புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் “தொழிலாளர் சட்டம் ஒழிப்பு : கூட்டுப்பேர உரிமை, உயிர்வாழும் உரிமையும் பறிப்பு !” என்ற தலைப்பில் கடந்த 02.08.2019 அன்று ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் தோழர் சரவணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தனது தலைமையுரையில் “இரண்டாவது முறை ஆட்சி அமைத்துள்ள மோடி தலைமையிலான மத்திய அரசு, தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற 44 தொழிலாளர் நலச் சட்டங்களையும் வெட்டி சுருக்கி 4 விதிமுறை தொகுப்புகளாக கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறது.
அதன் ஒரு பகுதியாக (WAGE CODE BILL) சம்பளப்பட்டுவாடா சட்டம் 1936, குறைந்தபட்ச ஊதிய சட்டம் 1948, போனஸ் சட்டம் 1965, சமவேலைக்கு சம ஊதிய சட்டம் 1976 ஆகியவற்றை உள்ளடக்கி ஊதிய மசோதா 2019 என்றும்.
(OCCUPATIONAL HEALTH, SAFETY AND WORKING CONDITION CODE 2019) தொழிற்சாலைகள் சட்டம் 1948, ஒப்பந்த தொழிலாளர் சட்டம் 1970, மாநிலங்களுக்கு இடையிலான புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான சட்டம் 1995 உள்ளிட்ட 13 சட்டங்களை உள்ளடக்கி பணியிட பாதுகாப்பு, உடல்நலன், சுகாதாரம் மற்றும் வேலைமுறைகள் குறித்த விதிமுறை தொகுப்பு என்ற பெயரில் இரண்டு மசோதாக்களை நாடாளுமன்றத்தின் மக்களைவையில் 23.07.2019 தேதியில் நிறைவேற்றியுள்ளார்கள்.
மேற்கண்ட இரண்டு சட்ட மசோதாக்களும் தொழிலாளி வர்க்கம் போராடி பெற்ற உரிமைகளையும் கார்ப்பரேட் கொள்ளை கும்பலுக்கு பலியிடுகின்ற ‘திருப்பணியை’ மோடி, அமித்ஷா தலைமையிலான காவி – கார்ப்பரேட் பாசிச கும்பல் நிறைவேற்றியுள்ளது. இதனை முறியடிக்க தொழிலாளி வர்க்கம் வீதியில் இறங்கி போராட வேண்டும்.” என கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரை ஆற்றிய திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் தோழர் முகிலன் பேசும் போது:
“இரண்டு சட்ட மசோதாக்களில் உள்ள தொழிலாளர்களுக்கு விரோதமான விதிகளை பட்டியலிட்டதுடன், காலனிய ஆதிக்க காலத்தில் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் காலாவதியானது என்றும்; தொழிலை எளிமையாக்குவது என்றும்; புதிய தொழில் நிலைமைகளுக்கு ஏற்ப சட்டங்களை மாற்றியமைப்பதன் மூலம் அன்னிய முதலீடுகளை ஈர்க்கவும்; வேலைவாய்ப்பை பெருக்கவும் தான் இதை நிறைவேற்றுவதாக பொய்யான பரப்புரைகளை செய்து வருகிறது.
உண்மையில் மூலதனத்தின் லாபவேட்டைக்காக ஏட்டளவில் உள்ள சட்டங்களை கூட ஒழித்துக்கட்டி வருகிறது மோடி கும்பல், கடந்த ஆறு மாதங்களில் ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி நாடு முழுவதிலும் பெரும் அதிர்வலைகளையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
குஜராத்தின் ராஜ்கோட் தொழிற்பேட்டை பகுதியில் மட்டும் கடந்த மாதம் 20,000 பேர் வேலையிழந்துள்ளார்கள் என்றும், ஒரகடம் பகுதியில் உள்ள நிசான் தொழிற்சாலையில் 1,800 பேர் இந்த மாதத்தில் வேலையிழக்கும் அபாய அறிவிப்புகள் வெளிவந்துள்ளன. ஆட்டோமொபைல் தொழில் மட்டுமல்லாமல் அதற்கு மூலப் பொருட்களை சப்ளை செய்யும் SRF, TPI போன்ற நிறுவனங்களும் தற்காலிக வேலைமுடக்கம் (LAY-OFF) அறிவித்துள்ளன.
படிக்க:
♦ வாகன விற்பனையில் மந்த நிலை : 32000 தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் !
♦ மோடி அரசின் தேசிய கல்வி கொள்கை – 2019 நிராகரிக்க வேண்டும் – ஏன் ? | பு.மா.இ.மு வெளியீடு !
இதன் மூலம் வரும் மாதங்களில் வேலைப்பறிப்பு, லேஆஃப் போன்ற நடவடிக்கைகள் மூலம் ஏறக்குறைய 10 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம் அதிகரித்துள்ளது. மேலும் நாட்டின் பொதுத்துறை நிறுவனமான ரயில்வே, தொலைப்பேசி, மின்சாரம் மற்றும் உள்ளிட்ட 46 பொதுத்துறை நிறுவனங்களையும், ராணுவ தளவாட உற்பத்தியையும் தனியாருக்கு தாரைவார்க்கும் திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பட்ஜெட் உரையில் தெளிவுப்படுத்தியுள்ளார்.
ஆகவே ஒட்டுமொத்த உழைக்கும் மக்களின் எதிரிகளாய் மாறிப்போன இந்த அரசு கட்டமைப்பை, கார்ப்பரேட் – காவி பாசிச கும்பலை வீழ்த்த வேண்டிய வரலாற்று கடமை தொழிலாளி வர்க்கத்தின் தோளில் சுமத்தப்பட்டுள்ளது.” இந்த வரலாற்று கடமையை நிறைவேற்ற புரட்சிகர அமைப்புகளில் அணித்திரண்டு போராட வருமாறு அழைத்தார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்ட சங்க உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என 200 பேர் கலந்துக் கொண்டு விண்ணதிரும் முழக்கமிட்டனர். அப்பகுதி தொழிலாளர்களும், பாதசாரிகளும், சிறுகடை வணிகர்களும், வாகன ஓட்டிகளும் என மக்கள் ஆங்காங்கே நின்று நமது கருத்துக்களை கேட்டு ஆதரவளித்தனர். இறுதியாக திருவள்ளூர் மேற்கு மாவட்ட துணைத் தலைவர் தோழர் மகேஷ்குமார் நன்றியுரையுடன் ஆர்ப்பாட்டம் முடிவடைந்தது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் மேற்கு மாவட்டம்
***
வேலூரிலும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் இதே முழக்கத்தின் கீழ் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
வேலூர்
***
கோவையில் தொழிலாளர் நல சட்டங்களை திருத்துகின்ற மத்திய அரசை கண்டித்து, துடியலூர் பேருந்து நிறுத்ததில், கடந்த 02.08.2019 அன்று மாலை ஐந்து மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை