மருத்துவத்துறையை முழுவதும் கார்ப்பரேட் – காவி மயமாக்கும் நோக்கில், இந்திய மருத்துவ ஆணையத்தைக் (MCI) கலைத்துவிட்டு மோடி அரசு கொண்டு வந்துள்ள தேசிய மருத்துவ ஆணையம் (NMC), நெக்ஸ்ட் தேர்வு (NEXT), இணைப்பு படிப்பு (BRIDGE COURSE) ஆகியவற்றை எதிர்த்து சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், சிவகங்கை, மதுரை, தஞ்சை, திருவாரூர், தேனி, திருச்சி, தூத்துக்குடி, கன்னியாகுமரி என தமிழகம் முழுவதும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராடிவருகின்றனர்.
மருத்துவத்துறையை முழுவதும் தனியார்மயமாக்கும் GATS ஒப்பந்தத்தின் படி மத்திய அரசு விரும்பும் மாற்றங்களைச் செய்ய MCI என்ற தன்னாட்சி அமைப்பு தடையாக உள்ளது. அதைக் கலைத்துவிட்டு நேரடியாக மத்திய அரசின் கீழ் இயங்கக் கூடிய NMC என்ற அமைப்பை நிறுவுவதற்கான மசோதாவை கடந்த நான்கு நாட்களுக்கு முன்னதாக (02-08-19) நிறைவேற்றியுள்ளது மோடி அரசு.
இந்திய மருத்துவ ஆணையம் ஊழல் மிகுந்த அமைப்பாக மாறிவிட்டதாம்; அதைப் போக்க, மாற்று அமைப்பைக் கொண்டுவருகிறார்களாம். இதையேதான் UGC -யைக் கலைப்பது முதற்கொண்டு அனைத்துத் தனியார்மய நடவடிக்கைகளிலும் கூறிவருகிறார்கள். ஏற்கனவே உள்ள நிறுவனங்களில் உள்ள ஊழல் மற்றும் நிர்வாகச் சிக்கல்களைக் காரணம்காட்டி தாங்கள் கொண்டுவரும் தனியார்மயத்துக்கு ஆதரவான சீர்திருத்தங்களைச் சரியென மக்களை நம்பவைப்பதைப் பாசிஸ்டுகள் ஒரு போக்காவே கடைபிடிக்கிறார்கள்.
MCI மொத்தம் 130 பேரைக் கொண்டது. அதில் 2/3 பங்கு பேர் மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள், பல்கலைக்கழகங்கள் சார்பில் பரிந்துரைக்கப்படுபவர்கள். 8 பேர்தான் மத்திய அரசினால் நேரடியாக நியமிக்கப்படுபவர்கள். ஆனால், இப்போது புதிதாக அமையவுள்ள NMC மொத்தமே 25 பேரைக் கொண்டது. இதில் 80% பேர் மத்திய அரசின் நேரடி நியமன உறுப்பினர்கள். மாநில அரசுகளின் சார்பில் 6 பேர் மட்டுமே சுழற்சி முறையில் (அதாவது 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை) பங்கேற்க முடியும். மருத்துவத்துறையில் NMC-யைக் கொண்டுவருவதன் மூலம் மாநிலங்களுக்கு இருந்த பெயரளவிலான உரிமைகள்கூட வெட்டிப்புதைக்கப்பட்டுள்ளது தெளிவாகிறது. இதன் மூலம் மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்துறையில் மத்திய அரசு தான் விரும்பும் மாற்றங்களைச் செய்துகொள்ளும். இந்திய அரசியல் சட்டம், கூட்டாட்சித் தத்துவம் ஆகியவற்றைக் கழிவறைக் காகிதமாகக் கூட ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பல் கருதவில்லை.
படிக்க:
♦ தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் ! கடலூர் அரங்கக் கூட்டம்
♦ நீட் எதிர்ப்பு மசோதா ரத்து : மருத்துவர் எழிலன் நேர்காணல் | காணொளி
மேலும், மத்திய அரசு நேரடியாக நியமிக்கும் இந்த 14 பேரும் யார்..யார்? எந்த அடிப்படையில் அவர்களை நியமிப்போம் என்பதைக் குறிப்பிடவில்லை. அவர்கள் RSS ‘விஞ்ஞானிகளாகவும்’ கார்ப்பரேட்டுகளின் ஏஜெண்டுகளாகவும்தான் இருக்கமுடியும் என்பது இதிலிருந்து புலனாகிறது. இதன்மூலம் மருத்துவத்துறையில் முடிவெடுக்கும் அதிகாரம் முழுவதும் நேரடியாக கார்ப்பரேட்டுகள் காவிகளின் பிடியில் சிக்கிக்கொள்ளவிருக்கிறது. அவர்கள் தங்கள் விருப்பம்போல சந்தைக்கேற்ப பாடத்திட்டங்கள், விதிமுறைகள் முதற்கொண்டு அனைத்தையும் தீர்மானிப்பார்கள்.

தனியார் தர நிர்ணய நிறுவனங்கள் கூறும் ஆய்வின்படி MARB என்ற புதிய அமைப்பு புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு அனுமதியளிக்கும். இதன்மூலம் சட்டவிரோதமாக இயங்கிவரும் SVS இரக மருத்துவக் கல்லூரிகள் நாளை சட்டப்பூர்வமாகும். மேலும், மருத்துவக் கல்லூரிகளே சீட்டுகளைத் தங்கள் விருப்பம்போல உயர்த்திக்கொள்ளலாம். 50% நிர்வாக (Management) சீட்டுகளுக்கு தாங்கள் விருப்பம்போலக் கட்டணத்தை நிர்ணயித்துக்கொள்ளலாம். பட்டமேற்படிப்புப் (PG) படிப்புகளை கல்லூரிகளே தங்கள் விருப்பம்போல துவங்கி நடத்திக்கொள்ளலாம் என்றெல்லாம் கூறுவதன் மூலம் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் சட்டவிரோத பகற் கொள்ளையையும் ஊழலையும் சட்ட பூர்வமாக்கியிருக்கிறது மோடி அரசு. இனி கார்ப்பரேட்டுகள் தங்கள் இஷ்டம்போல மருத்துவத்துறையைச் சூறையாட வழிவகை செய்கிறது இம்மசோதா.
மருத்துவக் கல்லூரிகளில் ஏற்படும் குறைகள் மற்றும் தவறுகளுக்கு “அங்கீகாரத்தை இரத்து செய்வது” என்பதெல்லாம் இனி கிடையாது. எத்தகைய தவறாயினும் அதற்கு ஈடாக அபராதம் செலுத்தினால் போதும். இதுதான் இனி அதிகபட்ச தண்டனை.

மருத்துவம் படித்த மாணவர்கள் ஏற்கனவே உள்ள முறைப்படி 4½ ஆண்டுகள் படிப்பும் ஓராண்டு மருத்துவராகப் பயிற்சியும் பெற வேண்டும். இம்மசோதாவின்படி இனி பட்டம் பெற வேண்டுமானால் “நெக்ஸ்ட்” (NEXT) என்ற தேசிய அளவிலான தகுதித் தேர்வை மாணவர்கள் எழுத வேண்டும். இதை MBBS மாணவர்கள் மட்டுமின்றி பல்மருத்துவம் போன்ற பல்வேறு மருத்துவத்துறைகளிலும் புகுத்துகிறார்கள். “மருத்துவத்தின் தரத்தை உயர்த்துகிறேன்” என்ற பெயரில் இதைக் கொண்டு வருகிறார்கள். ஏற்கனவே “தரத்தை உயர்த்துகிறேன்” என்ற பெயரில் +2 முடித்தவர்களுக்கு நீட் என்ற தேசிய அளவிலான தேர்வை நடத்தி நாடு முழுவதும் உள்ள ஏழைகள் / கிராமப்புற மக்களின் பிள்ளைகள் மருத்துவக் கல்லூரியில் நுழைவதைத் தடுத்துநிறுத்தியது மோடி அரசு. இப்போது அதையும் தாண்டிப் படிக்க வருபவர்களை வடிகட்டி வெளியே எறியும் முயற்சியே இது. மருத்துவம் படிக்கும் ஏராளமான மாணவர்களின் கனவு இதன்மூலம் தகர்க்கப்படவிருக்கிறது. “சூத்திரனுக்குக் கல்வியில்லை என்ற பார்ப்பன நீதியும் காசில்லாதவனுக்குக் கல்வியில்லை என்ற கார்ப்பரேட்டு நீதியும்” ஒருங்கே இணைந்து ஏழைகளை மருத்துவப் படிப்பிலிருந்து வடிகட்டித் தள்ளவிருக்கிறது.
படிக்க:
♦ ஜம்மு காஷ்மீர் : சரத்து 370-ஐ ரத்து செய்த பாசிசம் !
♦ பள்ளி மாணவர்களுக்கு மனநல கவுன்சிலர்கள் தேவையா ? | வில்லவன்
“ஆப்ஜெக்டிவ் முறையில் கொண்டுவரப்படவிருக்கும் நெக்ஸ்ட் தேர்வானது இவர்கள் சொல்வதுபோல தரத்தை உயர்த்தாது. மாறாக தாழ்த்தும். மருத்துவப் படிப்பில் செயல்முறைப் (Practical) படிப்புதான் முக்கியமானது. நோயாளிகளைத் தொட்டு சிகிச்சையளிப்பதில் மாணவர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இனிமேல் முதலாமாண்டிலிருந்தே நெக்ஸ்ட் தேர்வுக்காகவே படிக்க மாணவர்கள் பழக்கப்படுத்தப்படுவர். செயல்முறை அறிவு துளியும் இல்லாமல் போகும். நெக்ஸ்ட் முறை அமல்படுத்தப்பட்டால் ஏராளமான மாணவர்களின் மருத்துவக் கனவு சிதைவதோடு மருத்துவர்களாக வெளிவருபவர்களும் செயல்முறை அறிவற்றவர்களாகவே இருப்பார்கள்” என்கிறார்கள் மாணவர்கள்.

இப்படி சாதாரணமானவர்கள் படித்து வரமுடியாது. கோச்சிங் செண்டரில் லட்சக்கணக்கில் கட்டணம் செலுத்திப் படிக்க முடியக்கூடிய மாணவர்களே நெக்ஸ்ட் தேர்வில் வெற்றி பெறுவது சாத்தியம் அப்படி வெல்பவர்கள் நிச்சயமாக மருத்துவத்தை சேவையாகக் கருத மாட்டார்கள். மாறாக முதலீடாகவே கருதுவார்கள். இப்படி இலாபச் சிந்தனையோடு வெளிவரும் மருத்துவர்களால் ஏழை எளிய மக்களுக்கு கிடைத்து வரும் பெயரளவிலான மருத்துவமும் இல்லாமல் போகும்.
மசோதாவின் பிரிவு 32-வின்படி எம்.பி.பி.ஸ் படிக்காத, அலோபதி முறையில் மக்களை குணப்படுத்தும் அனுபவ அறிவு இல்லாத ஆயுர்வேதா, சித்தா, யுனானி (AYUSH, LAB TECHNICIANS, BLOOD SAMPLE COLLECTORS) படித்தவர்களை கிராமப்புற மக்களின் மருத்துவ சேவைக்காக அனுப்பிவைப்போம் என்கிறது மோடி அரசு. அவர்களைக் கொண்டு கிராமப்புற மக்களைப் பாதுகாக்கிறார்களாம். பணமில்லாத கிராமப்புற ஏழை எளிய மக்களைத் தேவையற்றவர்கள் என்று பார்க்கும் கார்ப்பரேட் முதலாளித்துவத்தின் பார்வையும் பார்ப்பனியத்தின் பார்வையுமே இணையும் புள்ளியே இது. இதன் மூலம் கிராமப்புறப் பகுதிகளில் போதிய மருத்துவமனைகளை உருவாக்கவோ மருத்துவர்களை நிரப்பவோ செய்யாமல் மருத்துவ சேவையை முற்றாகக் கைகழுவிவிடுவதுதான் அரசின் நோக்கம். இதற்காக கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் தனியார் பங்களிப்பு செய்வதன் மூலம் இவர்களை 25,000 -க்கும் குறைவான ஊதியத்தில் பணிக்கு அமர்த்தப் போகிறார்கள். இனி மெல்லமெல்ல கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களைக் கார்ப்பரேட்டுகளின் பிடியில் ஒப்படைக்கப்போகிறார்கள்.

இணைப்புப் படிப்பு (Bridge Course) மூலம் மேற்கண்ட மருத்துவத்துறைகளில் படித்த மாணவர்கள் MBBS படித்துப் பட்டம் பெற முடியும் என்கிறது மசோதா. இதன் மூலம் அந்தத் துறைகளில் (ஆயுர்வேதா, சித்தா, யுனானி, நர்ஸிங், பல் மருத்துவம்) இனி நிரந்தரமாக யாரையும் நியமிக்கப் போவதில்லை என்பதே இதன் பொருள். ஏற்கனவே பல்மருத்துவம், நர்ஸிங் உள்ளிட்ட துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பாமல் காண்ட்ராக்ட் முறையில் வெறும் 11 மாதப்பணிக்குத்தான் எடுத்துவருகிறார்கள். 11 மாதங்கள் கழித்து அவர்கள் தூக்கியெறியப்படுகிறார்கள். 5 ஆண்டுகளுக்கும் மேலாக பல் மருத்துவர்கள் நிரந்தரப் பணிக்கு அமர்த்தப்படவில்லை. இன்றைய நிலையே இப்படி இருக்கையில் இணைப்புப் படிப்பைக் (Bridge Course) கொண்டுவருவதன் மூலம் மலிவான உழைப்புச் சந்தையில் MBBS படித்தவர்கள் கிடைப்பார்கள். அவர்களும் நாளை காண்ட்ராக்ட் முறையில் மாற்றப்படுவார்கள்.
இந்த தேர்வில் மட்டும் வெற்றி பெற்றால் போதும் வெளிநாட்டு மாணவர்கள் இந்தியாவில் பணியாற்றலாம். இதனால் இந்திய மாணவர்களின் மருத்துவக் கனவு சிதைக்கப்படும். இந்திய மக்களை குணப்படுத்தும் அனுபவ அறிவில்லாத மருத்துவர்களை இது உருவாக்கும்.
இவற்றையெல்லாம் எதிர்த்துதான்,
- NMC யைத் திரும்பப் பெறு!
- நெக்ஸ்ட் தேர்வை இரத்து செய்!
- இணைப்புப் படிப்பை இரத்து செய்!
- கிராமப்புற மக்களின் சுகாதாரத்தைப் பறிக்காதே!
என்ற முழக்கங்களின் கீழ் தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராடி வருகிறார்கள்.
இது ஏதோ போராடுகிற மாணவர்களின் பிரச்சனையோ மருத்துவத்துறை சார்ந்தவர்களின் பிரச்சனையோ மட்டுமல்ல. நம் அனைவரின் பிரச்சனை. மருத்துவத்துறையை கார்ப்பரேட்டுகள் முற்றாக சூறையாட வழிவகுத்திருப்பதன் மூலம் ஏழை எளிய மக்களுக்குக் கிடைத்துவந்த பெயரளவிலான மருத்துவமும் நாளை இல்லாமல் போகும். இந்த அநீதியான NMC-யை எதிர்த்து போராடும் மாணவர்களுடன் நாமும் களத்தில் இறங்குவோம்!
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மருத்துவ மானவர்கள் நடத்திய போராட்டம் :
குமரி மாவட்ட மாணவர் போராட்ட படங்கள் :
திருச்சி மாவட்ட மாணவர் போராட்ட படங்கள் :
தஞ்சை மாவட்ட மாணவர் போராட்ட படங்கள் :
விழுப்புரம் மாவட்ட மாணவர் போராட்ட படங்கள் :
தகவல்:
புமாஇமு