Tuesday, April 15, 2025
முகப்புசெய்திஇந்தியாஅரியானா போலீசு எனும் காட்டுமிராண்டிக் கும்பல் !

அரியானா போலீசு எனும் காட்டுமிராண்டிக் கும்பல் !

நேர்க்காணல் எடுக்கப்பட்ட சிறைக்கைதிகளில் 47% பேர் போலீசு விசாரணையின்போது சித்ரவதைக்குள்ளாகியிருப்பதும்; மனித தன்மையற்ற முறையில் நடத்தப்பட்டிருப்பதும் அறிக்கை வெளிக்கொண்டு வந்துள்ளது.

-

மின்சார அதிர்ச்சி தருவது, அந்தரங்க பகுதிகளில் கற்களை திணிப்பது, பாலியல் வல்லுறவு, பாலியல் வன்கொடுமை, நிர்வாணமாக கட்டித்தொங்கவிடுவது… என அரியானா போலீசின் சித்திரவதை பட்டியல் நீள்கிறது. ஆண்கள், பெண்கள் அனைவரையும் பாகுபாடு இல்லாமல் போலீசு சித்திரவதை செய்துள்ளதாக ‘அரியானா சிறையின் உள்ளே’ என்ற ஒரு அறிக்கை கூறுகிறது.

அரியானா மாநிலம் முழுவதும் உள்ள 19 சிறைச்சாலைகளில் 475 பேரிடம் எடுக்கப்பட்ட நேர்காணல்களிலிருந்து இந்த விவரங்களை சபிகா அப்பாஸ் மற்றும் மதுரிமா தனுகா ஆகியோர் அடங்கிய குழு சேகரித்துள்ளது. பெருவாரியான சிறைவாசிகள் அதிர்ச்சிக்குள்ளாகியிருப்பதையும்; நேர்க்காணல் எடுக்கப்பட்ட சிறைக்கைதிகளில் 47% பேர் போலீசு விசாரணையின்போது சித்ரவதைக்குள்ளாகியிருப்பதையும்; மனித தன்மையற்ற முறையில் நடத்தப்பட்டிருப்பதையும் அறிக்கை வெளிக்கொண்டு வந்துள்ளது.

custodial_torture_2அரியானா போலீசில் உள்ள குற்ற விசாரணை முகமை (Criminal Investigation Agency – CIA) மூலமே சித்ரவதைகள் அரங்கேற்றப்பட்டிருக்கின்றன. “சட்டத்துக்கு புறம்பாக நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து விசயங்களை பெறுவதில் சி.ஐ.ஏ பிரபலமானது. மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் சி.ஐ.ஏ யூனிட் உள்ளது” என்கிறது அறிக்கை.

“அரியானாவில் சித்திரவதையை சி.ஐ.ஏ. அமைப்பாக்கியிருக்கிறது. சி.ஐ.ஏ ஆட்கள் விசாரிப்பதில் சிறந்தவர்கள், விசாரணையில் அல்ல” என சமூகவியலாளர் ஏ. ஆர். தேசாய் எழுதிய Violation of Democratic Rights in India என்ற நூலிலிருந்து மேற்கோளை சுட்டிக்காட்டுகிறது அறிக்கை.

சித்திரவதை காரணமாக உள்காயங்களுடன் பலர் இருப்பதாகவும் அறிக்கை கூறுகிறது. குமார் என்பவர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். “என்னை தொடர்ச்சியாக தடியால் அடித்தது போதாதென்று, அந்தரங்க பகுதியை கயிற்றால் கட்டி, அதில் ஒரு செங்கல்லை கட்டி தொங்கவிட்டனர்” எனக் கூறியுள்ளார் அவர்.

“அவர் மோசமான உள்காயங்களுடன் இருந்தார், அவரால் இயல்பாக நடக்கக்கூட முடியவில்லை. நீதிமன்ற காவலில் இருக்கும்போதே இரண்டு முறை அறுவை சிகிச்சை அவருக்கு செய்யப்பட்டது” எனவும் அறிக்கை கூறுகிறது.

படிக்க:
♦ போலிஸ் சித்திரவதையின் தருணங்கள் – வீடியோ
♦ கேள்வி பதில் : மூடநம்பிக்கைகளை விமர்சித்து இன்றைய தலைவர்கள் பேசுவதில்லையே ஏன் ?

“சிறை மருத்துவ அதிகாரியிடம் குமார் தன்னுடைய வாக்குமூலத்தை அளித்தபோதும் அது பதிவு செய்யப்படவில்லை. அதோடு தான் கைது செய்யப்பட்டபோது தனக்கு 17 வயதுதான் ஆகிறது என சொன்னதையும் போலீசு சரியாக பதிவு செய்யவில்லை” எனவும் அறிக்கை விவரிக்கிறது.

வெளிக்காயங்கள் தெரியாதபடி சித்ரவதை செய்யும் முறையை பின்பற்றி வந்திருக்கிறது ஹரியாணா போலீசு. கால் பாதங்களில் கட்டையால் அடிப்பது, தலைகீழாக தொங்கவிடுவது, தொடையில் கட்டையை உருட்டுவது, மின்சார அதிர்ச்சி கொடுப்பது ஆகியவை எந்தவித தடயத்தையும் உடலில் உண்டாக்காது. எனவே, சித்ரவதையை புகாராக சொன்னாலும் அதற்கு ஆதாரங்களை சமர்பிக்க முடியாது.

பானிபட் சிறையில் இருக்கும் சிறார் கைதியான சல்மான், தனது மூக்கில் தண்ணீரை பீய்ச்சி அடித்தது, உள்ளங்கால்களில் தடியால் அடிப்பது போன்ற சித்ரவதைகளைச் செய்து, செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ள வற்புறுத்துவதாக கூறுகிறார்.

“போலீசு காவலில் இருந்த ஒரு வாரம் முழுக்க, என்னை தடியால் அடித்துக்கொண்டிருந்தார்கள். முகத்தை நீரில் அழுத்தி, நிர்வாணமாக்கி தலைகீழாக தொங்கவிட்டார்கள்” என்கிறார் சுமித்.

பல பெண் சிறைக்கைதிகளை துன்புறுத்துதல், பாலியல் வல்லுறவு அச்சுறுத்தல் மூலம் மிரட்டியுள்ளது போலீசு. “சிறை அறையில் நிர்வாணமாக்கி படுக்க வைத்து, குடித்திருந்த போலீசு ஒருவர் என்னுடைய அந்தரங்க பகுதிகளை தொட்டார். நான் அதை எதிர்த்திருந்தால், மின்சார அதிர்ச்சி கொடுப்பது போன்ற மோசமான சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டிருப்பேன். என்னுடைய முகத்தை நீரில் அழுத்தி, கட்டையால் அடித்தார்கள்.” என்கிறார் ரீமா என்பவர்.

சட்டத்துக்கு புறம்பாக தன்னை ஏழு நாட்கள் போலீசு காவலில் வைத்ததாகவும் ஆண் போலீசுக்காரர்கள் சித்திரவதை செய்ததாகவும் அவர் குற்றம்சாட்டுகிறார்.

39 வயதான ஜூனைத் இதே போன்ற சித்திரவதைகளை அனுபவித்ததாகக் கூறுகிறார். போலீசு காவலில் 15-16 மணி நேரம் வைக்கப்பட்டிருந்ததாகவும் பாலியல் வல்லுறவு அச்சுறுத்தல் விடப்பட்டதாகவும் போலீசு முன்னிலையில் அணிந்திருந்த சுடிதாரை கழற்ற வைத்ததாகவும் அறிக்கை கூறுகிறது. இந்து என்ற மற்றொரு பெண், போலீசு காவலில் இருந்த மூன்று நாட்களும் சித்துரவதை செய்யப்பட்டதாகவும் அறிக்கை கூறுகிறது.

படிக்க:
♦ பசுக்கள் நிறைய பால் கறக்க கண்ணனைப் போல் குழல் ஊதுங்கள் !
♦ மணிப்பூர் பிணங்களின் முறையீடு : பீதியில் இந்திய இராணுவம்

அன்சல் என்ற பெண், தனது பிறப்புறுப்பில் மிளகாய்ப் பொடி தூவுவதாகச் சொல்லி தன் உடைகளை கழற்றச் சொன்னதாக கூறியிருக்கிறார். மூன்று நாட்கள் தொடர்ச்சியாக தாக்கப்பட்டு, மின்சார அதிர்ச்சி கொடுத்ததாகவும், போலீசு மீதான பயத்தின் காரணமாக நீதிமன்றத்திலேயோ அல்லது மருத்துவரிடமோ எதையும் சொல்லவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் இந்த அறிக்கையில், போலீசு தங்களை துன்புறுத்தியதாக ஒரே ஒரு கைதியிடமிருந்துகூட எந்த சிறைச்சாலைக்கும் புகார் வரவில்லை என பதிவு செய்துள்ளது.

அப்பட்டமான மனித உரிமை மீறல்களையும் சித்திரவதைகளையும், அரியானா போலீசு நெடுங்காலமாக அமைப்பாக செய்து வந்துகொண்டிருப்பதை அறிக்கை தெள்ளத்தெளிவாக எடுத்துக்கூறியுள்ளது. இத்தகைய போலீசு காவல் சித்திரவதைகளை தடுக்க சிறை நிர்வாகம் சரியாக இயங்க வேண்டும் என அறிக்கை பரிந்துரைக்கிறது.

ஆனால், ஆளும் அரசு யாரை வேண்டுமானாலும் எதற்கு வேண்டுமானாலும் கைது செய்யலாம், ஆண்டுக்கணக்கில் சிறை வைக்கலாம் என வானளாவிய அதிகாரத்தை போலீசின் கைகளுக்குத் தந்துள்ளபோது, மனித உரிமை மீறல்கள் அதிகமாகுமே தவிர குறைய வாய்ப்பில்லை.


அனிதா
நன்றி
: தி வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க