கேள்வி : //உலகப் பொதுமறை என்று அழைக்கப்படும் திருக்குறளில் பிச்சை புகினும் கற்கை நன்றே என்று இருக்கிறது. ஆனால் ஒரு காலகட்டத்தில் கல்விக்கு முக்கியத்துவம் மறுக்கப்பட்டது. ஆனால் திருவள்ளுவர் ஆண்டுக்குப் பின்னரே? அது எப்படி?//

– சண்முகவேல்

ன்புள்ள சண்முகவேல்,

“கற்கை நன்றே; கற்கை நன்றே;
பிச்சை புகினும் கற்கை நன்றே”

என்ற பாடல் வரி திருக்குறளில் இல்லை. வெற்றிவேற்கை எனும் நூலில் இருக்கிறது. இதை “நறுந்தொகை” – நல்ல பாடல்களின் தொகுப்பு – என்றும் அழைக்கிறார்கள். காலம் தோராயமாக பதினொராம் நூற்றாண்டு. ஒருவன் செல்வம் இல்லாதவனாக மிகவும் ஏழ்மை நிலையை அடைந்து பிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்டாலும், அந்த நிலையிலும் கல்வி கற்க வேண்டும் என கல்வியின் முக்கியத்துவத்தை இந்த வரிகள் உணர்த்துகின்றன.

educationதிருக்குறளிலும் கல்லாமை குறித்தும், கற்பதின் அருமை பற்றியும் நிறைய குறள்கள் உள்ளன. குறளின் காலம் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் திருக்குறள் வருகிறது.

சங்க காலத்தில் இனக்குழு வாழ்க்கை முடிந்து சிற்றரசர்கள் தோன்றி சமூகம் வர்க்கங்களாய் பிரிய ஆரம்பித்தது. வர்க்க சமூகத்தின் வாழ்வியல் சிக்கல்களுக்கு நீதி புகட்டும் வகையில் சங்க கால இலக்கியங்கள் தோன்றின. அப்போது சாதி பார்ப்பனமயமாக்கப்படவில்லை என்றாலும் வேலைப் பிரிவினை என்ற அளவில் இருந்தது. அதன்படி ஆளும் வர்க்கங்களுக்கே கல்வி கற்கும் வாய்ப்பு இருந்தது. இதர பிரிவு மக்களுக்கு இல்லை.

களப்பிரர் ஆட்சிக்கு பின்னர் பல்லவர் காலம், பிற்கால சோழர் காலம் துவங்கி திருமலை நாயக்கர் காலம் வரை தமிழகத்தில் சாதிகள் வருணாசிரம வகைப்பாட்டில் பார்ப்பனமயமாக்கப்பட்டன. அப்போது பார்ப்பன, ஷத்ரிய, வைசிய சமூகத்தினருக்கு மட்டுமே கல்வி புகட்டப்பட்டது. இதர பெரும்பான்மையினரான சூத்திர, பஞ்சம மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. எனவே இங்கு கல்வியின் முக்கியத்துவம் என்பது யாருக்கு கற்க முடியும் என்பதோடு சேர்ந்தே இருக்கிறது.

வெள்ளையர் காலத்தில்தான் பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு கல்வி கற்கும் வாய்ப்பு திறந்து விடப்படுகிறது. அந்த வகையில் 19, 20-ம் நூற்றாண்டுகளில்தான் தமிழகத்தின் ஆகப்பெரும்பான்மையான மக்கள் முதல் தலைமுறையாக கல்வி கற்கின்றனர்.

நன்றி!

♦ ♦ ♦

(கேள்வி பதில் பகுதிக்கு நிறைய கேள்விகளை நண்பர்கள் கேட்கிறார்கள். மகிழ்ச்சி. கூடுமானவரை உடனுக்குடன் பதிலளிக்க முயல்கிறோம். சில கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு கூடுதலான நேரம் தேவைப்படுகிறது. கொஞ்சம் காத்திருங்கள்.)

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க