ஆத்திரம் வருகிறது என்றார் ஒரு பிரபல ஆற்றுப்படுத்துனர் மற்றும் பயிற்சியாளர். அவர் பலமுறை தொலைக்காட்சிகளில் பேசியவர் அச்சு ஊடகம் ஒன்றில் தொடர் எழுதியவர். சுய இன்ப பழக்கத்தை கைவிட ஆலோசனை வழங்கியிருக்கிறேன் என்றார் இன்னொரு இளம் ஆற்றுப்படுத்துனர் (கல்லூரியில் பணியாற்றுகிறார்). திகைத்துப்போய் சுயஇன்பம் தவறானதென்று எப்படி முடிவுக்கு வந்தீர்கள் என கேட்டோம். இதென்ன கேள்வி, அது தவறென்றுதானே நம் மதங்களும் ஆயுர்வேதமும் சொல்கிறது என பதில் கேள்வி கேட்டார். (ஆயுர்வேதம் அதனை தவறென்று சொல்கிறதா என்று எனக்கு தெரியாது).
படிக்க:
♦ சைவ உணவுப் பழக்கத்தால் உடல், மனநலக் குறைபாடு ஏற்படுமா ?
♦ ஒருநாடு ஒருதேர்தல் : இந்து ராஷ்டிரம் அணிந்துவரும் முகமூடி !
பள்ளி வளாகங்களில் ஒரு மனநலப் பணியாளரின் தேவை முன்னெப்போதையும்விட இப்போது அதிகம். இந்திய மக்கள்தொகையில் 31% பேர் 14 வயதுக்கு கீழானவர்கள். ஏறத்தாழ 50% தீவிர மனநல பிர்ச்சினைகள் (அதாவது வாழ்நாள் முழுக்க நீடிக்கவல்ல சிக்கல்கள்) 14 வயதுக்கு முன்பே ஆரம்பமாகிவிடுகின்றன. உலகம் முழுக்கவே 10 முதல் 20% விழுக்காடு சிறார்களுக்கு உளநல சிக்கல்கள் இருக்கக்கூடும் என தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இன்றைய முதலாளித்துவ சூழல் இன்னும் தீவிரமாக மனநல சிக்கல்களை உருவாக்கவல்லது.
தாழ்வு மனப்பான்மை, பலவீனமான சுயமரியாதை, தவறான நம்பிக்கைகள் ஆகியவை பிற்காலத்தில் நடத்தை பிரச்சினைகளை உருவாக்கும். இவை எல்லாவற்றையும் அடையாளம் கண்டு ஆரம்பத்திலேயே உரிய வழிகாட்டுதல்களை கொடுத்தால் அவை மாபெரும் பலன்களை கொடுக்கும். ஆனால் இவற்றை பெற்றோராலோ அல்லது ஆசிரியர்களாலோ செய்ய இயலாது. அந்த வேலையை செய்யத்தான் பள்ளிகளில் மனநலப்பணியாளர் (கவுன்சிலர் – ஆற்றுப்படுத்துனர்) அவசியப்படுகிறார்.
மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் உதாரணங்கள் எல்லாவற்றிலும் உள்ள ஆற்றுப்படுத்துதல் பற்றிய புரிதல்கள் தவறானவையே. கவுன்சிலிங் என்பது அறிவுரை சொல்லும் வேலை அல்ல. இன்னும் சொல்வதானால் அதன் அடிப்படை விதியே கவுன்சிலர் மிக அரிதான சமயங்களைத் தவிர வேறெப்போதும் அறிவுரை சொல்லக்கூடாது என்பதுதான்.
தீவிர மனநல சிக்கல்களுக்குத்தான் கவுன்சிலிங் தேவை என்பது உண்மையல்ல. தீவிரமான பிரச்சினைகளை கொண்டிருப்பதாக கருதினால் அவரை ஆற்றுப்படுத்துனர்கள் மனநல மருத்துவர்களிடம் பரிந்துரைப்பார்கள். உளநலத்தில் ஏற்படும் சிறிய இடையூறுகள், உறவுகளில் ஏற்படும் பிரச்சினைகள், நடத்தை மாற்றம், உள (உடல்) நலம் பற்றிய சந்தேகங்கள் ஆகியவற்றை ஒரு ஆற்றுப்படுத்துனரால் சிறப்பாக கையாள இயலும்.
பாலியல் கல்வி, பதின் பருவ மாற்றங்கள், முடிவெடுத்தல், மாணவர்களின் கற்றல் திறனில் சரிவிகித உணவு – சுகாதாரம் பேணுதல் – உறக்கம் ஆகியவற்றின் பங்கு உள்ளிட்ட ஏராளமான வாழ்வியல் தலைப்புக்களை ஒரு கவுன்சிலரால் மேம்பட்ட வகையில் விளக்க முடியும். இப்போது மாணவர்களைக் காட்டிலும் அதிகமான உளவியல் விளக்கங்களும் பயிற்சிகளும் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்குமே தேவைப்படுகிறது, அதனைக் கொடுப்பதும் ஒரு பள்ளி உளவியலாளரின் கடமையே. இவற்றை முறையாக செய்தாலே பின்நாட்களில் வர சாத்தியம் உள்ள பல தீவிரமான சிக்கல்களை தவிர்க்க இயலும்.
பள்ளி ஆற்றுப்படுத்துனரின் தினசரி கடமைகளுக்கு கறாரான வரையறைகள் இல்லை. பள்ளியின் சூழல், மாணவர்களின் சமூக – பொருளாதார பின்புலம், ஆசிரியர்களின் ஒத்துழைப்பு அல்லது ஒத்துழையாமை (அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள நிரந்தர ஆசிரியர்கள் ஒத்துழைப்பதில்லை என்பது கவுன்சிலர்களின் பரவலான குற்றச்சாட்டு. எனக்கு நேரடி அனுபவம் இல்லை) இப்படி பல்வேறு அம்சங்களை பரிசீலித்து தங்கள் வேலைத்திட்டத்தை அந்த பள்ளி கவுன்சிலர் வடிவமைக்கலாம்.
எனக்குத் தெரிந்த சென்னை பள்ளியொன்றில் 9,10-ம் வகுப்பு மாணவர்களில் 50% பேர் புகையிலை அடிமைத்தனம் உள்ளவர்கள். வேறொரு பள்ளியில் ஒற்றைப் பெற்றோர் மட்டும் உள்ள மாணவர்கள் அதிகம் இருக்கிறார்கள். இந்த இரண்டு இடங்களிலும் முற்றிலும் வேறான வேலைத்திட்டங்களை ஆற்றுப்படுத்துனர் செயல்படுத்த வேண்டியிருக்கும்.
ஆயினும் சில அடிப்படையான செயல்பாடுகளை பட்டியலிட இயலும்.
நம்பிக்கையளித்தல் :
நம் பிரச்சினைகளை கேட்கவும் இங்கே ஆள் இருக்கிறது எனும் நம்பிக்கை மாணவர்களிடையே உருவாகும்போதே ஒரு கவுன்சிலரின் வெற்றி துவங்கிவிடுகிறது. பல தவறான முடிவுகளுக்கு பின்னால் இருப்பது பிரச்சினையை சொல்ல ஆளில்லை எனும் சூழல்தான். அப்பாவின் குடிப்பழக்கம் தொடங்கி ஆசிரியர் திட்டிவிட்டார் ஆகவே நாங்கள் தற்கொலை செய்துகொள்ளப்போகிறோம் என்பதுவரை எண்ணற்ற காரணங்களுக்காக மாணவர்கள் என்னை சந்தித்திருக்கிறார்கள். உத்தேசமாக சரிபாதி பேருக்கு தங்கள் பிரச்சினைகளை ஒருவர் முறையாக கேட்டாலே போதும், அவர்கள் இயல்பு நிலைக்கு வந்துவிடுவார்கள்.
முன்பு ஒரு 12 வயது மாணவி சந்திக்க வந்திருந்தார். அவரது பெற்றோர்கள் இருவரும் பணிக்கு செல்பவர்கள். காலை அவரே வீட்டை பூட்டிவிட்டு பள்ளிக்கு வரவேண்டும். அவர் வீட்டுக்கு எதிரேயுள்ள கடையில் வேலைசெய்யும் இளைஞரிடம் காதல்வயப்பட்டிருக்கிறார். அந்த இளைஞன் இந்தப் பெண்ணை தமது ஊருக்கு வரும்படி அழைத்திருக்கிறார். சிறுமிக்கோ போகவேண்டும் எனும் விருப்பமும் செல்வது நல்லதில்லை எனும் எச்சரிக்கையுணர்வும் ஒருங்கே வந்திருக்கிறது. இதனை விவாதிக்க நம்பிக்கையான பெரியவர்கள் யாரும் இல்லை, நண்பர்களிடம் கேட்க பயம் (அவர்கள் பள்ளி ஆசிரியரிடம் சொல்லிவிடக்கூடும் இல்லையா?). ஆகவே அவர் கவுன்சிலரை சந்திக்க முடிவெடுத்தார். அந்த அமர்வுக்குப் பிறகு அவர் காதலரோடு செல்லும் முடிவை கைவிட்டார். நம்பகமான, ரகசியங்களை காப்பாற்றும் ஒரு மனிதர் பள்ளியில் இருப்பதன் அவசியத்தை உணர இந்த உதாரணம் போதுமானது என கருதுகிறேன்.
படிக்க:
♦ ’சுதந்திர’ தேவிகளின் சுடர்கள்தான் ஏவுகணைகளைப் பற்றவைக்கின்றன | படக்கட்டுரை
♦ பாஜக : ஞானஸ்நானத்துக்கு தயாராகும் சாத்தான்கள் | வில்லவன்
துருவங்களிடையே இணக்கத்தை உருவாக்குதல் :
பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோரது தேவைகளும் செயல்பாடுகளும் முற்றிலும் வேறானவை. இது உருவாக்கும் முரண்பாடுகளே அனேக நடத்தை மற்றும் உணர்வுச் சிக்கல்களை தோற்றுவிக்கின்றன. தனித்தனியே கேட்கையில் ஒவ்வொருவரது குரலும் நியாயமானதாகவே இருக்கும். ஒன்றாக கேட்டால் அவ்விடம் ஒரு போர்க்களமாக மாறக்கூடும். ஆனாலும் கொஞ்சம் மெனக்கெட்டால் ஓரெல்லை வரைக்குமான இணக்கத்தை இவர்களிடையே கொண்டுவர இயலும். கற்றல் குறைபாடு கொண்ட சிறார்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சிக்கல் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அது குறித்த தெளிவு இல்லாமல் இருப்பதுதான். போதிய தயாரிப்புக்களோடும் பொறுமையுடனும் தரப்படும் விளக்கங்கள் அந்த மாணவர்களின் வாழ்வை முற்றிலுமாக மாற்றவல்லவை.
ஒருமுறை மூன்றாம் வகுப்பு மாணவருக்கு கற்றல் குறைபாடு இருப்பதாக சந்தேகித்து அவரது அம்மாவிடம் விளக்கினோம். அவர் கடுமையான ஆத்திரமடைந்து என்னை சகட்டுமேனிக்கு முக்கால் மணிநேரம் திட்டினார் (அதாவது என் வழியே பள்ளியை). அவரது நிலையும் புரிந்துகொள்ளக்கூடியதே, மகனுக்கு ஒரு குறைபாடு இருப்பதாக சொல்வதை ஏற்பது அத்தனை இலகுவானது அல்ல. இறுதியில், நான் சொன்ன கருத்தோ அல்லது சொன்ன விதமோ உங்களை காயப்படுத்தியிருந்தால் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி முடிக்க வேண்டியதாயிற்று.
மறுநாள் அவர் கணவர் வந்து கொஞ்சம் நயமாக திட்டினார் (நான் மீடியாவுக்கு போனா என்ன ஆகும் தெரியுமா என்றார்). இந்த கசப்பான அனுபவம் காரணமாக அடுத்த ஒரு மாதத்துக்கு ஆரம்ப வகுப்பு மாணவர்களை சந்திக்கவே பயந்துகொண்டு இருந்தேன். சரியாக இரண்டு மாதங்கள் கழித்து அந்த அம்மா மட்டும் வந்தார், இப்பவெல்லாம் நான் பையனை அடிக்கிறதில்லைங்க.. பையனை ஆவரேஜாவாச்சும் படிக்கவைக்க நான் என்ன செய்யனும்னு சொல்லுங்க என்றார். ஒரு முறையான விளக்கம் தாமதமாகவேனும் வேலை செய்யும் என்பதைப் புரிந்துகொண்ட தருணம் அது.
Psycho – education – உளவியல் ரீதியான அறிவூட்டல் :
கற்றல் குறைபாடுள்ள சிறார்கள் எதனால் வழக்கமான பாணி கற்பித்தலில் சிரமப்படுகிறார்கள், ஏன் பதின் வயது சிறார்கள் எதிர்வாதம் செய்கிறார்கள், எதனால் காதல் குறித்த அறிவுரைகள் மாணவர்களிடம் எடுபடாமல் போகின்றன, செல்போன் எப்படி கற்றல் திறனை பாதிக்கிறது போன்ற ஏராளமான விசயங்களுக்கு அறிவியல்பூர்வமான காரணங்கள் உண்டு. இவை அனேகருக்கு தெரிவதில்லை. இதனால் பலர் இது தொடர்பாக எழும் பிரச்சினைகளுக்கு தவறான முன்முடிவுகளுக்கு செல்கிறார்கள்.
படிக்க:
♦ மனநலம் – மக்களிடம் செல்வோம் | வில்லவன்
♦ இந்திய நாடு, அடி(மை) மாடு !
ஒரு பதினோராம் வகுப்பு மாணவரை கவனமின்மை எனும் காரணத்துக்காக அவரது ஆசிரியர் பரிந்துரைத்தார். பேசுகையில் அவருக்கு சுய இன்ப பழக்கம் குறித்த கடுமையான குற்ற உணர்வு இருந்தது தெரியவந்தது. குற்ற உணர்வு கொள்ள காரணத்தை கேட்டப்போது “அது இறைவனுக்கு எதிரானது இல்லையா” என்றார். இறைவனுக்கு எதிரானது என்றால் அதனை தொடர காரணம் என்ன? என்று கேட்டேன். நான் சுய இன்ப பழக்கம் உள்ளவன் என்பதால் எனக்கு சொர்கத்தில் இடமிருக்கப்போவதில்லை, அதனால் நிறுத்தியும் பலன் இல்லை. ஆகவேதான் நிறுத்தவில்லை, ஆனாலும் அதன் அவமான உணர்வு தொடர்கிறது என்றார்.
அந்த அவமான /குற்ற உணர்வு அவரது பதட்டத்தை அதிகரிக்கிறது, சுய இன்பம் செய்தால் பதட்டம் குறைகிறது. அதிகமான சுய இன்பம் அவரது குற்ற உணர்வை இன்னும் மோசமாக்குகிறது. இந்த சுழல் நிகழ்வு மொத்தமும் சுய இன்பம் குறித்த தவறான மத நம்பிக்கை காரணமாக உருவாவதுதான். இப்படியான ஏராளமாக நம்பிக்கைகளையும் கற்பிதங்களையும் உடைக்க தொடர்ச்சியான psycho-education அவசியம்.
தகவல்களை சேகரித்தல் மற்றும் சேமித்தல் :
போதுமான தகவல்கள் / தரவுகள் இல்லாமல் ஒரு உளநல பிரச்சினையை கையாள்வது என்பது முகவரி தெரியாதவர் முகவரி தெரியாத இன்னொருவருக்கு வழிகாட்டுவதைப் போன்றது. அதில் அதிருஷ்டவசமாக தீர்வு கிட்டலாம். ஆனால் தீர்வு கிட்டாமல் சிக்கல் மோசமாகவே வாய்ப்பு அதிகம். பணியாற்றும் இடம் சார்ந்த தரவுகள் மற்றும் பொதுவான தரவுகள் இரண்டுமே அவசியம். உலகலாவிய அளவில் பள்ளி கல்வியின் பெரும் சவால் போதுமான தரவுகள் இல்லாமையே, அதாவது தகவல்கள் திரட்டப்பட்டு பராமரிக்கப்படாமையே.
உதாரணமாக, எந்த வயதில் ஆபாசப்படம் பார்க்க ஆரம்பிக்கிறார்கள் எனும் தரவுகளோ எந்த வயதில் புகைப்பதற்கான ஆர்வம் வருகிறது எனும் தரவுகளோ அனேகமாக இருப்பதில்லை. இவற்றை பராமரிப்பது என்பது நாம் எந்த இடத்தில் எப்போது கவனம் செலுத்த வேண்டும் என்பதை அறியத்தரும்.
எங்களது முதலாம் ஆண்டு அறிக்கையின் மூலம் ஆற்றுப்படுத்துதலை நாடுவோரில் 35% பேர் எட்டாம் வகுப்பு மாணவர்கள் என்பது தெரிய வந்தது. இதன் அடிப்படையில் அடுத்த கல்வியாண்டில் தடுப்பு நடவடிக்கைகளை முன் வகுப்புக்களில் துவக்க முடிந்தது. பிள்ளைகள் செல்போன் பயன்பாட்டை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் பெற்றோர்களுக்கான வகுப்புக்கள், வகுப்பறையில் காதல் குறித்த அறிவியல்பூர்வமான உரையாடல்கள், தோல்வியின் நேர்மறையான அம்சங்கள் ஆகியவை குறித்த வகுப்பறை விவாதங்களை ஒழுங்கு செய்திருந்தோம். இவை குறிப்பிடத்தக்க அளவில் வேலை செய்தன. குறிப்பாக காதல் சண்டைகள், உடலை காயப்படுத்திக்கொள்வது (செல்ஃப் ஹார்ம்) ஆகியவை மிகக் கணிசமான அளவு குறைந்தது.
பிரச்சினைகளை உரிய இடத்திற்கு தெரியப்படுத்துதல் :
மனம் சார்ந்த எல்லா பிரச்சினைகளையும் ஒரு ஆற்றுப்படுத்துனரால் சரிசெய்ய இயலாது. ஆனால் அவற்றை சரிசெய்ய உகந்த நபருக்கு பரிந்துரை செய்ய இயலும். என் நண்பர் ஒருவர் தமது பள்ளியில் புகையிலை பயன்பாட்டின் விளைவுகளை விளக்கும் நிகழ்ச்சிகளை அடிக்கடி ஏற்பாடு செய்கிறார். அதற்கான நிறுவனங்களை அணுகி துறைசார் வல்லுனர்களையும் வரவைக்கிறார். கற்றல் குறைபாடு குறித்த விளக்க வகுப்புக்களுக்குப் பிறகு குறைந்தது இரண்டு ஆசிரியர்களேனும் தாங்கள் தவறாக கையாண்ட சம்பவங்களை ஒப்புக்கொள்கிறார்கள். தீவிர உளநல சிக்கல் இருப்பதாக சந்தேகிக்கப்படும் சிறார்களை மனநல மருத்துவருக்கு பரிந்துரைப்பது மற்றும் கற்றல் குறைபாடு கொண்ட சிறார்களை சிறப்பு ஆசிரியருக்கு பரிந்துரைப்பது ஆகியவை பள்ளி ஆற்றுப்படுத்துனரின் வழக்கமான வேலைகள். சென்னையில் ஒரு கவுன்சிலர் தமது பள்ளியில் கூல் லிப்ஸ் எனும் போதைப் பொருளை ஆறாம் வகுப்பு மாணவர்கள் பயன்படுத்துவதை கண்டறிந்து பள்ளியை எச்சரித்திருக்கிறார் (அதனால் அவர் வேலையை இழந்தார் என்பது இதன் சோகமான பின்விளைவு).
மேலே சொல்லப்பட்டவற்றை தாண்டி இன்னும் பல வேலைகள் இருக்கின்றன. ஆனாலும் மேலேயுள்ள பணிகளை செய்தாலே (அல்லது செய்ய முடிந்தாலே) ஒரு ஆற்றுப்படுத்துனரால் பிரம்மிக்கத்தக்க நல்விளைவுகளை ஏற்படுத்த இயலும். ஆகவே அரசுப்பள்ளிகளுக்கு தேவையானவை எனும் பட்டியலில் ஆசிரியர்களுக்கு அடுத்தபடியாக ஆற்றுப்படுத்துனரையும் சேர்த்துக்கொள்ளுங்கள். உங்களால் பேச முடிகிற பள்ளிகளில் ஆற்றுப்படுத்துனரை நியமிக்க பரிந்துரை செய்யுங்கள். ஒருவேளை அங்கே அப்படியொருவர் பணியாற்றினால் அவர் மேற்சொன்ன வேலைகளை செய்ய வலியுறுத்துங்கள்.
வில்லவன்
அரசியல் விமர்சகர். வினவு தளத்தில் “வில்லவன் சொல்” எனும் தலைப்பில் பத்தி எழுதுகிறார்.