காஷ்மீர் செய்தி இணையதளமான The Kashmiriyat-ன் ஆசிரியராக உள்ள காஸி சிப்லி கடந்த ஜூலை 25-ம் தேதி ஜம்மு காஷ்மீர் போலீசால் கைது செய்யப்பட்டார். ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தை திரும்பப் பெறும் முன் மத்திய அரசு, அதிகப்படியான படைகளை அம்மாநிலத்தில் இறக்கியது. துருப்புகள் குறித்த விவரங்களை டிவிட்டரில் கசியவிட்டதாகக் கூறி சிப்லியை கைது செய்தது போலீசு.

ஜூலை 27-ம் தேதி, 100 கூடுதல் கம்பெனி துணை இராணுவப்படையினரை மாநிலம் முழுவதும் இறக்கியது மத்திய அரசு. ஒரு வாரம் கழித்து கூடுதலாக 25,000 துணை இராணுவப்படையினரை அனுப்பியது. சிறப்பு அந்தஸ்த்தை நீக்குவதை எதிர்த்து காஷ்மீர் மக்கள் கிளர்ந்தெழக்கூடும் என தெருவுக்கு தெரு இராணுவத்தை நிறுத்தியது இந்திய அரசு.
அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர் என பல தரப்பினர் கைது செய்யப்பட்டனர். அந்த சமயத்தில் கைதான காஷ்மீரியத் இணையதளத்தின் ஆசிரியர் சிப்லியின் நிலைமை குறித்த தகவல்களை சொல்ல மறுத்து வருகிறது போலீசு. சிப்லியின் குடும்பத்தாரிடம் ஆகஸ்டு 5-ம் தேதி அவர் விடுவிக்கப்படுவார் என தெரிவித்திருந்தபோதும், இதுவரை அவர் விடுவிக்கப்படவில்லை.
இந்நிலையில், அவர் பற்றிய தகவலை தெரிவிக்க காஷ்மீரியத் இணையதளம் கோரிக்கை விடுத்துள்ளது. “அவரிடம் பணமோ, உடைகளோ இல்லை என்பது எங்களுக்குத் தெரியும். அவர்கள் காவல் நிலையத்தினுள் எங்களை அனுமதிக்கக்கூட மறுக்கிறார்கள்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிப்லியின் சகோதரர் காஸி உமைரிடம் அவர் ஆக்ரா காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டதாக தகவல் கூறியுள்ளனர். ஆனால், ஆக்ரா காவல் நிலையத்தில் விசாரித்தபோது, அதுபற்றி எந்த தகவலும் இல்லை என தெரிவித்துள்ளனர். “எங்களுக்கு பதற்றமாக இருக்கிறது, அவர் எங்கிருக்கிறார் என்பதும் தெரியவில்லை. அவர் பாதுகாப்பாக இருக்கிறாரா என்பதும் தெரியவில்லை”.
படிக்க:
♦ தோழர் கோபாட் காந்தி பத்தாண்டுகள் பழைய வழக்கில் கைது !
♦ காஷ்மீர் : பத்திரிகையாளர்களை மிரட்டும் போலீசு !
சிறப்பு அந்தஸ்து திரும்பப் பெறப்பட்ட ஆகஸ்டு 5-ம் தேதி முதல் காஷ்மீர் பள்ளத்தாக்கு முடக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு, 25 நாட்களாக மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. போராட்டங்களை ஒடுக்கும் விதமாக பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
‘படிப்படியாக’ நிலைமையை சீராக்குவோம் என மத்திய அரசு சொல்கிறது. ஆனால், மத்திய அமைச்சர் ஜவடேகர் ‘தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் இருப்பது, மோசமான தண்டனை’ என வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார்.
காஷ்மீரிகளுக்கு 70 ஆண்டுகளில் கிடைக்காத மோட்சத்தை தாங்கள் அளித்துவிட்டதாக மோடி – அமித் ஷா பெருமிதம் கொண்டனர். கிடைத்தது மோட்சமல்ல, தண்டனை என்பதை பாஜக அமைச்சரே போட்டு உடைத்துவிட்டார். இளம் சிறார்கள், காஸி சிப்லி போன்ற பத்திரிகையாளர்கள் கடத்தப்பட்டு செய்யாத குற்றத்துக்காக தண்டனை பெற்றிருக்கிறார்கள். இதுதான் காஷ்மீரிகளுக்கு காவிகள் வழங்கியிருக்கும் பரிசு.

கலைமதி
நன்றி : ஸ்க்ரால்.