“புவி ஈர்ப்பு விசையை நியூட்டன் முதன்முதலில் கண்டுபிடிக்கவில்லை” என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால். புதிய கல்விக் கொள்கை பற்றிய விவாத நிகழ்ச்சியை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சிக்ஷா சன்ஸ்கிருதி உத்தன் நியாஸ் என்ற அமைப்பு கடந்த 17-08-2019 அன்று நடத்தியது. அதில் கலந்து கொண்டு பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், பதஞ்சலி நிறுவனர் பாலக்கிருஷ்ணா ஆகியோரும் கலந்து கொண்டனர். “நியூட்டன் கண்டுபிடிப்பதற்கு முன்னரே நமது வேத எழுத்துக்களில் புவி ஈர்ப்பு விசை குறித்து எழுதப்பட்டுள்ளது” என்று கூறியிருக்கிறார் பொக்ரியால். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு ஐ.ஐ.டி-க்கள், என்.ஐ.டி.க்களின் இயக்குனர்களும் பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர்களும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களிடம் இதுபோன்ற பழங்காலத்து “அறிவு” குறித்து அதிகமான ஆய்வுகளைச் செய்யுமாறும் கேட்டுக் கொண்டார்.
கூடுதலாக சமஸ்கிருதம்தான் உலகிலேயே சிறந்த அறிவியல்பூர்வமான, பேசும் கணிணிகளுக்கு மிகவும் பொருத்தமான மொழி என்பதையும் இந்த உயர்கல்வி நிறுவனங்கள் நிரூபிக்க வேண்டும் என்றும் அவர்களிடம் கேட்டுக் கொண்டார்.
மேலும், அணுக்கள் மற்றும் அணுத்திரள்களை பழங்காலத்து முனிவர் ரிஷி பிரணவ் என்பவரே முதன்முதலில் கண்டுபிடித்ததாகக் கூறினார். ஆனால் இதே அமைச்சர்தான் இந்த மாதத்தின் இரண்டாம் வாரத்தில் மும்பை ஐஐடியில் பேசுகையில் அணுக்களையும் அணுத்திரள்களையும் கண்டுபிடித்தது சரகர்தான் என்று கூறியுள்ளார்.
பாவம், கடைசியில் அணுவைக் கண்டுபிடித்தது சரகரா, பிரணவ் முனிவரா என்பதில் அமைச்சரே கன்ஃபியூஸ் ஆகிவிட்டார் போலத் தெரிகிறது.
படிக்க:
♦ பார்லே பிஸ்கெட் நிறுவனத்தில் 10,000 பேர் பணிநீக்கம் !
♦ ” போலி அறிவியலில் பாதிப்பில்லாதது எதுவுமில்லை ” | ஐஐடி இயக்குனருக்கு ஒரு கடிதம் !
பாஜக ஆட்சியாளர்களும், ஆர்.எஸ்.எஸ்-காரர்களும் இத்தகைய உதார்களை விடுவது நமக்கு ஆச்சரியமல்ல, புதியதுமல்ல. இதற்கு முன்னர் கடந்த 2018-ம் ஆண்டில் உத்திரப் பிரதேசத்தின் துணைமுதல்வர் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், பண்டைய இந்தியர்கள் சோதனைக் குழாய் குழந்தை, விமானம் மற்றும் தொலைதொடர்பு ஆகிய அனைத்துத் தொழில்நுட்பங்களையும் அறிந்து வைத்திருந்தனர்” என்றும் குறிப்பிட்டார். பாஜக-வின் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபால் சிங், ஒருமுறை “பரிணாமக் கொள்கை தவறானது. மனிதர்கள் முனிவர்கள் மற்றும் ரிஷிக்களின் வம்சாவளிகள்” என்று கூறினார்.
பாஜகவின் அல்லு சில்லுகளுக்கே இவ்வளவு வரலாற்றறிவு இருக்கும்போது, பெருந்தலை மோடி மட்டும் லேசுப்பட்டவரா? கடந்த 2014-ம் ஆண்டு, அறிவியல் மாநாடு ஒன்றில் மோடி பேசுகையில், விநாயகரின் யானை முகத்தைக் காட்டி, அந்தக் காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி இருந்திருக்கிறது என்றும், கவுரவர்கள் பிறப்பு குறித்த மகாபாரதத்தின் கட்டுக்கதையை சுட்டிக்காட்டி, அந்தக் காலத்திலேயே சோதனைக் குழாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்வதை இந்தியர்கள் கண்டுபிடித்திருந்தார்கள் என்றும் தன் பங்குக்கு அடித்துவிட்டிருந்தார்.

பாஜகவினர் ஏன் இவ்வாறு பேசித்திரிகிறார்கள் ? இக்கேள்விக்கு எளிமையான பதில், ஏழ்மையும், கல்லாமையும் நிறைந்துள்ள இந்நாட்டில், பெரும்பாலான மக்களும் இதுபோன்ற நம்பிக்கையைக் கொண்டுள்ளனர். அதைப் பயன்படுத்தி இந்து, இந்தியப் பெருமத மயக்கத்தில் மக்களை மூழ்கடித்து அவர்கள் மண்டையில் மிளகாய் அரைத்து முதலாளிகளுக்கும், பார்ப்பனர்களுக்கும் மசாலா செய்யத்தான் இந்தச் சவடால்கள் அனைத்தும்.
இந்திய அரசியல்சாசன சட்டப் பிரிவு 51A-வில் அரசாங்கக் கொள்கை குறித்த வழிகாட்டலில் இந்தியக் குடிமக்கள், அறிவியலை இறுகப் பற்றிக்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளனர், அரசியல் சாசனத்தை எழுதியவர்கள். ஆனால் அரசியல் சாசனத்தைக் காப்பதாக உறுதியேற்று வந்தவர்கள் இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்?
மக்கள் மனதில் அறிவியல் மனப்பான்மையை புகுத்துவதுதான் இப்போதைய அவசிய, அவசரத் தேவையாக இருக்கிறது. அறிவியலுக்குப் புறம்பான பழங்காலத்து நம்பிக்கைகள், பல சமயங்களில் மரணத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றன. கடந்த 2018-ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில், ஒரு தம்பதியினர் ஒரு சாமியாரின் பேச்சைக்கேட்டு தங்களது சொந்த மகளையே கொன்றுள்ளனர்.
படிக்க:
♦ இந்திய அறிவியல் மாநாடு : அறிவியலை கேலியாக்கும் மோடி கும்பல் !
♦ போலி ‘டாக்டர்’ பட்டம் பெற்ற மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் !
இன்று நிலவுக்கு விண்கலத்தை அனுப்பி அதில் இறங்கத் தயாராக இருக்கிறது இந்தியா. அப்படிச் செய்தால் நிலவில் விண்கலத்தை இறக்கிய நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும். அறிவியல்பூர்வமாக நமது வெற்றிகள் மற்றும் முன்னேற்றத்தை இளையதலைமுறையினர் மத்தியில் கொண்டு செல்கையில்தான் அறிவியல் குறித்த ஆர்வமும், விழிப்புணர்வும் ஏற்படும்.
முந்தைய மோடி ஆட்சியின் ஐந்தாண்டுகளில் உத்தரகாண்டைச் சேர்ந்த ஒரு எம்.பி, நாடாளுமன்ற விவாதத்தின் இடையில், பண்டைய இந்தியர்கள் அணு ஆயுத சோதனையே நடத்தியிருப்பதாகத் தெரிவித்தார். ரமேஷ் பொக்ரியால் அவருக்குப் பின் அந்த இடத்தை தற்போது நிரப்பியுள்ளார்.
இதில் நாம் நினைவில் கொள்ள வேண்டியது ஒன்றுதான், ரமேஸ் பொக்ரியால்தான் இந்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர். இந்தியாவின் மனித வளம் இன்னும் எத்தனை உயிர்களை தனது அறிவிலித்தனத்துக்கு பலிகொடுக்கப் போகிறதோ ?
நந்தன்
நன்றி : ஸ்க்ரால்