பாபர் மசூதி இடிப்பு பற்றிய ஆனந்த் பட்வர்த்தனின் படத்தை திரையிட்ட ஹைதராபாத் பல்கலை மாணவர்கள் கைது !
இந்துத்துவ காவிகள் அரங்கேற்றிய பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட ஆனந்த பட்வர்த்தனின் ‘ராமனின் பெயரால்’ என்ற ஆவணப்படத்தை ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் திரையிட்டதற்காக மாணவர்கள் மற்றும் செயல்பாட்டாளர்களை கைது செய்துள்ளது தெலுங்கானா போலீசு.
இடதுசாரி மாணவர் அமைப்புகளான AISA, SFI -ஐச் சேர்ந்த மாணவர்கள், பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையில் ஆவணப்படத்தை திரையிட இருந்தனர். இதற்கென பல்கலை நிர்வாகத்திடம் முன் அனுமதியும் வாங்கியுள்ளனர். ஆனால், திடீரென தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட நிர்வாகம், போலீசை வரவழைத்துள்ளது.

ஆனந்த் பட்வர்த்தனின் ‘ராமனின் பெயரால்’ ஆவணப்படம் தடைசெய்யப்பட்ட படம் அல்ல. அனைவரும் பார்க்கக்கூடிய படமாக மத்திய அரசின் தணிக்கையில் ‘யு’ சான்றிதழ் பெற்றது. 1992-ம் ஆண்டு தேசிய விருது பெற்று, தூர்தஷனிலும் ஒளிபரப்பான ஆவணப்படம் இது.
இந்தப் படத்தை அனுமதி வாங்கி திரையிட்டதற்காக இடதுசாரி மாணவர் அமைப்பைச் சேர்ந்த பஜாவன், சோனல், நிகில், விகாஸ், ஆரிஃப் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவர்களை நிகழ்விடத்திலிருந்து வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றுள்ளது போலீசு. போலீசின் செயலைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தியதன் விளைவாக, மாணவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
படிக்க:
♦ “இந்தியராக நான் பெருமை கொள்ளவில்லை” : அமர்த்தியா சென்
♦ Reason : இந்துத்துவ கும்பலின் கொலைவெறியை அம்பலப்படுத்தும் ஆனந்த் பட்வர்த்தனின் ஆவணப்படம் !
“பல்கலைக்கழகத்தின் அனுமதி இல்லாமல் திரையிட்டதற்காக மாணவர்களை ‘அழைத்து’ வந்தோம். ‘சூழலை பாதிக்கும்’வகையில் முன்னரும் இதுபோன்ற சம்பவங்களில் மாணவர்கள் ஈடுபட்டார்கள். அப்போது இதுபோன்று செய்ய மாட்டோம் என சொல்லியிருந்தார்கள்” என ஹைதராபாத் போலீசு அதிகாரி ஒருவர் மாணவர்களின் கைதுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
ஹைதராபாத் பல்கலையில் நடந்திருக்கும் இந்தச் சம்பவம் குறித்து தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார் ஆவணப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்த்தன்.
“ஹைதராபாத் பல்கலை மாணவர்கள் ‘ராமனின் பெயரால்’ படத்தை திரையிட்டதற்காக கைது செய்யப்பட்டிருப்பது பாசிச செயல். தேசிய விருது பெற்ற படத்தை தடை செய்திருக்கிறார்கள். நாம் ஒருபோதும் இவர்களிடம் சரணடைந்துவிடக்கூடாது” என தெரிவித்துள்ளார் அவர்.
Fascism. At HCU students screening Ram Ke Naam arrested. Film has "U" certificate and won National Award in 1992. High Court ordered its prime time telecast on DD in 1996. We shall never surrender !
— Anand Patwardhan (@anandverite) August 21, 2019
2016-ம் ஆண்டு ‘முசாஃபர் நகர் பற்றி எரிகிறது’ என்ற ஆவணப்படத்தை திரையிட்டதற்காக ஏ.பி.வி.பி. குண்டர்படையின் அழுத்தத்தால் முற்போக்கு மாணவர் அமைப்புகள் மீது கடுமையான நடவடிக்கையில் இறங்கியது பல்கலை நிர்வாகம். தொடர்ச்சியாக, பல்கலையில் ஆய்வு மாணவரான ரோஹித் வெமூலா விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்டு, அவரை தற்கொலை செய்யத் தூண்டியது நிர்வாகம்.
சங்க பரிவாரங்களின் மதவாதத்தை தோலுரிக்கும் இந்தப் படங்களை மாணவர்கள் பார்த்தால் தெளிவு பெற்றுவிடுவார்கள், தனது முகமூடி கிழிந்துவிடும் என பயம் கொள்கின்றன காவி அமைப்புகள். மத்தியில் ஆளும் பாஜக அரசுடன் இணக்கமாக செயல்படும் தெலுங்கானா அரசு, தொடர்ச்சியாக காவிகளின் ஏவலாளியாக செயல்பட்டு, மாணவர்களை அடக்கிக் கொண்டிருக்கிறது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
அனிதா
நன்றி: நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், சப்ரங் இந்தியா.