நோபல் விருது பெற்ற பொருளாதார நிபுணரான அமர்த்தியா சென், ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை நீக்கிய மோடி அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
“காஷ்மீரில் ஜனநாயகம் இல்லாத எந்தவொரு தீர்மானமும் பலனைத் தரும் என நான் நினைக்கவில்லை” என்கிற அமர்த்தியா சென், பெரும்பான்மை பலத்தால் எடுக்கப்பட்ட மத்திய அரசின் முடிவு, அனைத்து மனிதர்களின் உரிமைகளையும் பேணத் தவறிவிட்டதாகக் கூறியுள்ளார்.
“உலகின் ஜனநாயக நெறிக்காக இவ்வளவு சாதனைகளை செய்த, ஜனநாயகத்தை அமலாக்கிய மேற்கத்திய நாடல்லாத முதல் நாடு என்ற பெருமை கொண்டது இந்தியா. இப்போது ஒரு இந்தியராக, இந்தியாவின் நடவடிக்கையில் நான் பெருமை கொள்ளவில்லை. இந்தியாவின் அடிப்படை நற்பெயரை கெடுப்பதாக இந்த நடவடிக்கை இருக்கிறது …” எனவும் அவர் என்.டீ.டி.வி. தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். காஷ்மீரிகள் தங்கள் நிலத்தின் மீதான உரிமைகள் குறித்து அவர்கள்தான் முடிவெடுக்க முடியும். அவர்களுக்குத்தான் சட்டரீதியான உரிமை உள்ளது எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதையும் அமர்த்தியா சென் விமர்சித்துள்ளார். “மக்கள் தலைவர்களின் கருத்துக்களை கேட்காமல் உண்மைத் தன்மையும் நீதியும் அதில் இருக்காது. கடந்த காலங்களில் நாட்டை வழிநடத்திய, அரசுகளை உருவாக்கிய பெரிய தலைவர்கள் உட்பட நூற்றுக்கணக்கான தலைவர்கள் வீட்டுச் சிறையிலும் சிலர் சிறையிலும் இருக்கிறார்கள். இதன் மூலம் ஜனநாயகத்தின் வழிகளை திணறடிக்கறீர்கள்” என அவர் கூறியுள்ளார்.
படிக்க:
♦ காஷ்மீர் : இராணுவத்தின் அத்துமீறலை அம்பலப்படுத்திய ஷெஹ்லா ரஷித் மீது வழக்கு !
♦ முடக்கப்பட்ட காஷ்மீர் பள்ளத்தாக்கு : படக் கட்டுரை
முன்னாள் முதலமைச்சர்கள் ஒமர் அப்துல்லா, ஃபரூக் அப்துல்லா, மெகபூபா முஃப்தி ஆகியோரும் சஜ்ஜத் லோன், ஷா ஃபைசல், மாநில காங்கிரஸ் தலைவர் குலாம் அகமது மிர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
“சுதந்திரம் கிடைத்ததும் நான் எதிர்பார்த்த இறுதி விசயம்… தடுப்புக் காவல் கைதுகள் காலாவதியாகிவிடும் என்பதுதான்” என்கிற சென், உயிர் இழப்பையும் பொருளாதார இழப்பையும் தடுப்பதாகக் கூறி, போராட்டத்தை அடக்கும் விதமாக தொடர்ந்து மாநிலத்தை மிகப்பெரும் கண்காணிப்பின் கீழ் வைத்திருப்பது ‘காலனித்துவ சாக்கு’ எனவும் இப்படித்தான் பிரிட்டீஷார் 200 ஆண்டுகளாக நாட்டை ஆண்டார்கள் எனவும் அவர் கடுமையாக சாடியுள்ளார்.
ஜனநாயகத்தை உயர்த்திப் பிடிக்கும் முதலாளித்துவ அறிஞர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வந்தபோதும், மோடி அரசு காஷ்மீரில் ஒடுக்குமுறையை தொடர்ந்து கொண்டிருக்கிறது. பதினைந்து நாட்களுக்கும் மேலாக அம்மாநிலத்தை முடக்கிப் போட்டுள்ளது இந்திய அரசு.

கலைமதி
நன்றி: ஸ்க்ரால்