“தமிழகத்தை நாசமாக்காதே!” என்கின்ற தலைப்பில் மக்கள அதிகாரம் சார்பில் 19.08.2019 அன்று மாலை மதுரையில் நடக்கவிருந்த பொதுக்கூட்டத்திற்கு இறுதி நேரத்தில் போலீசு அனுமதி மறுத்ததால் அந்நிகழ்ச்சி அரங்கக்கூட்டமாக நடந்தது.

கூட்டத்தின் முதல் நிகழ்ச்சியாக மக்கள் அதிகாரத்தின் மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் மருது வரவேற்புரை நிகழ்த்தினார்.

கூட்டத்திற்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் குருசாமி தலைமை தாங்கினார். அவர் தன்னுடைய தலைமையுரையில், “பொதுவாகவே மக்கள் அதிகாரம் கூட்டம் என்றாலே அனுமதி கொடுப்பதில்லை என்கின்ற முடிவோடுதான் அரசும் போலீசும் இருக்கிறது. ஆனால் ரூம் போட்டு உக்காந்து யோசித்து புதிய புதிய முறையில் அனுமதி மறுக்கின்றனர். இன்று போய் நாளை வா என்று தினமும் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி இழுத்தடித்துவிட்டு பொதுக்கூட்டத்திற்கு முதல்நாள் அனுமதி இல்லை என்பது. புதிதாக கேள்வியை கேட்டு மறுப்பது இப்படி ஜனநாயக அடிப்படையின்றி செயல்படுகிறார்கள்.

”இந்தியாவை நாசமாக்காதே” என்கின்ற தலைப்பு வைத்தால் கூட இன்றைய சூழ்நிலைக்கு பொருத்தமானதுதான். அந்தளவிற்கு இன்று இந்திய மக்களையும் பொருளாதாரத்தையும் சீரழித்துள்ளது இந்த பாசிச கும்பல். இதில் குறிப்பாக தமிழகத்தை ஆரிய வன்மத்தோடு நாசமாக்க மீத்தேன், ஹைட்ரோகார்பன், அணுக்கழிவு மையம், எட்டு வழிச்சாலை, சாகர்மாலா என நாசகார திட்டங்களை இங்கு நடைமுறைப்படுத்த திட்டமிடுகிறார்கள். இதனை எதிர்த்து இயக்கங்கள் மட்டுமா போராடுகிறார்கள்? பலதரப்பட்ட மக்களும் போராடுகிறார்கள்.

ஆனால் போராடிய அனைவரையும் ஒடுக்குகிறார்கள். கூடங்குளத்தில், நியூட்டிரினோவில், தேசிய கல்வி கொள்கை என அனைத்தையும் அமுல்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டிய அவசியமிருக்கின்றது. எனவேதான் அனைத்து மாற்று அமைப்பை சேர்ந்தவர்களையும் இந்த கூட்டத்திற்கு அழைத்துள்ளோம். எனவே தனித்தனியே பிரிந்து போராடி கொண்டிருந்த நம்மை எல்லாம் ஒன்றிணைத்த ஒரே ஒரு காரணத்திற்காக நாம் அவர்களுக்கு நன்றி சொல்லலாம்” எனப் பேசினார்.

அடுத்ததாக பேசிய தமிழ்தேச மக்கள் முன்னணி அமைப்பின் தலைவர், தோழர் மீ.த. பாண்டியன் பேசும் போது

“இது கார்பரேட் நிறுவனங்களின் வெளிப்படையான பன்முனைத்தாக்குதல். முன்னர் இத்தகைய திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தவர்கள் கூட தற்போது இதனை புரிந்து கொண்டு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். நாம் அணு உலையே வேண்டாம் என்றால் ஆறு அணு உலை வைத்து அணுவுலை பூங்கா அமைக்கப்போகிறோம் என்கிறார்கள். இப்போது அணு கழிவு மையம், மீத்தேன் என அதிகாரத்தை குவித்து வைத்து கொண்டு இதை நடைமுறப்படுத்துகிறார்கள்.

பொட்டிபுரத்தில் நம் சொந்தக்காரர்களைக் கூட நாம் பார்க்கச் செல்ல முடியாது. அந்தளவிற்கு கெடுபிடி. எல்லாவற்றிற்கும் காரணம் இந்த ஆர்.எஸ்.எஸ். கும்பல். முன்பெல்லாம் இவர்கள் நம்மை பார்த்து பதுங்கியிருந்தவர்கள், தற்போது நம்மிடம் நேரடியாக சண்டைக்கு வரும் அளவிற்கு அதிகாரத்தின் நிழலில் அவர்கள் பாசிசத்தை நம் கண்முன் காட்ட ஆரம்பித்துள்ளார்கள்.

போலீசு, நீதிமன்றம், கார்ப்பரேட் எல்லாம் அரசோடு கூட்டணி அமைத்து நம் நாட்டை கொள்ளையிடுகிறார்கள். இவர்களுடைய இந்த கூட்டணியை முறியடிக்க ஒரு தனித்துவமான மக்கள் கூட்டணியை அமைக்க வேண்டும். அது செங்கொடியை கையில் ஏந்தியிருப்பவர்களாலேயே சாத்தியம்” என்று பேசினார்.

படிக்க:
♦ ஓசூர் அசோக் லேலாண்டில் சட்டவிரோத லே – ஆஃப் !
♦ ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – ஆகஸ்டு 2019 முதல் பாகம் | டவுண்லோடு

திராவிடர் விடுதலை கழகத்தின் மதுரை மாவட்ட செயலர் தோழர் மா.பா. மணி அமுதன் அவர்கள் பேசும்போது

“மதுரையில் தற்போதைய நிலையில் எந்த இயக்கத்திற்கும் எந்த கூட்டங்களுக்கும் அனுமதி மறுக்கும் காவல்துறை ஆர்.எஸ்.எஸ் பள்ளிகளில் நடத்தும் எந்த கூட்டத்திற்கும் தடை விதிப்பதில்லை. சத்தமில்லாமல் எல்லா பள்ளிகளிலும் குழந்தைகள் மனதில் நஞ்சை விதைக்கும் வேலையை செய்துகொண்டு இருக்கிறார்கள். அதுமட்டுமில்லை வட மாநிலத்தில் ஜெய்சிரீராம் சொல்ல சொல்லி முஸ்லிம் மக்களை கொல்வதை போல் இங்கே நீங்கள் செய்தால் உங்களை நாங்கள் அதே போல் தண்டிப்போம் என்று கூட்டத்தில் பேசியதற்கே அன்றிரவு 3 மணிக்கு வீட்டில் வந்து என்னை கைது செய்தார்கள்.

மாணவர்கள் சாதிக் கயிறு கட்டுவதை தடை செய்த விசயத்தில் எச்.ராஜா பேசிய உடனேயே மந்திரி செங்கோட்டையன் அந்த உத்தரவை ரத்து செய்கிறார் என்றால் இவர்கள் யாருடைய கையாட்களாக இருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்” என்று பேசினார்.

மக்கள் சிவில் உரிமை கழகத்தின் தேசிய செயலர் பேராசிரியர். முரளி தன்னுடைய உரையில் “இந்த நாட்டில் வளர்ச்சி என்றால் நிலங்களைப் பறிப்பது என்று அர்த்தம்” என்று கூறி வளர்ச்சி என்ற பெயரில் இந்தியாவில் சமீபத்தில் திட்டமிடப்பட்ட ஓவ்வொரு துறையிலும் மக்களிடமிருந்து எத்தனை ஆயிரகணக்கான ஏக்கர் நிலங்கள் பறிக்கப்பட்டன என்று புள்ளி விவரங்களோடு பட்டியலிட்டார். மேலும் மீத்தேன் திட்டம் என்றாலே உலக அளவில் ஒரு பெயரை பெற்றிருக்கிறது “நரகத்தின் கதவு” என்று. நமக்கு நரகத்தை இவர்கள் பரிசளிக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் விச பாம்போடு படுத்து கொண்டிருப்பதாக உணருகிறேன்” என்று பேசினார்.

மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திரு. தியாகராஜன் பேசும் போது உலகமெங்கும் கார்பரேட் நிறுவனங்கள் தங்களின் லாபத்திற்காக இயற்கையை சூறையாடுவதால் மக்கள் எப்படி எல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் அதை எதிர்த்து போராடும் மக்களை நீதிமன்றங்கள் கூட அதிகாரத்தோடு சேர்ந்து கொண்டு எப்படி ஒடுக்குகிறது என்பதையும் பட்டியலிட்டார்.

தமிழ் புலிகள் அமைப்பின் நிறுவனத்தலைவர் தோழர். நாகை திருவள்ளுவன் பேசும் போது “ஆள், அம்பு, அதிகாரிகள், படை என்று இந்த நாடே உண்மையில் ஒரு கார்ப்பரேட் அதிகாரமாகத்தான் இருக்கிறது. ஆனால் பெயரில் நாம் மக்கள் அதிகாரம் என்று இருப்பதற்கே இவர்கள் பயப்படுகிறார்கள் என்றால் இதுதான் உண்மையாக நாம் பின்பற்ற வேண்டிய பாதை என்பது தெளிவாகத் தெரிகிறது. இத்தகைய ஒரு அமைப்பின் கூட்டத்திற்கு அவர்கள் தடை விதித்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால் சீப்பை ஒளித்து வைத்துவிட்டால் கல்யாணம் நின்றுவிடுமா? கூட்டத்திற்கு அனுமதி மறுத்துவிட்டால் மக்கள் அதிகாரம் என்கின்ற கருத்து மக்களிடம் பரவாமல் போய்விடுமா? என்று பேசி இவர்கள் கொண்டு வரும் அனைத்து திட்டங்களும் தமிழகத்திற்கு பேரழிவை தரக்கூடியவை என்பதை புரிந்துகொள்ள வேண்டுமெனில் பார்ப்பானியத்தின் சூழ்ச்சிகளை வரலாற்றுரீதியாக புரிந்து கொள்ள வேண்டும்” என எழுச்சிகரமாக உரையாற்றினார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

“மதுரையில் வளர்ச்சி என்ற பெயரில் நடைபெறும் பல்வேறு திட்டங்களிலும், சாலை விரிவாக்கத்திலும் எத்தனை எத்தனை மரங்களும், ஏரிகளும் அழிக்கப்பட்டன என்பதையும், மதுரை காளவாசல் பகுதியை காற்று மாசடைந்த பகுதி என்று சுற்றுச் சூழல் அலுவலகமே அறிவித்த ஆறு மாதத்தில் அதே பகுதியில் பாலம் கட்டுவதற்கு சுற்றுச் சூழல் அலுவலகம் எப்படி அனுமதி கொடுத்தது. அதே போல் விமான நிலைய விரிவாக்கம் என்கின்ற பெயரில் 4 கிராமத்திற்கு நிலங்களுக்கு பாசன நீர் கொடுக்கும் கண்மாயை ஆக்கிரமித்ததில் வேலம்மாள் மருத்துவமனைக்கும் மிகப்பெரிய நிறுவனங்களுக்கும் அந்த கண்மாயின் தண்ணீரை மடை மாற்றுவதற்காகத்தான் ” என்று தன்னுடைய கள அனுபவத்தை மக்களறிய பேசினார் நாணல் நண்பர்கள் குழிவின் தோழர் சிறிதர் நெடுஞ்சழியன்.

“தன் சொந்த மக்களை கையால் மலம் அள்ள வைத்து விட்டு நியூட்ரினோ ஆய்வு செய்வதுதான் இந்த நாட்டின் அரசாங்கம் என்றால் இது யாருக்கான அரசு? நாடு பிரிவினையின் போது நடந்த கலவரங்களுக்கு பிறகு பாபர் மசூதி இடிப்பிற்குப் பிறகுதான் மீண்டும் மிகப்பெரிய மதக் கலவரங்கள் நடக்க ஆரம்பித்தன. ஆர்.எஸ்.எஸ். கும்பல் இந்த நாட்டை மிகப்பெரிய பிரிவினைவாதத்திற்கு கொண்டு போய் கொண்டிருக்கிறது. அத்வானி ஒரு முறை சொன்னார் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அம்பேத்கர் புத்தகங்களை தடை செய்வோம் என்று. இவர்களுக்கு அறிவை கண்டால் பயம் வருகிறது, கோபம் வருகிறது. இவர்களை வீழ்த்த வேண்டுமெனில் பகத்சிங்கை போன்ற ஒரு ஆளுமை தேவை. மக்கள் அதிகாரம் அந்த தேவையை நிறைவு செய்ய ஆற்றல் பெற்ற அமைப்பு” என்று வி.சி.க.-வின் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் தோழர் இன்குலாப் அவர்கள் உரையாற்றினார்.

அடுத்ததாக பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சியின் மதுரை மாவட்ட செயலாளர் தோழர் விஜயராஜன் தன்னுடைய உரையில் “நம்முடைய மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் என்னிடம் சொன்னார், பாராளுமன்றத்தில் உட்கார்ந்திருப்பது ஏதோ காசியில் சாமியார்களுக்கிடையே உட்கார்ந்திருப்பது போல் இருக்கிறது என்று. அந்த அளவிற்கு ஆர்.எஸ்.எஸ் தன்னுடைய காவி கொள்கையை நாடு முழுவதும் விரித்துள்ளது. அதே போல் அவர் சொன்ன இன்னொரு தகவல் பி.ஜே.பி -யின் வெறுப்புக் கொள்கையின் சாட்சியமாக உள்ளது. அதாவது மதுரை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட உள்ள திட்டங்களை நிதி மந்திரி திருமதி நிர்மலா சீதாராமனிடம் கேட்கும் போது அவர் “நீங்கள் பி.ஜே.பி. -க்கு வாக்களிக்காத போது உங்களிடம் எதற்காக நான் அதை சொல்ல வேண்டும்” என்று பேசினாராம். எனவே இவர்களுடைய கொள்கையே வெறுப்பு கொள்கைதான் எனவே இவர்களை முறியடிக்க வேண்டுமெனில் ஒரு தத்துவார்த்த கொள்கையின் அடிப்படையில் நாம் ஒன்றிணைய வேண்டிய அவசியமிருக்கிறது” என்று பேசினார்.

படிக்க:
♦ மக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் ! செய்தி – படங்கள் – காணொளி
♦ மோடியின் அடுத்த இடி : இரயில் கட்டண உயர்வா ?

மக்கள அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ தன்னுடைய சிறப்புரையில் “மீத்தேன், எட்டு வழி சாலை, அணு உலை ஆகியவைகள் வேண்டாம் என்பது ஒரு புறமிருக்கட்டும் முதலில் அதை பற்றி பேச நமக்கு உரிமை இருக்கிறதா இல்லையா என்பதே முதல் கேள்வி. ஏனென்றால் இத்தகைய தமிழகத்தை பாதிக்க கூடிய மோசமான திட்டங்களை பற்றி பேச யாருக்குமே அனுமதி இல்லை. நிலைமை இப்படி இருக்கும்போது நாம் எப்படி இந்த ஆட்சியை, பிஜேபி கும்பலை முறியடிப்பது? அதுதான் இங்கே முதல் கேள்வி.

நாம் இவர்களை பார்த்து பயப்பட வேண்டியதில்லை ஏனென்றால் அவர்கள் மக்களை ஏமாற்றும் திருடர்கள். உழைத்து வாழும் நாம் ஒரு திருடனுக்கு ஏன் பயப்பட வேண்டும். சமீபத்தில் செய்திகளில் காட்டினார்களே, ஒரு முதிய இணையர்கள் சேர்ந்து கொள்ளையடிக்க வந்தவர்களை விரட்டியடித்தார்களே அவர்களை போல்தான் நாம் அதிகாரிகளை, போலீசை பார்க்க வேண்டும். நீ அனுமதி கொடுக்கவில்லை என்றால் என்ன? தடையை மீறி நாங்கள் கூட்டம் நடத்துவோம், உன்னால் ஆனதை செய், எதற்கும் நாங்கள் தயார் என்று செவிட்டில் அடித்தாற்போல் நம்முடைய நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.

இன்னும் மனு கொடுப்பவர்களாகவே இருந்தோமென்றால், அனுமதி கேட்டுத்தான் போராடுவோம் என்றால் நம்மால் இந்த திட்டங்களை எல்லாம் தடுக்க முடியாது. எனவே தூத்துக்குடியில் அம்மக்கள் திரண்டதை போல திட்டமிட்ட வழியில் திரண்டு போராட வேண்டும்” என்று பேசினார்.

இறுதியில் மகஇக -வின் கலைக்குழு சார்பில் தோழர் கோவன் அவர்களின் தலைமையில் பாடப்பட்ட பாடல்கள் மக்களிடையே எழுச்சிகரமான உணர்வை உருவாக்கியது.

அதன்பின் மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர் சரவணன் நன்றியுரை வழங்க கூட்டம் நிறைவுற்றது.

தகவல்:
மக்கள் அதிகாரம்,
மதுரை மண்டலம்.
தொடர்புக்கு – 98438 73975
98943 12290

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க