பத்திரிகைச் செய்தி தேதி : 12.08.2019
அன்புடையீர் வணக்கம்,
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் கடந்த 7-ம் தேதி மாலை 7 மணியளவில் காஷ்மீருக்கான சிறப்புரிமை வழங்கும் அரசியல் சட்டப் பிரிவு 370 மற்றும் 35ஏ-ஐ மத்திய அரசு நீக்கியதை விவாதித்ததற்காக 30 மாணவர்களுக்கு விளக்கம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஒரு உயர் கல்வி நிறுவனத்தில் கூட மாணவர்கள் நடப்பு நாட்டு நிலைமை குறித்து விவாதிப்பதையே தடை செய்வது ஜனநாயக விரோதமானது மட்டுமல்ல, கல்வியின் தரத்தையே சீர்குலைப்பதாகும். விவாத சுதந்திரம் இல்லாத கல்விமுறை சமூகத்தை காட்டுமிராண்டி நிலைக்குத்தான் இட்டுச் செல்லும்.
காஷ்மீர் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பறித்து விட்டு அம்மக்கள் மீது கடும் அடக்குமுறையை ஏவி வருகிறது மோடி தலைமையிலான பாஜக அரசு. தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகிறது. சிறுரவைகளால் (பெல்லட்) தாக்கப்பட்டு பலர் பார்வையிழந்துள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. கடும் அடக்குமுறை நடப்பதையும் அதையும் மீறி பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டு எதிர்த்து வருவதையும் பிபிசி அம்பலப்படுத்தியிருக்கிறது.
இவற்றையெல்லாம் மூடி மறைத்து, காஷ்மீரில் அமைதி நிலவுவதாகவும், மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் மோடி அரசு பொய்களைப் பரப்பிவருகிறது. மொத்த காஷ்மீரையும் இராணுவக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு தகவல் தொடர்பினை கடந்த ஒரு வாரமாக முடக்கி வைத்திருப்பதோடு பத்திரிகையாளர்களையும், அரசியல் கட்சித் தலைவர்களையும் தடுத்து வருகிறது.
படிக்க:
♦ காஷ்மீர் : பெல்லட் குண்டுகள்தான் அமைதிக்கான சாட்சியாம் !
♦ Article 370 நீக்கம் : காஷ்மீர் பண்டிட்டுகள், டோக்ராக்கள், சீக்கியர்கள் கண்டனம் !
மத்திய அரசு காஷ்மீர் மக்கள் மீது தொடுத்துவரும் இராணுவ ஒடுக்குமுறைகளை உடனே நிறுத்தவும், பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் வழங்கவும் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். மேலும் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் 30 மாணவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை மக்கள் அதிகாரம் வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையைக் கைவிடுமாறு வலியுறுத்துகிறது.

இப்படிக்கு,
காளியப்பன்,
மாநில பொருளாளர்.