Tuesday, April 15, 2025
முகப்புசெய்திஇந்தியாகாஷ்மீரில் ஊடகங்கள் முடக்கம் : எடிட்டர்ஸ் கில்டு கண்டனம்

காஷ்மீரில் ஊடகங்கள் முடக்கம் : எடிட்டர்ஸ் கில்டு கண்டனம்

தற்போதுள்ள சூழல் குறித்து நேர்மையாகவும் துல்லியமாகவும் பதிவு செய்யும் ஊடகங்களின் சுதந்திரத்தை குறைக்கும் வகையில் அரசின் நடவடிக்கை உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

-

காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொடர்ந்து தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருப்பது ஆழ்ந்த கவலையைத் தருவதாக எடிட்டர்ஸ் கில்டு ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதுள்ள சூழல் குறித்து நேர்மையாகவும் துல்லியமாகவும் பதிவு செய்யும் ஊடகங்களின் சுதந்திரத்தை குறைக்கும் வகையில் அரசின் நடவடிக்கை உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்பாராத இத்தகைய சவால்களுக்கிடையே அங்கிருந்து பணியாற்றிக்கொண்டிருக்கும் பத்திரிகையாளர்கள் அனைவரையும் பாராட்டுவதாகவும் அவர்களுக்கு துணை நிற்பதாகவும் பத்திரிகையாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு கடந்த திங்கள்கிழமை பிரிவு 370-ஐ நீக்குவதாக அறிவித்தது. அறிவிப்புக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில், ஒரு வாரம் கடந்த பின்னும் தடைகள் நீக்கப்படவில்லை. எப்போது இணையம் உள்ளிட்ட தகவல் தொடர்புகள் இயங்கும் என்பது குறித்து அரசு இதுவரை வாயை திறக்கவில்லை.

“ஜம்மு – காஷ்மீரிலிருந்து வெளியேறிய பிறகுதான் அங்கு நிலவும் சூழல் குறித்து செய்தி தர முடிகிறது. உள்ளூர் ஊடகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.  சூழலின் கண்களும் காதுகளுமாக இயங்கும் உள்ளூர் ஊடகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன” எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“இணைய இணைப்பு இல்லாமல் செய்தி வெளியிடுவது இப்போது சாத்தியமில்லை என்பதை அரசு நன்றாகவே அறியும்.  ஜனநாயகத்தின் முக்கியமான அமைப்பான பத்திரிகைகள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க, ஜம்மு – காஷ்மீர் மாநிலம் உள்பட, இந்திய மக்கள் அனைவருக்கும் அரசு கடமைப்பட்டுள்ளது.

இணையமும் தொலைபேசி சேவையும் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், காஷ்மீரிகள் தகவல்களை தெரிந்துகொள்ள மூர்க்கத்தனமாக இருப்பதாக டெலிகிராப் நாளிதழ் கூறுகிறது. இதனால் அதிக அளவில் புரளிகள் கிளம்பிக் கொண்டிருப்பதாகவும் அந்நாளிதழ் செய்தி சொல்கிறது. ஒரு சில நாளிதழ்கள் மட்டும், நான்கு அல்லது எட்டு பக்கங்களில் இதழ்களை வெளியிடுவதாகவும்  மூன்று ரூபாய் நாளிதழ்  50 ரூபாயாக விற்கப்படுவதாகவும் டெல்கிராப் கூறுகிறது.

“இத்தகைய கட்டுப்பாடு இன்றி சுதந்திர ஊடகங்கள் இயங்க அனுமதிக்கப்பட வேண்டும். செய்தியை பரப்புவதிலும் அரசின் அமைப்புகளையும் பாதுகாப்பையும் கண்காணிக்கும் ஜனநாயக கடமையை காப்பதிலும் ஊடகங்கள் முக்கியமானவை” என தனது அறிக்கையில் தெரிவித்துள்ள எடிட்டர்ஸ் கில்டு, வெளியிலிருந்து வருகிற பத்திரிகையாளர்களிடமும் உள்ளூர் பத்திரிகையாளர்களிடமும் பாரபட்ச அணுகுமுறையை அரசு கடைப்பிடிப்பதை சுட்டிக்காட்டியுள்ளது. அனைத்து பத்திரிகையாளர்களும் அனைத்து குடிமக்களும் சம சுதந்திரம் உடையவர்கள் எனவும் அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

ஜம்மு – காஷ்மீரிலிருந்து வெளியேறிய பிறகுதான் அங்கு நிலவும் சூழல் குறித்து செய்தி தர முடிகிறது. உள்ளூர் ஊடகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.  சூழலின் கண்களும் காதுகளுமாக இயங்கும் உள்ளூர் ஊடகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

உடனடியாக ஊடக தொடர்பில் சகஜ நிலையை உருவாக்கும்படி கூறியுள்ள கில்டு, ஊடக வெளிப்படைத்தன்மைதான் இந்தியாவின் பலம் என்றும் அச்சுறுத்தல் அல்ல எனவும் கூறியுள்ளது.

இந்நிலையில்,  காஷ்மீர் டைஸ்சின் ஆசிரியர் அனுராதா பாசின், மாநிலத்தின் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சூழ்நிலையை சரிசெய்யும்படி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். பத்திரிகை மற்றும் ஊடக சுதந்திரத்தை நிலைநிறுத்தும் விதமாக புகைப்பட செய்தியாளர்கள் மற்றும் செய்தியாளர்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் அனுராதா கேட்டுள்ளார்.

அரசியலமைப்பின் பிரிவுகள் 14 மற்றும் 19, பத்திரிகையாளர்களுக்கு வழங்கியுள்ள உரிமையை இந்தக் கட்டுப்பாடுகள் தடுத்துள்ளதாகவும் இதன் விளைவாக காஷ்மீர்வாசிகளிடையே பதட்டம், பீதி, பாதுகாப்பின்மை, பயம் ஆகியவை தூண்டப்பட்டுள்ளதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

படிக்க:
ரவுடித்தனமே ஆளும் உத்தியாக மாறியிருக்கிறது ! | சஞ்சீவ் பட் கடிதம் !
காஷ்மீர் : பெல்லட் குண்டுகள்தான் அமைதிக்கான சாட்சியாம் !

மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடக்கப்பட்டு, ஊடகங்கள் செயல்படாமல் தடுக்கப்பட்டு, வீதிகள்தோறும் பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், காஷ்மீரில் இனி தேனாறும் பாலாறும் ஓடும் என்கிறார் பிரதமர் மோடி. நவீன கால நீரோ மன்னனைப் போல, காஷ்மீரில் சூட்டிங் நடத்தலாம் வாங்க என காஷ்மீரை கூறுபோட்டு விற்க அழைக்கிறார் மோடி.  உரிமையை, உடைமை பறிப்பதில் காவிகளுக்கு நிகர் காவிகளே!


கலைமதி
நன்றி: த வயர், டெலிகிராப் இந்தியா.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க