கோவையில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக 22.08.2019 அன்று “மோடி அரசின் தேசிய கல்வி கொள்கை 2019 ஏன் நிராகரிக்க வேண்டும்” என்ற தலைப்பில் அரங்கக் கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்திற்கு தோழர் பாலமுரளி (சட்டக்கல்லூரி மாணவர், கோவை) தலைமை தாங்கினார்.
தேசிய கல்வி கொள்கை என்பது நவீன குலக்கல்வி முறையை வலியுறுத்துகிறது, நவீன அடிமைத்தனத்தை வலியுறுத்துகிறது, இது பாமர மக்களுக்கான கல்வி கொள்கை அல்ல. இது பாமர மக்களுக்கு எதிரான கல்விக் கொள்கையாகும். கல்வியை வணிக மயமாக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டது இந்த கல்விக் கொள்கை என்ற கருத்தினை பதிவு செய்தார்.
அடுத்துப் பேசிய மருத்துவர் பாலன், தேசிய கல்விக் கொள்கை என்பது “CCC என்று சொல்லலாம்” என்றார். “CCC என்பது commercialization (வணிகமயமாக்கல்), communalization (மதவாதம்), மற்றும் centralisation (அனைத்து அதிகாரமும் மத்தியில்)” என்பதை விளக்கிபேசத் தொடங்கினார்.
மருத்துவத்துறையில் MCI கலைத்து விட்டு NMC (National medical council) என்று கொண்டு வந்துள்ளனர். இது மருத்துவத் துறையை மத்திய அரசு தன் வசம் கொண்டு வரும் நோக்கமாகும். ஏற்கனவே இருந்த MCI-ல் அனைத்து மாநிலங்களின் பிரதிநிதிகளும் இருப்பார்கள். ஆனால் மத்திய அரசு கொண்டுவந்த தேசிய மருத்துவ ஆணையத்தில் 25 பேருக்கும் குறைவாகவே உள்ளனர்.
மருத்துவத் துறையை சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை தராமல் மருத்துவத்துறையில் சற்றும் சம்பந்தமில்லாத ஆர்.எஸ்.எஸ்.-காரர்களை அதில் நியமிக்கிறார்கள்.
பின்பு மருத்துவர் ஆக வேண்டுமென்றால் பன்னிரண்டாம் வகுப்பு முடிந்தவுடன் நீட் எழுத வேண்டும் என்றார்கள் இப்போது நீட் மட்டும் போதாது மருத்துவராகப் பதிவு செய்ய வேண்டுமென்றால் நெக்ஸ்ட் (next ) அதாவது எக்ஸிட் (exit exam) ஆகிய தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்கிறார்கள். இது ஆட்களை குறைக்கும் செயலாகும். யார் வேண்டுமானாலும் மருத்துவராக முடியாது, அதற்கென ஒரு குறிப்பிட்ட பணத் தகுதி வேண்டும் என்கிறது மத்திய அரசு.
படிக்க:
♦ தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் ! தருமபுரி அரங்கக்கூட்டம் !
♦ பாசிசத்தைத் தன்னந்தனியே எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருக்கிறோம் !
அடுத்து சிறப்புரையாக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தர்மபுரி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் அன்பு பேசுகையில்; “மத்திய அரசு கொண்டுவந்த இந்த கல்வி முறை கல்வி அறிவு ஆற்றல் உள்ள மாணவர்களை உருவாக்க வேண்டும் என்று தொடர்ந்து முன்வைக்கிறார்கள். ஆனால் இவர்கள் கொண்டு வந்த கல்விமுறை என்பது அறிவியலுக்கு புறம்பானது. மாணவர்களை சிந்திக்க விடாமல் செய்யும் பழமைவாத கருத்துக்களை கொண்டதே ஆகும். நமது நாடு என்பது பல தேசிய இனங்களின் கூட்டமைப்பு ஆகும். பல மொழிகள் பல கலாச்சாரங்கள் உள்ளன. ஆனால் மோடி அரசு மும்மொழி என்ற பெயரில் இந்தி சமஸ்கிருதத்தை திணிக்கின்றது.
கார்ப்ரேட்டுகளுக்கும், காவிகளுக்கும் சேவை செய்கிற வகையில் இக்கல்விக் கொள்கை உள்ளது. இதற்கு எதிர்ப்பு தமிழகத்தில்தான் பலமாக உள்ளது. இந்தப் புதிய கல்விக் கொள்கை பற்றி தமிழகத்தில் ஏறத்தாழ 500 அரங்கக் கூட்டங்கள் நடைபெற்று உள்ளன. மற்ற மாநிலங்களில் இதைப் பற்றியான விழிப்புணர்வு மிக குறைந்த அளவே உள்ளது.
எனினும் மோடி அரசின் தேசிய கல்விக் கொள்கையை மாணவர்களாகிய நாம் அமைப்பாக ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும். என்று உரையாற்றினார்.

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
கோவை. தொடர்புக்கு : 94451 12675