மோடி அரசு சர்வாதிகாரத்தன்மையுடன் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அதிகார சட்டப்பிரிவை நீக்கியதைக் கண்டித்து பல இடங்களில் போராட்டங்கள் நடந்துவருகின்றன. நேற்றைய தினமே (05.08.2019) டெல்லி, பெங்களூரு, போபால் ஆகிய நகரங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தில் மாணவர்கள், செயல்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். “காஷ்மீரை சிறைச்சாலையாக மாற்றுவதை நிறுத்துங்கள்” என்றும் “காஷ்மீரில் இந்தியா நடத்தும் கொடூரங்களை நிறுத்த வேண்டும்” என்றும் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கி இந்தப் போராட்டத்தில் அவர்கள் முழக்கமிட்டனர்.

article_370-kashmir-protest
டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டம்

ஆக்ஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்தே ஜம்மு – காஷ்மீரில் பதட்ட சூழலை ஏற்படுத்திய மத்திய அரசு, கடந்த ஞாயிறு (04-08-2019) அன்று இரவு அம்மாநில தலைவர்களை வீட்டுக்காவலில் வைத்தது. பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்ததோடு, இணையம் மற்றும் தொலைபேசிச் சேவையையும் நிறுத்தியது. திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமையை அளிக்கும் பிரிவை நீக்கும் தீர்மானமும், அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டது.

படிக்க:
ஜம்மு காஷ்மீர் : சரத்து 370-ஐ ரத்து செய்த பாசிசம் !
♦ காஷ்மீர் : பொது பாதுகாப்புச் சட்டத்தின் அத்துமீறல்கள் | அம்னெஸ்டி அறிக்கைக்கு தடை !

இந்த முடிவைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த செயல்பாட்டாளர் ஹர்ஷ் மந்திர், “நரேந்திர மோடியும் அமித் ஷாவும் தங்களது இரண்டாவது ஆட்சிக்காலத்தில் அரசியலமைப்பை மாற்றவும் அழிக்கவும் கிளம்பியுள்ளனர். எதிர்க்கட்சியின் பலவீனமான நிலை அவர்களுடைய பலத்தை மேலும் கூட்டியுள்ளது” என்கிறார்.

“அரசியலமைப்பில் எழுதப்பட்ட இந்தியா என்கிற கற்பிதத்துக்கு முற்றிலும் எதிரான, ஒரு தேசமாக நாம் வேதனைப்படுத்தப்படுவதைக் காண்கிறேன்” எனவும் அவர் வருந்துகிறார்.

டெல்லி போராட்டத்தில் பங்கேற்ற பொருளாதார நிபுணர் ஜீன் ட்ரீஸ், மோடி அரசின் தீர்மானம் காஷ்மீரை மேலும் தனிமைப்படுத்தும் என்கிறார்.

இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட காஷ்மீரைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் ஷாரிகா, அனந்த்நாக்கில் உள்ள தனது வீட்டினரை கடந்த ஆகஸ்டு 4-ம் தேதி முதல் தொடர்பு கொள்ள முடியவில்லை என்கிறார். “இது ஜனநாயகம் அல்ல; இது ஆக்கிரமிப்பைக் காட்டிலும் மோசமானது” என்கிறார் அவர்.

மோடி அரசின் நகர்வுக்கு எதிராக பெங்களூரு மற்றும் போபாலிலும் போராட்டங்கள் நடந்தன. அதில் பங்கேற்ற பலர் இந்த தீர்மானத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினர்.

“காஷ்மீர் மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் ஆலோசனை இன்றி, ஒருதலைப்பட்சமாக 370 பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ளது” என போபால் போராட்டம் பற்றி பங்கேற்ற மீரா சங்கமித்ரா கூறுகிறார்.

டெல்லியில் போராட்டத்தில் பங்கேற்ற பலருக்கு மோடி அரசின் முடிவு வியப்பளிக்கவில்லை. “பாஜகவின் சித்தாந்தம் இதைத்தான் முதல் பணியாக செய்ய விரும்பியது என நினைக்கிறேன்” என்கிறார் புகைப்படக்காரரான ராம் ரஹ்மான்.

“பாராளுமன்ற நடவடிக்கைகளில் தனது பெரும்பான்மையுடன் விரும்பியதை மோடி அரசு செய்துகொண்டிருக்கிறது” எனவும் அவர் கூறுகிறார்.

வர்த்தக சங்கத்தைச் சேர்ந்த கவுதம் மோடி, “இந்த அரசு அதிர்ச்சிக்குள்ளாகுவதன் மூலம் மக்களை பிரிக்கப்பார்க்கிறது” என்கிறார்.

தனது பொருளாதார திட்டங்களின் தோல்வியிலிருந்து மக்களை திசை திருப்பவே இந்த அரசு முயற்சிக்கிறது எனவும் சில போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். வாகன உற்பத்தி துறையின் வீழ்ச்சியும் கடந்த ஐந்தாண்டுகளில் தொடர்ச்சியாக சேமிப்பு குறைந்திருப்பதும் இந்திய பொருளாதாரத்தில் மந்தநிலையை உண்டாக்கியிருக்கின்றன எனவும் அவர்கள் கூறினர்.

“அவர்களால் எதுவும் செய்ய முடியாது; ஏனெனில் பொருளாதாரம் அந்த அளவுக்கு மோசமான நிலையில் உள்ளது” என்கிறார் சமூக பணியில் ஈடுபட்டுள்ள பூனம் கவுசிக்.

article_370“பொருளாதார நிலைகள் மோசமடைந்து வரும் சூழலில் கலாச்சார திணிப்பு, இந்து தேசியவாதம் அதிகமாவதைக் காணலாம்.” என விமர்சிக்கிறார் ஹர்ஸ் மந்திர்.

இது காஷ்மீர் மக்களின் பிரச்சினை மட்டுமல்ல, ஒட்டுமொத்த மக்களுக்கும் அபாயமானது என பலரும் கூறினர். “காஷ்மீரிகள் டெல்லியில் இருந்து தாங்கள் ஆட்சி செய்யப்படுவதாகவும் அவர்களுக்கென குரல் இல்லை எனவும் கூறினார்கள். அவர்களுடைய குரல் இப்போது முழுமையாக எடுத்துக்கொள்ளப்பட்டுவிட்டது. அது இப்போது கவர்னரால் ஆட்சி செய்யப்படும் யூனியன் பிரதேசமாகிவிட்டது. இப்போது அவர்களால் எதுவும் பேச முடியாது” என்கிறார் ரஹ்மான்.

மோடி அரசின் நடவடிக்கைகளுக்கு பகுஜன் சமாஜ் கட்சி, பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், ஆம் ஆத்மி போன்ற சில எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தது குறித்தும் பலர் கேள்வி எழுப்பினர்.

“வலதுசாரி சிந்தனை கட்சிகள் கடந்து பரவியுள்ளதை இது காட்டுகிறது. அவர்களுக்கு அரசியலமைப்பின் மதிப்புகள் மீது நம்பிக்கை இல்லை” என்கிறார் ஹர்ஸ் மந்திர்.


அனிதா
நன்றி : ஸ்க்ரால்