தெற்கு குஜராத்தில் மாவோயிஸ்ட் செயல்பாட்டை பரப்பியதாகக் கூறி, ஒன்பது ஆண்டுகளுக்கு முந்தைய தேச துரோக வழக்கில் தோழர் கோபாட் காந்தியை திங்கள்கிழமை கைது செய்துள்ளது குஜராத் போலீசு.
மாவோயிஸ்டு கட்சியைச் சேர்ந்த கோபாட் காந்தி, ஜார்க்கண்ட் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், இடமாற்ற ஆணை மூலம் சூரத் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

“நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட காந்தியை நாங்கள் கைது செய்துள்ளோம். தெற்கு குஜராத்தில் மாவோயிஸ்ட் செயல்பாட்டை பரப்பியதற்காக காந்தி உள்ளிட்ட 25 பேரின் மீது சூரத்தில் 2010-ல் வழக்கு பதியப்பட்டிருந்தது. காந்தி தவிர மற்ற 23 பேரும் கைது செய்யப்பட்டனர். இப்போது சீமா ஹிரானி மட்டும் கைது செய்யப்பட வேண்டும்” என்கிறார் குஜராத் போலீசு அதிகாரி ஒருவர்.
இந்திய தண்டனை சட்டத்தில் குற்ற சதி, அரசுக்கு எதிராக போரை நடத்துவது, தேசதுரோகம், சட்டவிரோத செயல்பாடு உள்ளிட்ட பல பிரிவுகளின் மீது கோபாட் காந்தி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
மாவோயிச செயல்பாட்டை பரப்புவதில் அவருடைய பங்கு குறித்து விசாரிக்க உள்ளதாகக் கூறி நீதிமன்றக் காவலைக் கோரியுள்ளது போலீசு.
படிக்க:
♦ தோழர் கோபட் காந்தியை சிறைப்படுத்திக் கொல்லாதே ! விடுதலை செய்!
♦ அரியானா போலீசு எனும் காட்டுமிராண்டிக் கும்பல் !
அறுபத்து எட்டு வயதாகும் தோழர் கோபாட் காந்தி, லண்டனில் மேற்படிப்பு படித்தவர். மேட்டுக்குடி வர்க்கத்தில் பிறந்த போதிலும், சுகபோக வாழ்வை உதறி எறிந்துவிட்டு, மார்க்சிய லெனினிய சித்தாந்தத்தை ஏற்று ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவே சிந்தித்தவர். ஒடுக்குமுறைக்கு எதிரான மக்கள் விடுதலைப் போராட்டத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.
தோழர் கோபாட் காந்தியை கடந்த 2009-ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17-ம் தேதியன்று கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து சித்திரவதை செய்து, அவர் உண்ணாவிரதம் இருந்து எதிர்ப்பைக் காட்டியதையடுத்து ஐந்து நாட்களுக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தது போலீசு.
கைது செய்யப்படும் சமயத்திலேயே அவருக்கு சிறுநீரகப் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இருந்தது. ஆனால் இவை எவற்றையும் கருத்தில் கொள்ளாமல், அவரை விசாரணைக் கைதியாகவே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வைத்திருக்கிறது அரசு. கடந்த 2016-ம் ஆண்டில் ஒருவழக்கில் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி அவரை விடுவித்தது நீதிமன்றம். ஆனால் பல வழக்குகளை அவர் மீது வரிசையாக ஜோடித்து வெவ்வேறு வழக்குகளின் பெயரில் அவரை தொடர்ச்சியாகவே சிறையில் அடைத்திருக்கிறது அரசு.
ஏற்கெனவே இருக்கும் பழைய வழக்குகளோடு தற்போது புதியதாக ஒரு வழக்கையும் இணைத்து அவரை நிரந்தரமாக விசாரணைக் கைதியாக சிறையிலேயே வைத்து அவரை துன்புறுத்திக் கொல்லத் திட்டமிடுகிறது அரசு.
கிரிமினல்கள் நாடாளுமன்றத்தில் அமர்ந்திருக்கையில் மக்களுக்காக போராடுபவர்களுக்கு சிறைக் கொட்டடியைத் தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும் ?
அனிதா
நன்றி: தி வயர்