சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை கைவிடக் கோரி விளம்பரம் செய்தது போல, இப்போது ரயில்வே மானியத்தையும் கைவிடக் கோரி விளம்பரத்தைத் தொடங்க இருக்கிறது மோடி அரசு. இரயில்வேயில் பயணிகள் இரயில் போக்குவரத்தில் ஏற்படும் நட்டத்தைச் சமாளிக்கும் முயற்சியாகவே இந்த மானியக் கைவிடல் கோரிக்கைத் திட்டத்தைக் கையில் எடுத்திருக்கிறதாம் மோடி அரசு.
இத்தகைய மானியக் கைவிடல் திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் நடுத்தரவர்க்க, உயர் நடுத்தர வர்க்கப் புரவலர்கள் இனி தங்களது பயணக் கட்டணத்தில் சுமார் 26% முதல் 71% வரை கூடுதல் கட்டணம் செலுத்திப் பயணிக்க நேரிடும்.
முதல்வகுப்பு ஏசி, இரண்டாம் வகுப்பு ஏசி மற்றும் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளில் பயணம் செய்வோரிடம் மட்டுமே இக்கோரிக்கை வைக்கப்படும். மூன்றாம் வகுப்பு ஏசி மற்றும் முன்பதிவற்ற இரண்டாம் வகுப்பில் பயணிக்கும் பயணிகளிடம் இக்கோரிக்கை வைக்கப்படமாட்டாது என்கிறது ரயில்வே.
இதுகுறித்து இரயில்வே தகவல்களின்படி ஆண்டுக்கு பயணிகள் இரயில்களினால் மட்டும் ஏற்படும் இழப்பு, சுமார் ரூ. 42,000 கோடி. இந்த நாற்பத்திரண்டாயிரம் கோடி ரூபாயில், இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளில் மட்டும் சுமார் ரூ. 11,000 கோடி இழப்பு ஏற்படுகிறது. முதல் வகுப்பு ஏசி பெட்டிகளில் ரூ. 200 கோடி இழப்பு ஏற்படுகிறது. இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிகளில் ரூ. 700 கோடி இழப்பு ஏற்படுகிறது. ஆகவே இந்த வகுப்புகளில் பயணம் செய்பவர்களிடம் மானியக் கைவிடல் கோரிக்கையை வைக்க உள்ளதாகத் தெரிவிக்கிறது இரயில்வே.
விரைவு வண்டி அல்லாத பாசஞ்சர் பிரிவு ரயில்களின் மூலம் சுமார் ரூ. 14,000 கோடியும், விரைவு வண்டிகளில் இருக்கும் முன்பதிவு அல்லாத இரண்டாம் வகுப்பின் மூலம் ரூ. 12,000 கோடியும், புறநகர் இரயில் பிரிவின் மூலம் ரூ. 6,000 கோடியும் இழப்பு ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளது.
படிக்க:
♦ காஷ்மீர் : சங்கிகளின் புரட்டும் வல்லபாய் பட்டேலின் நிலைப்பாடும் !
♦ ” போலி அறிவியலில் பாதிப்பில்லாதது எதுவுமில்லை ” | ஐஐடி இயக்குனருக்கு ஒரு கடிதம் !
ஏற்கெனவே மூன்றாம் வகுப்பு ஏசி பயணத்திற்கு வசூலிக்கப்படும் கட்டணத்தினால் இழப்புகள் ஏதுமில்லாததால் அதில் பயணம் செய்பவர்களுக்கு மானியக் கைவிடல் கோரிக்கை வைக்கவில்லையாம்.
இரயில் பயணத்திற்கு பயணிகளால் செலுத்தப்படும் ஒவ்வொரு ரூபாய்க்கும் சராசரியாக 43 பைசாக்கள் மானியமாக வழங்குகிறது இந்திய இரயில்வேத்துறை. தனித்தனியாகப் பார்த்தால் அரசுத்தரப்பில் இருந்து, முதல்வகுப்பு ஏசி பிரிவினருக்கு ஒரு ரூபாய்க்கு 71 பைசா மானியமாக வழங்கப்படுகிறது. இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிப் பயணப் பிரிவினருக்கு ஒரு ரூபாய்க்கு 37 பைசா மானியமாக வழங்கப்படுகிறது. இரண்டாம் வகுப்பு ஏசி பிரிவினருக்கு ஒரு ரூபாய்க்கு 26 பைசா மானியமாக வழங்கப்படுகிறது.
இவை மானியம் என்று சொல்லப்பட்டலும், மக்களின் வரிப் பணத்தில் திரட்டப்பட்ட மத்திய அரசின் நிதியிலிருந்துதான் இப்பணம் வழங்கப்படுகிறது. ஆயினும், அரசைப் பொருத்தவரையில் இது மானியம்தான்.
மேலும், பயணிகள் இரயில்களில்தான் இழப்பே ஒழிய, சரக்கு ரயில்களினால் அல்ல. சரக்கு ரயிலைப் பொருத்தவரையில் அது இரயில்வேத் துறைக்கு இலாபத்தையே ஈட்டித் தருகிறது. எனில் மொத்தமாக இரயில்வே துறை என்று பார்த்தால் அது இலாபம்தானே.. அதைப் பற்றி ஏன் வாய்திறக்காமல், நம்மிடம் மானியத்தைக் கைவிடக் கோருகிறது இந்த அரசு ?
இந்த வகுப்புகளில் பயணம் செய்பவர்களுக்கு இனி ரிசர்வேசன் ஃபார்மில் அதற்கென ஒரு பெட்டி கொடுக்கப்பட்டிருக்கும். நான் எனது மானியத்தை விட்டுத்தருகிறேன் என அந்தப் பெட்டியில் டிக் செய்தால், உங்களுக்கு மானியத்தொகை இல்லாத சீட்டு வழங்கப்படும். உதாரணத்திற்கு, இரண்டாம் வகுப்பு படுக்கைப் பிரிவில் நீங்கள் பயணிப்பவராக இருக்கும் பட்சத்தில் இவ்வளவு நாளாக 150 ரூபாய் கொடுத்து பெற்ற டிக்கெட்டை இனி 200 ரூபாய்க்கு வாங்குவீர்கள்.
இந்தத் திட்டத்தின் மூலமாக சுமார் ரூ.10,000 கோடி வரையில் இழப்பிலிருந்து மீள முடியும் என்று பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் தி வயர் இணையதளத்திற்கு தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்திற்கு முன்னோட்டமாக, சதாப்தி, ஜன் சதாப்தி, ராஜ்தானி ஆகிய ரயில்களில் பயணிக்கும் மூத்த குடிமக்களிடம் சலுகைகளைக் கைவிடுமாறு கோரிக்கை வைத்துள்ளது இரயில்வே.
படிக்க:
♦ பார்லே பிஸ்கெட் நிறுவனத்தில் 10,000 பேர் பணிநீக்கம் !
♦ இரயில்வே பட்ஜெட் : முதலாளிகளுக்கா மக்களுக்கா ? சிறப்புக் கட்டுரை
அடுத்தபடியாக பொதுத்துறை – தனியார் கூட்டுத் திட்டத்தின் கீழ் சில தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் இரயில்களை தனியார் இயக்குவதற்கு அனுமதி வழங்கவிருக்கிறது மத்திய அரசு. ஐ.ஆர்.சி.டி.சி என்னும் பொதுத்துறை நிறுவனத்தின் கீழ் இந்த பொதுத்துறை தனியார் கூட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறது ரயில்வே.
இந்த இரண்டு “புரட்சிகர” திட்டங்களும் மோடியின் “100 நாள் வேலைத்திட்டம்” என்ற “புரட்சிகர” திட்டத்தின் கீழ் இரயில்வே துறையால் மத்திய அரசிற்கு முன்வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
இரண்டாம் முறை ஆட்சியில் அமர்ந்த பிறகு, தமது மறுகாலனியாக்க செயல்திட்டங்களை வெகுவிரைவாக அமல்படுத்தி வருகிறது மோடி அரசு. தற்போது இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான இரயில்வேத்துறையில் கை வைத்திருக்கிறது.
தனது கார்ப்பரேட் எஜமானர்களுக்கு இரயில்வேதுறையை கையளிக்கும் போது லாபகரமான வருமானம் உள்ள தொழிலாக மாற்றித் தருவதற்காகவே இந்த மானியக் கைவிடல் திட்டம். பின்னர் படிப்படியாக கட்டண உயர்வு – தனியார்மயம் – பகற்கொள்ளை என நம்மை மொட்டையடிப்பதற்காகவே இப்போது மண்டையில் தண்ணீரைத் தெளித்திருக்கிறது. தண்ணீர்தானே என்றெண்ணி அமைதியாக இருந்தால் மொட்டை நிச்சயம் !
நந்தன்
நன்றி : த வயர்