ங்கில ஆட்சி தென்னாட்டில் நிலைபெற்றபோது, பிராமணரல்லாதாரே முதன் முதலில் செல்வாக்குப் பெற்றிருந்தனர். கிழக்கு இந்தியக் கம்பெனியார் தென்னாட்டில் வர்த்தகசாலைகள் அமைத்தபோது, அவர்களிடம் முதன் முதல் அடுத்துப் பழகியவர் பிராமணரல்லாதாரே. துபாஷிகளாகவும், தரகர்களாகவும் அந்த வர்த்தகர்களின் நட்பைப் பெற்ற பிராமணரல்லாதாருக்கு நாட்டிலே செல்வாக்குப் பெருகலாயிற்று. வர்த்தகர்களாயிருந்த ஆங்கிலேயரின் தேச நிர்வாகத்தில் பிராமணர் அல்லாதாரே நிர்வாக உத்தியோகஸ்தர்களாய் இருந்தனர். ஆகவே, ஆதி காலத்தில் அரசியல் துறையில் முதலியார், நாயுடு, நாயக்கர், செட்டி, பிள்ளை போன்றவர்களே இடம் பெற்றிருந்தனர். அவ்வாறு இடம் பெற்றிருந்தவர்கள் பிற்காலத்துப் பல பிராமணச் சிறுவர்களுக்கு உதவி புரிந்து உயரிய நிலைமைக்குக் கொண்டு வந்து முள்ளார்கள்.

ஒரு நாயக்கரான தாசில்தார் உதவியால், காலஞ்சென்ற சர்.டி. முத்துசுவாமி அய்யர் உயரிய நிலைக்கு வந்ததை ஒரு உதாரணமாகச் சொல்லலாம். பிராமணரல்லாதார் இயல்பாகவே நிர்வாகத் திறமை உடையவராகையினால், ஆங்கிலேயரின் நன் மதிப்பை வெகு எளிதில் பெற்றனர். இதுகாறும் ஆங்கிலேயர்களை மிலேச்சர்கள் என்றும், ஆங்கிலம் மிலேச்ச மொழி என்றும் கருதி ஒதுங்கி இருந்த பிராமணர்கள், அரசியலில் பிராமணரல்லாதார் ஆதிக்கமும் சமூக வாழ்வில் மதிப்பும் பெற்று வருவது கண்டு மேற்கொண்டு ஒதுங்கியிருந்தால், தமது சமூகம் வீழ்ச்சியடைவது உறுதியென உணர்ந்தனர்.

எனவே, ஆங்கிலங்கற்கவும், ஆங்கிலேயர் நட்பைப்பெறவும் அவர்கள் முன் வந்தனர். சென்னை ராஜாங்க கல்லூரிக்கு நூறு ஆண்டுகட்கு முன் அடிகோலப்பட்டது முதல் பிராமணர்கள் ஆங்கிலப் பயிற்சியில் தீவிரமாக ஈடுபடலாயினர். ஓதலையும் ஓதுவித்தலையும் குலத் தொழிலாகக் கொண்ட பிராமணர்கள் ஆங்கிலக் கல்விப் பயிற்சியில் வெகுவிரைவாக முன்னேற்றமடைந்ததனால், சர்க்காரும் அவர்களுக்குப் பல சலுகைகள் காட்டத் தொடங்கினார்கள். சென்னை மாகாண ராஜாங்கக் கல்லூரி ஸ்தாபிக்கப்பட்டபோது, பிராமணர்களே ஆதிக்கம் வகித்தனர். அதுமுதல் அரசியல் துறையிலும், பொது வாழ்விலும் பிராமண ஆதிக்கம் பெருகலாயிற்று. தமது சமூகநலனைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டுத் தமக்குச் சொந்தமாகப் பத்திரிகைகளும் தோற்றுவித்துக் கொண்டார்கள். பிராமணரல்லாதார் நிலைமை சீர்குலையத் தொடங்கிற்று.

அய்.சி.எஸ். உத்தியோகஸ்தர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு இங்கிலாந்திலும் இந்தியாவிலும் ஏக காலத்தில் பரீட்சைகள் நடத்த வேண்டுமென்று கிளர்ச்சி செய்தபோது, 1916-ல் சென்னை நிர்வாக சபை மெம்பராக இருந்த சர். அலெக்சாண்டர் கார்ட்யூ 1913-ல் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் முன் சாட்சியம் கொடுக்கையில், அவ்வாறு ஏக காலத்தில் பரீட்சைகள் நடத்தினால், கடுமையான வகுப்புணர்ச்சியுடைய ஒருசிறு சமூகத்தைச் சேர்ந்த பிராமணர்களே அப்பரீட்சையில் அதிகமாக வெற்றிபெறுவார்கள்; சிவில் சர்வீஸ் பிராமணமயமாகி விடும் எனக் கூறினார். மற்றும் மாகாண சிவில் சர்வீஸுக்கு 1892 முதல் 1904 வரை நடத்திய போட்டிப் பரீட்சைகளில் வெற்றியடைந்த 16 பேரில் 15 பேர் பிராமணர் என்றும் கூறினார். அதே காலத்தில் அசிஸ்டெண்ட் இஞ்சீனியர் வேலைக்கு நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் வெற்றிபெற்ற 21 பேரில் 17 பேர் பிராமணர்கள், அம்மட்டோ ! அக்காலத்தில் உத்தியோகம் வகித்த 140 டிப்டி கலெக்டர்களில் 77 பேர் பிராமணர்கள், 30 பேர் பிராமணரல்லாத இந்துக்கள், பாக்கிப் பேர் முகம்மதியர், இந்தியக் கிறித்துவர், அய்ரோப்பியர், ஆங்கிலோ இந்தியர். நீதி இலாகாவிலும் நிலைமை இவ்வாறாகவே இருந்தது. 1913-ல் உத்தியோகம் நடத்திய 128 ஜில்லா முனிசீப்புகளில் 93 பேர் பிராமணர், 25 பேர் பிராமணரல்லாத இந்துக்கள், பாக்கிப் பேர் முகம்மதியர், இந்தியக் கிறித்துவர். அய்ரோப்பியர், ஆங்கிலோ இந்தியர்கள், இவ்வாறு எல்லாத் துறைகளும் பிராமண மயமாகவே இருந்தன.(நூலிலிருந்து பக்.4-5)

ஹோம்ரூல் இயக்கத்தை எதிர்ப்பதேன்?

பிராமணரல்லாதாராகிய நாம் ஹோம்ரூல் இயக்கத்தை ஏன் எதிர்க்கிறோம்? நமக்கும் சீர்திருத்தத்தில் மிக்க அக்கறை உண்டு. ஹோம்ரூல் அல்லது சுயராஜ்யம் நமது லட்சியமாக இருக்க வேண்டுமென்றும், படிப்படியாக அதைப் பெற வேண்டுமென்றும் நாம் கூறுகிறோம். அந்த லட்சியத்தை முன்னிறுத்தி உழைக்க வேண்டுமென்று பிரிட்டிஷாரே நம்மைத் தூண்டி வருகிறார்கள். நாம் நம்பிக்கையோடும், பொறுமையோடும் இடைவிடாது உழைத்தால், நாம் சுயராஜ்யம் பெறுவது உறுதியே. இப்பொழுது சுயராஜ்யம் வழங்கப்பட்டால், பிராமணரல்லாதார் தமது பழைய ஆதரவற்ற அடிமை நிலையை அடையவும், பிரிட்டிஷார் ஸ்தானத்தில் நம்மை அடிமையாக்கிய கூட்டத்தார் அமர்ந்து நம்மை மேலும் நசுக்கவும் நேருமென்று அஞ்சியே நாம் ஹோம்ரூல் கிளர்ச்சியை இப்பொழுது எதிர்க்கிறோம்.

தர்மப் பாதுகாப்பு இயக்கம், மறுமலர்ச்சி இயக்கம், தேசியக் கல்வி இயக்கம் முதலியன ஹோம்ரூல் கிளர்ச்சியைத் தொடர்ந்து தோன்றியிருப்பது, பழைய வர்ணாச்சிரமத்துக்குப் புத்துயிர் அளித்துப் பிராமண ஆதிக்கத்தை வளர்ப்பதற்கே ஆகுமென நான் திட்டமாக நம்புகிறேன். சமய, சமூக, அரசியல் சீர்திருத்த சம்பந்தமாகப் பிராமணர் செய்துவரும் முயற்சிகள் பிராமணீயத்தை நிலைநாட்டுவதற்கே. இத்தருணத்தில் நாம் ஒன்றுபட்டுச் செயலாற்ற முன்வராவிட்டால், நமது செல்வாக்கும், மதிப்பும் ஒழிவது உறுதியென விவேகிகளான நமது தலைவர்கள் உணர்ந்து கொண்டனர்.

மற்றும், ஹோம்ரூல் கிளர்ச்சியை எதிர்ப்பதற்கு வேறு காரணங்களும் உண்டு. காங்கிரஸ் ஆதிகாலத்தில் மதவாதிகள் ஸ்தாபனமாக இருந்தது. சத்தியாக்கிரகப் பூச்சாண்டி காட்டி அதிகாரிகளைப் பணிய வைக்க அது எண்ணவில்லை. சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே காரியங்கள் நடத்தி வந்தது. தாதாபாய் நவுரோஜி, சர்வபிரோஜ்ஷா மேத்தா, கோகலே முதலிய தலைவர்கள் காங்கிரசை நேர்மையாகவே நடத்தி வந்தார்கள். அரசியல் முறைப்படி அது ஒரு பிரதிநிதித்துவம் வாய்ந்த ஸ்தாபனமில்லாவிட்டாலும் காங்கிரஸ் வேலைத் திட்டங்களை ஆதரிக்காதவர்களுங்கூட, காங்கிரஸ் நடவடிக்கைகளை வெகு ஆவலுடன் கவனித்தே வந்தார்கள், படிப்பாளிகளைப் பாதிக்கக்கூடிய விஷயங்களைப் பற்றியே காங்கிரஸ் விவாதித்து வந்தது. பாமர மக்களைப் பற்றிய விஷயங்ளையும், சமூக விஷயங்களையும் லட்சியம் செய்யவே இல்லை.  இந்தியா சுயராஜ்யம் பெற வேண்டுமானால் ஒடுக்கப்பட்டவர்களும் மற்றும் பின்னணியில் நிற்கும் சமூகங்களும் முன்னேற்றம் அடைந்தே தீரவேண்டும். ஆனால், காங்கிரஸ் இவ்வுண்மையை உணரவேயில்லை. ஆகவே, ஹோம்ரூல் இயக்கம் தோன்றியிருக்காவிட்டாலும், தேசியப் புனருத்தாரணத்துக்காக வேறுவிதமான கருத்துடையவர்களால் பிராமணரல்லாதார் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டே இருக்கும். ஒரு குறிப்பிட்ட வகுப்பார் மட்டும் தற்கால முறைப்படி முன்னேற்றமடைவது உண்மையான முன்னேற்றமே இல்லை, எல்லாச் சமூகங்களும் முன்னேற்றமடைவதே உண்மையான தேசிய முன்னேற்றம். இதை ஹோம்ரூல் கிளர்ச்சிக்காரர்கள் உணரவே இல்லை.

படிக்க:
சாதிக் கயிறுகளால் என்ன பிரச்சினை ? கலவரமா வந்துவிட்டது ?
காஷ்மீர் : இராணுவத்தின் அத்துமீறலை அம்பலப்படுத்திய ஷெஹ்லா ரஷித் மீது வழக்கு !

எல்லாச் சமூகங்களும் சம அந்தஸ்து, சம சந்தர்ப்பங்களும் பெறவேண்டும். நமது இயக்கம் இந்த லட்சியத்தை முன் நிறுத்தியே தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. இந்த லட்சியம் நிறைவேற வேண்டுமானால், நாம் புரோகிதர் பிடிப்பிலிருந்து விடுதலை அடையவேண்டும். நமது இயக்கம் தோற்றுவிக்கப்பட்டதற்கு இதுவும் மற்றொரு காரணமாகும். (நூலிலிருந்து பக்.25-26)

சீர்திருத்தங்கள் :

பனகல் மந்திரி சபை காலத்துச் செய்யப்பெற்ற சீர்திருத்தங்கள் பல,  நமது மந்திரிமார் கவனம் செல்லாத இலாக்காக்களே இல்லையென்று சொல்லலாம். பனகல் ராஜா அவர்கள் நிறைவேற்றிய அறநிலையப் பாதுகாப்புச் சட்டமும், சர் பாத்ரோ நிறைவேற்றிய சென்னைச் சர்வ கலா சங்கச் சீர்திருத்தச் சட்டமும், ஆந்திர சர்வகலா சங்கச் சட்டமும் சர் கே வி ரெட்டி நாயுடு நிறைவேற்றிய கைத்தொழிலுக்குச் சர்க்கார் உதவிச் சட்டமும், எந்த மந்திரி சபைக்கும், பெருமையளிக்கக் கூடியனவேயாகும். உத்தியோக மண்டலத்தை இந்தியமயமாக்கவும், ஆயுர்வேத வைத்தியத்தை விருத்தி செய்யவும் பனகல் ராஜா பல ஏற்பாடுகள் செய்து வெற்றி பெற்றார். சென்னையிலே முதன் முதலாக ஓர் இந்திய வைத்தியக் கல்லூரியை ஸ்தாபித்தார். தொழிலாளர், ஒடுக்கப்பட்டோர் முன்னேற்றத்துக்காக அவர் எவ்வளவோ பாடுபட்டார். சர் பாத்ரோ முயற்சியினால் ஆரம்பக் கல்வி மிகவும் வளர்ச்சியடைந்தது. சர்வ சாதி மாணவர்களுக்கும் கலாசாலைகளில் தடையின்றிப் பிரவேசம் பெறும் பொருட்டுச் செலக்ஷன் போர்டுகள் ஏற்படுத்தப்பட்டன. இந்தியாவிலே இரட்டையாட்சியைத் திறம்பட நடத்திக் காட்டியதாக நமது எதிரிகளும் ஒப்புக் கொண்டுள்ளார்கள். கட்சி சம்பிரதாயப்படி நிர்வாகம் நடத்திய பெருமை ஜஸ்டிஸாருக்கே எனக் காலஞ்சென்ற மாஜி மந்திரி மவுலானா யாகூர்ஹாசன் சேட் கூட வேலூரில் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் மகாநாட்டில் பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருக்கிறார். (நூலிலிருந்து பக்.63)

நூல் : நீதிக்கட்சி வரலாறு
ஆசிரியர் : பண்டித எஸ். முத்துசாமிப்பிள்ளை

வெளியீடு : பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு,
84/1, பெரியார் திடல், ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை – 600 018.
தொலைபேசி எண் : 044 – 2661 8163
மின்னஞ்சல் : info@periyar.org

பக்கங்கள்: 72
விலை: ரூ 25.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : periyarbooks

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க