“மோடி அரசின் புதிய கல்விக் கொள்கை 2019 முறியடிப்போம்!” என்ற தலைப்பில் குடந்தையில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக  அரங்கக்கூட்டம் 13.8.2019 அன்று, பெரியார் மாளிகையில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு குடந்தை பகுதி அமைப்பாளர் தோழர் திலீபன்,  தலைமை தாங்கினார். “இப்ப அரசு கல்லூரில படிக்கும் போதே, வீட்டு கஷ்டத்தால குழு கடன் நிறைய வாங்கி, அத கட்டுறதுக்கு காலேஜ் லீவ் போட்டு, சப்ளையர் வேலைக்கு போறதால ஒழுங்கா காலேஜு போக முடில, படிக்கவும் முடில, இதுல புதிய கல்வி கொள்கைனு.. எல்லாம் பெரு முதலாளிகளிடம் போச்சுனா, எங்கள போல கஷ்டபடுற பசங்க படிப்புலாம் அப்புறம் கேள்விக்குறிதான்” என்று தன் சொந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

அடுத்து கருத்துரையாக, தாளாண்மை உழவர் இயக்கத்தின் தோழர் திருநாவுக்கரசு பேசுகையில், “கல்வி என்பது அறிவாற்றல் உள்ள மாணவர்களை உருவாக்க வேண்டும். ஆனால், ஏற்கெனவே இருக்கும் கல்வி முறை, நம்மை சிந்திக்கவிடாமல்,  ஆங்கிலேயனுக்கு சேவை செய்வதற்காக உருவாக்கப்பட்டது. இருந்தபோதும்  அது ஏதோ ஒரு வகையில் பலருக்கு கல்வியை கொடுத்தது, ஆனால் தற்போது அருகமைப் பள்ளிகளை மூடுவது, கல்வியை பெரு முதலாளிகளிடம் ஒப்படைப்பது, என்பது பொதிமாடுகள் போன்ற இளம் தலைமுறைகளையே உருவாக்கும். இதை எப்பாடுபட்டாவது தடுக்க வேண்டும்” என்றார்.

படிக்க:
♦ தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் ! தருமபுரி அரங்கக்கூட்டம் !
♦ காஷ்மீர் : பத்திரிகையாளர்களை மிரட்டும் போலீசு !

பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த ஆசிரியர் செந்தில், நமது நாட்டில் கல்விக் கொள்கை உருவான வரலாறு பற்றியும், சூத்திரர்களுக்கு கல்வி சென்றதும், அதை பார்ப்பனர்கள் எவ்வாறு பொறுக்காமல் துடித்தார்கள் என்பதையும், இன்று மிக கோரமான முறையில் அறிவியலுக்கு புறம்பான, புராண இதிகாச குப்பைகளை அறிவியல் என மாணவர்களிடம் புகுத்துவது பற்றியும் விளக்கிப் பேசினார். “இந்த புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையாக இருக்கும் போதே, பல வழிகளில் அமல்படுத்திவருகிறார்கள். இதை முறியடிக்க வேண்டும், அதற்காக எமது அமைப்பு துணை நிற்கும்” என்று பேசினார்.

சிறப்புரையாக பு.மா.இ.மு மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் த. கணேசன் புதிய கல்விக் கொள்கை எப்படி கார்ப்ரேட்டுகளுக்கும், காவிகளுக்கும் சேவை செய்கிற வகையில் உள்ளது என்பதையும், இதற்கு எதிர்ப்பு தமிழகத்தில்தான் பலமாக உள்ளது மற்ற மாநிலங்களில் உள்ள ஆசிரியர்களின் அறிவு மிகவும் பின்தங்கி உள்ளதால் அங்கு இதைப் பற்றியான விழிப்புணர்வு மிக குறைந்த அளவே உள்ளது. எனவே  இதை எதிர்த்து முறியடிக்க பள்ளி – கல்லூரி  மாணவர்கள் – ஆசிரியர்கள் – பேராசிரியர்கள் ஒற்றுமையுடன் களத்தில் போராட வேண்டும், என்று அறைகூவல் விடுத்தார்.

கடலூர் பு.மா.இ.மு தோழர்கள் மாணவர்களை ஈர்க்கும் விதமாக பாடல்களை பாடினார்கள். தோழர் சந்தோஷ் நன்றியுரையாற்றினார். மாணவர்கள், ஆசிரியர்கள், ஜனநாயக சக்திகள் என பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
குடந்தை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க