“நாடே துண்டாடப்படுவதற்கு இட்டுச்செல்லக் கூடிய … இந்திய அரசியல் சாசன வரலாற்றிலேயே மிகவும் மோசமான நாள்” – வழக்கறிஞரும் முன்னாள் உள்துறை அமைச்சருமான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ப. சிதம்பரம் கூறிய இந்த வலிமையான வார்த்தைகள் எச்சரிக்கையூட்டும் முன்னறிவிப்பாகவே படுகிறது.
ஜம்மு காஷ்மீரின் நிலையையே மாற்றியமைக்கும் வகையில் சரத்து 370-ஐ ரத்து செய்த பிறகு, அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்த பிறகு, பிற மாநிலங்களின் நிலையும் கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கிறது.
சரியாகச் சொல்லப்போனால், பல மாநிலங்களை ஒருங்கிணைந்ததே இந்தியா என்ற மிக அடிப்படையான ஒன்று இன்று தடுமாற்றத்திற்குள்ளாகியிருக்கிறது.
படையணிகளைக் குவித்து, முன்னாள் முதல்வர்கள் இருவர் உட்பட எதிர்கட்சித் தலைவர்களைக் கைது செய்து, அனைத்து வகையான தொடர்புகளையும் துண்டித்து அங்கு இந்த நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்ட விதமானது, பாஜக அங்கு எவ்விலை கொடுத்தேனும், வன்முறையை ஏவியும் கூட, தனது காரியத்தை நிறைவேற்றத் தயாராயிருப்பது தெரிகிறது. மேலும் பொதுமக்கள் மற்றும் அரசியல் கருத்துக்கள் அதற்கு ஒரு பொருட்டல்ல என்பதும் தெரிகிறது.
தற்போது தனது ஆசைக்குரிய திட்டங்களை எதிர்ப்புப் பயமின்றி நிறைவேற்றிக் கொள்வதற்கான தளம் பாஜகவிற்கு அமைந்துள்ளது. அயோத்தியில் இராமர் கோவில், பொது சிவில் சட்டம், அரசியல்சாசனத்தை மாற்றுவது, முசுலீம்களை திட்டமிட்ட வகையில் ஒதுக்குவது உள்ளிட்ட பலவும் அதன் விருப்பப் பட்டியலில் உள்ளது. சங்க பரிவாரத்தின் நீண்டநாள் கனவான சரத்து 370-ஐ நீக்குவது என்பது தற்போது நனவாகியுள்ளது.
எந்த எதிர்ப்புகளையும் கண்டுகொள்ளவில்லை, எந்த ஒரு சிறிய சட்டரீதியான அல்லது அரசியல் சாசன சட்ட குழப்பங்கள் குறித்தும் அக்கறை செலுத்தவில்லை. பொதுக் கருத்துபற்றியோ அல்லது நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களின் கருத்து பற்றியோ கருத்துக் கேட்கத் தேவையில்லை. மொத்த நாடும் மிகப்பெரிய தேர்தல் வெற்றியை கொடுத்திருக்கும் போது, இவர்கள் யார் கருத்துச் சொல்வதற்கு ?
கேள்வி கேட்கத்தகுந்த எந்த விவகாரத்திலும், தனிப்பெரும்பான்மையில் தாம் வெற்றி்பெற்றதையே தமது ஒவ்வொரு முடிவுகளையும் நியாயப்படுத்துவதற்கு பாஜகவும் அதன் ஆதரவாளர்களும் பயன்படுத்தப்படுகின்றனர். ஆனால் அரசாங்கமானது, அது எந்த அரசாங்கமாக இருந்தாலும் சரி (குடிமக்களால்) எதிர்கொள்ளப்படவும் கேள்வி கேட்கப்படவும் வேண்டும். மக்களுக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டிருப்பது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சமாகும். இதை பாஜக புரிந்து கொள்வதில்லை.
படிக்க:
♦ எதை இழந்தாலும் போராடும் துணிவு மட்டும் நம்முடன் இருக்கும் !
♦ காஷ்மீர் பற்றிய கார்ட்டூனை பகிர்ந்த மக்கள் அதிகாரம் தோழர் கைது !
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வரும் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதாக இருக்கட்டும், பத்திரிகையாளர் சந்திப்புகளுக்கு மறுப்பு சொல்வதாக இருக்கட்டும், அல்லது, நிதித்துறை அமைச்சக விவகாரத்தில் சமீபத்தில் நாம் பார்த்தது போல், நிருபர்களைக் கேள்வி கேட்க விடாமல் தடுத்ததாக இருக்கட்டும், அதனை பொறுப்பாக்கக் கூடிய அனைத்து விவகாரங்களின் மீது அரசாங்கம் வெறுப்புக் கொள்கிறது.
தனது முதல் ஐந்தாண்டு ஆட்சியில் மோடி அரசாங்கம், பிரச்சினைக்குரிய சில முடிவுகளை எடுப்பதற்கான சில முயற்சிகளைச் செய்தது. அவற்றுக்கு எவ்வித வருத்தமோ, விளக்கமோ கொடுக்கவில்லை. ஆனால், பிற அரசியல் கட்சிகளிடமிருந்தோ அல்லது கருத்தாளர்களிடமோ, இன்னும் சொல்லப்போனால் பாதுகாக்கப்பட்ட மக்களிடமிருந்தோ வரும் விமர்சனங்கள் சிறிய மாற்றத்தையாவது ஏற்படுத்தின என்பது தெளிவாகத் தெரிந்தது.

வணிகவியலாளர்களிடமிருந்து வரும் சிறு புகார்களின் அடிப்படையில் ஜி.எஸ்.டி-யிலும்கூட நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்தது மோடி அரசு. மோடி அரசாங்கத்தை “சூட்- பூட் போட்டவர்களின் அரசு” என ராகுல்காந்தி கூறியது மோடியை பெருமளவில் வெறுப்பேற்றியது. பொருளாதார கொள்கைகளில் தனது பிடிப்பை திடீரென மாற்றிக்கொண்டார். மன்னிப்பு எதுவும் கேட்கப்படவில்லை என்றாலும் அப்போது பொதுமக்கள் பார்வை முக்கியமாக பார்க்கப்பட்டது என்பது மட்டும் உறுதி.
ஆனால், இப்போது அப்படி இல்லை. சட்டங்கள் வேகமாக அறிமுகப்படுத்தப்படுகின்றன. ஒன்று, எதிர்க்கட்சிகள் இணைத்துக் கொள்ளப்படுகின்றனர் அல்லது நிராகரிக்கப்படுகின்றனர். சில விவகாரங்களில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கூட முக்கியச் சட்ட மசோதாக்கள் வேகமாக அறிமுகப்படுத்துவதையும் நிறைவேற்றப்படுவதையும் ஆதரித்தன. நாம் அறிவதற்கு முன்னரே, நம் வாழ்வின் மீது தாக்கம் செலுத்துவதற்கான அதிகாரத்தை அரசுக்கு கொடுப்பதற்கான சட்டங்களை நாடாளுமன்றம் நிறைவேற்றிவிடுகிறது. இச்சட்டங்களின்படி விசாரணையின்றியே யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பயங்கரவாதியாக குற்றம்சாட்டப்படலாம். தகவலறியும் உரிமைச் சட்டம் அதற்குப் பல்லில்லாதவாறு திருத்தப்பட்டுள்ளது.
ஒருசில மாற்றுக் கருத்துள்ளவர்களாலும் கூட முடிவெடுக்கும் வழிமுறையில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. முன்னாள் தகவல் ஆணையர்கள், தகவலறியும் உரிமைச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதால் வரவிருக்கும் அபாயங்கள் குறித்து எச்சரித்ததை யாரும் கவனம் கொடுத்துக் கேட்கவில்லை. இது அரசாங்கத்தின் மனதை மாற்றிவிடப் போவதில்லை.
நாடாளுமன்றத்தில் தனிப் பெரும்பான்மை இருக்கிறது என்ற வகையிலும் அரசாங்கம் செய்யவேண்டிய வேறுபல அவசர விசயங்கள் பல இருக்கின்றன என்ற அடிப்படையில் பார்த்தாலும், இந்த மசோதாக்களுக்கு இப்போது என்ன அவசரம்? மிகவும் அவசரமான அவசியமான காரியம் என்னவெனில், தற்போது மிகவும் மோசமான நிலையில் இருக்கும் பொருளாதாரத்தை முன்னேற்றுவதுதான். நுகர்வோர் தேவைகள் மிகவும் கீழ்நிலைக்கு இறங்கிவிட்டன. வேலைவாய்ப்பு உருவாவதற்குப் பதில் குறைகின்றன. இது அரசாங்கத்தைக் கவலையுறச் செய்யவில்லையா ?
பொருளாதாரம்தான் முக்கியமானது. ஆனால் பாஜகவிற்கும் அதன் சித்தாந்த குருவான ஆர்.எஸ்.எஸ்.-க்கும் அதன் வெகுநாள் அரசியல் நிகழ்ச்சி நிரல்கள்தான் முக்கியமானவை. சங்க பரிவாரங்களுக்கு ஒரு இலக்கு உண்டு. பல பத்தாண்டுகளாக இடைவிடாமல் அவை அதை நோக்கி செயலாற்றிக் கொண்டிருக்கின்றன. தனக்குக் கிடைக்கும் ஒவ்வொரு குறைந்தபட்ச வாய்ப்பையும் தனது இலக்கை நோக்கி முன்னேறுவதற்கு பயன்படுத்திக் கொள்கின்றன. ஜன்சங்கம் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் இயக்கத்தில் இணைந்து ஜனதா கட்சியின் ஒரு பகுதியாக மாறியது. வி.பி.சிங்கின் குறுகிய கால அரசாங்கத்திற்கும் ஆதரவு அளித்தது உள்ளிட்டு அதிகாரத்தை நோக்கிய அனைத்துவிதமான செயல்தந்திர நகர்வுகளை முன்னெடுத்தது.
அவசரநிலை காலத்தில் ஒரு கட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டு அதன் தலைவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். பாஜக எம்பிக்களின் எண்ணிக்கை இரண்டாகக் குறைந்தது. ஆனாலும் அதன் இலட்சியம் மாறவில்லை. வாஜ்பாயி அரசாங்கத்தின் காலத்தில் அது பிறரிடம் செல்வாக்கு செலுத்தும் நிலையில் இருந்தது. எனினும் அது கூட்டணி அரசாங்கமாக இருந்ததால், தனது பல்வேறு குறிக்கோள்களை அதனால் நிறைவேற்ற முடியவில்லை.
தற்போது மோடி தலைமையில் இருக்கையில் சங்கப் பரிவாரம் தனது இறுதி இலட்சியமான இந்து ராஷ்டிரத்தை சாதிக்கும் நிலையை நெருங்கிவிட்டது. அதன் ஒவ்வொரு அடியும் அதன் இறுதியிலக்கை நோக்கி அதனைக் கொண்டு செல்கிறது. இந்து இந்தியா அரசியல் அமைப்புச் சட்டத்தில் புனிதமாக்கப்பட வேண்டியதும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தால் சட்டப்பூர்வமாக்கப்பட வேண்டியது மட்டும்தான் பாக்கி. அதற்குக் குறைவாக எதுவும் திருப்திகரமானதாக இருக்காது.
படிக்க:
♦ காஷ்மீர் : பெல்லட் குண்டுகள்தான் அமைதிக்கான சாட்சியாம் !
♦ காஷ்மீர் : பயங்கரவாதத்தையும் போர் சூழலையும் வளர்க்கும் இந்தியா !
அரசியல்சாசன சட்டம் அதனை அனுமதிக்கவில்லை எனில், அது மாற்றப்படலாம். ஆனால் அதன் ஒப்புதல் முத்திரை மட்டும் தேவைப்படும். அப்போது ஆர்.எஸ்.எஸ். பெருமையுடன் இது மக்களின் விருப்பம் என்று தெரிவிக்கும். சங்கபரிவார் விரைவில் அந்த இடத்தை நெருங்கிவிடும். – இந்திய சுதந்திரத்தின் 75-ம் ஆண்டான 2022 அல்லது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிறுவன நூற்றாண்டான 2025 ஆகிய இரண்டும் அதற்கான நல்ல தேதிகள்தான். ஆனால் நரேந்திர மோடியும், அமித்ஷாவும் அதற்காகக் காத்திருக்க விரும்பமாட்டார்கள். அவர்கள் வேகமாக முடிவெடுப்பவர்கள். நினைவிருக்கிறதா ?
♦ கார்ப்பரேட் காவி பாசிசம் – புதிய ஜனநாயகம் வெளியீடு ஆன்லைனில் வாங்க !
பாபர் மசூதி இடித்துத் தள்ளப்பட்டபோது திகிலுற்றிருந்ததைப் போல் இந்தியாவில் நிறைய பேர் சம்பவங்களின் இந்தச் சுற்றைக் கண்டு திகிலுறுவார்கள். அவர்கள் யாரும் எவ்வித மாயையிலும் இருக்க வேண்டாம். இந்த நகர்வு அதிகாரம், வசதி வாய்ப்பு மற்றும் தமது குரலைக் கேட்கச் செய்யும் திறன் கொண்ட பலருடைய ஆதரவைப் பெற்றிருக்கிறது. இந்த ஒப்புதல், பக்தாள்களிலிடமிருந்தும், பாஜக இணையதள பகடியாளர்களிடமிருந்தும் மட்டுமோ அல்லது சோரம் போன ஊடகங்களிடமிருந்து மட்டுமோ வரப்போவதில்லை. மற்றபடி பொறுப்புள்ள மக்கள் பலரும் பிற முயற்சிகள் எல்லாம் சரியாக நடக்கும்பட்சத்தில் இந்து ராஷ்டிரம் அறிவிக்கப்படும் சமயத்தில் இது நடப்பது குறித்து மகிழ்ச்சி அடைவர். சங்க பரிவாரம் தமது கனவு ராஜ்ஜியத்தில் அதுமட்டும் தனியாக இல்லை.
தமிழாக்கம் : நந்தன்
கட்டுரையாளர் : சித்தார்த் பாட்டியா
நன்றி : தி வயர்