ஒரு வாரமா விநாயகர் சதுர்த்தி லீவுக்கு வீட்டுக்கு போறத பத்தி பேசி பேசி வார கடைசிநாளான வெள்ளிக்கிழமையும் வந்தது. எங்க வார்டன் சிஸ்டர் திடீர்னு ஒரு குண்ட தூக்கி போட்டாங்க.
எங்க கல்லூரில “ரீடீரிட்”ங்குற (retreat) பேர்ல வருடத்துக்கு ஒருமுறை 3 நாள் ஆசிர்வாதம் சேனல் நிகழ்ச்சி நடத்துவாங்க. கிறித்தவர்கள் அல்லாதவர்களை கண்டிப்பா வீட்டுக்கு அனுப்பிடுவாங்க. ஆனா இந்த வருஷம் கேரளாவில இருந்த வரப்போற பிரதர் உங்க எல்லாரையும் பாக்க ஆசப்பட்றாரு. அதனால முதல் நாள் எல்லாரும் இருந்து கடவுளோட நேரடி ஆசிர்வாதத்த வாங்கணும்னு ரொம்ப பவ்யமா சொன்னாங்க.
வெள்ளிக்கிழமை சாயங்காலம் எல்லாரையும் சாப்பிட்டு முடிச்ச உடனே ஆடிட்டோரியத்துக்கு வரசொல்லிட்டாங்க…
ஆடிட்டோரியம் வெளிய ஒருத்தர் வெள்ளத் தோல்ல, வெள்ள ஜிப்பா போட்டுட்டு காலேஜ் சிஸ்டர்ங்க கூட பேசிட்டிருந்தாரு. என் ப்ரெண்டு, “யாருடி இந்த பஜன்ல்லால் சேட்டு?” னு கேக்க எல்லாரும் சிரிச்சிட்டே ஆடிட்டோரியம் மேல்பகுதில போய் உக்காந்தோம்…

உள்ள பெருசா ஒரு பேனர் வெச்சிருந்தாங்க. அதுல “பிரதர் மரியோ ஜோசப் சைகோ ஸ்பிரிட்வல் கவுன்சிலர்” னு (brother Mario joseph psycho spiritual counsellor) பெரிய எழுத்துல போட்டிருந்தாங்க. அவர்தான் எங்க எல்லாரையும் பாக்க ஆசப்பட்டவரு. நாங்க வெளிய பாத்த அதே வெள்ள ஜிப்பா சிரிச்சுக்கிட்டே மேடை ஏறினாரு… மேடையில், அவர் எப்படி? முஸ்லீமா இருந்து கிறித்தவராக மாறினேன்னு பேச ஆரம்பிச்சாரு. இன்னொருத்தர் பாடுவதற்காக வந்திருந்தார். பேசறவரு ரெஸ்ட் எடுக்குற நேரத்துல இவரு பாடுவாரு இருவரும் மாறி மாறிப் பேசி, பாடுனாங்க.
பேச்சை துவக்கிய, ஜோசப் பிரதர் இருக்கிற எல்லா மதத்துலயும் ஒருத்தர் இன்னொருத்தர பாத்தா எப்படி வணக்கம் சொல்வாங்கனு கேட்டாரு. கிறித்தவர்கள், “தோத்திரம்”. முஸ்லீம்கள் “சலாம் அலே கும்”. இந்துக்கள் என்ன சொல்வாங்கனு யாருக்கும் தெரியல. அதுக்கு அவரு பெரும்பான்மையா இருந்த கிறித்தவ பசங்கள பாத்து, “உங்க பக்கத்து நாடு அரேபியால எப்படி பேசுவாங்கனு உங்களுக்கு தெரியுது, பக்கத்து வீடு எதிர் வீட்ல இருக்குற இந்துக்கள் என்ன சொல்லுவாங்கனு தெரியல…. உங்களுக்கு வெட்கமா இல்லையா” னு கேட்டாரு..
நான் உங்ககிட்ட பாசமா பேசுனா நான்சொல்லறத நீங்க மறந்துடுவீங்க… உங்கள கோபமாக திட்டி கேட்டா மறக்கவே மாட்டீங்க… அதுதான் மனித இயல்பு அதனால நான் பாசமா பேசமாட்டேன். உங்க கிட்ட கோபமாத்தான் பேசுவேன் என்றார். இந்துக்கள், “ஓம் சாந்தி ஹி” னு சொல்லுவாங்கனு சொன்னாரு! இவை எல்லாவற்றையும் அவர் வெச்சிருந்த ஆப்பிள் ஐ-பேட்ல எழுதிஎழுதி ப்ரொஜக்டர்ல பெரிசா காட்னாரு.
இவரு நிறுத்தனவுடனே, “அல்லேலுயா” “அல்லேலுயா” எல்லாரும் சொல்லுங்கனு அந்த பாடகர் ஆரம்பிச்சிராரு. அவர், அந்த சவுண்ட்க்கு ஏத்தமாதிரி சின்ன சின்ன ஸ்டெப்போட்டு மேடையில டான்ஸ் பண்ணாரு. கூடவே எங்க எல்லாரையும் எழுந்து நின்னு எங்களையும் ஸ்டெப்ஸ் போட சொன்னாரு. அவரு சொல்றதெல்லாம் எதுவும்கேக்காத மாதிரி உட்கார்ந்திருந்தாலும் திரும்ப, திரும்ப அதே பாட்ட பாடி எங்க நடு மண்டைல ஆணி அடிச்சா மாதிரி பதியவெச்சாரு.
படிக்க:
♦ புத்தகம் வைத்திருப்பது சட்ட விரோதமா ?
♦ தெரசா – நரகத்தின் தேவதை
என் அருகில் அமர்ந்திருந்த சக மாணவி ஒருத்தி, “என்ன ஸ்டடி ஹாலுக்கு கூட அனுப்ப சொல்லுடி, எனக்கு பிடிக்காத சப்ஜட்ட படிக்க தயாரா இருக்கேன் ஆனா இவர் பண்றத, பேசதற சகிக்க முடியல” என்றாள். அவர் பாட்டுக்கு, டான்ஸ்க்கு எழுந்துக்க சொல்லும்போது கொஞ்சம்பேர் எழுந்துக்கவே இல்ல. அவங்கள பார்த்து, அவருக்கு கோபம் வந்தது. “உங்களின் மனதில் சாத்தான் குடியிருக்கிறது” என்று அவங்கள பாத்து சொன்னாரு. அப்பவும் அவங்க எழுந்துக்கல.
பின்னாடி உட்கார்ந்திருந்தவள், “என்னடி இவரு பாடும்போதும், ஆடும்போதும் மானே தேனே பொன்மானே மாதிரி “அல்லேலுயா” “ஆமென்”னு அங்கங்க சேத்துக்குறாரு” என்றாள். எங்கள் அரட்டை அவரை கடுபேற்றியது. நேரம் ஆக ஆக அவரின் பாட்டு, டான்ஸ் வீரியம் அதிகமானது. கண்ணை மூடி கதறும் நிலைக்கு சென்றார். பக்கத்தில் இருந்தவள் துப்பட்டாவை எடுத்து காதை மூடி கொண்டாள். ஆனால் கீழே இருந்த கிறித்தவ மாணவர்கள் பக்தியில் திளைத்திருந்தார்கள். அவர்களிலும் சிலர் விருப்பமில்லாமல் நெளிந்தார்கள். அவர் “அல்லேலுயா” “அல்லேலுயா” விடாமல் கத்த கத்த தாளமுடியாத மனஅழுத்தத்தில் எங்களில் ஒருத்தி அழ, நிறுத்தாமல் அழுத அவளை சமாதானப் படுத்தவும் அவர் கத்தி முடிக்கவும் சரியாக இருந்தது.
பிறகு பிரதர் மரியோ ஜோசப் ஏசு கிறிஸ்துவின் பிறப்பை பேசி, நாளை காலை 6.30 மணிக்கு இங்கு இருக்கவேண்டும். இல்லைனா உங்களை சுட்ருவேன் என்று காமெடி பண்ணி அதற்கு அவரே சிரித்துவிட்டு சென்றார்.
எப்ப? விடுவாங்க என்று காத்திருந்த நாங்கள் வேகமாக விடுதி நோக்கி ஓடினோம். என் ரூமுக்கு போனால், அல்லேலூயா என்று அவர்களை ‘வெச்சு செய்துக் கொண்டிருந்தார்கள்.’ ஒரு கிறித்தவ மாணவியும் கூட அதில் சேர்ந்திருந்தாள். அடுத்த நாளை எப்படி கடப்போம் என்ற பயத்துடனே அன்றிரவு பாதி தூங்கினோம். மறுநாள், விடியற்காலை 5.30 மணிக்கெல்லாம் அனைவரையும் எழுப்பி விட்டார்கள்.

வார்டன்கள் எங்களை அவசரமாக குளிக்கவைத்து துரத்தினார்கள். அங்கு போனால், பிரதர் மரியோ ஜோசப் அவர் மனைவியுடன் தோட்டத்தில் இயற்கையை ரசித்து நடந்துக்கொண்டிருந்தார். அவரின் மனைவி கேரளத்துக்கே உரிய அழகுடன் இருந்தார். மாணவிகளுக்கு அவர் மனைவியை பிடித்துவிட்டது. நாங்கள் உள்ளே செல்வதற்கு முன்னரே பாடகர் “அல்லேலுயா” பாட ஆரம்பித்துவிட்டிருந்தார். மேடையில் பைபிள் வாசகத்தை ஒரு மாணவியை படிக்க வைத்து அதற்கு தன் கீபோர்டில் இசையமைத்து தனது நடனத்துடன் அதை எங்கள் மனதில் பதிய வைக்க பெரும் முயற்சி எடுத்தார் பாடகர்.
அப்போது, எங்கள் கல்லூரி முதல்வர் வந்து, “எல்லாரும் கடவுளின் ஆசிர்வாதத்தை முடிவில்லாமல் பெற என் வாழ்த்துக்கள்” என்று சொல்லிவிட்டு நழுவ பார்த்தார். எங்க வாடிய முகங்களை பார்த்த அவர், “how many are not feeling comfortable?” என்று கேட்டதுதான். ஆடிட்டோரியம் மேற்பகுதியில் இருந்த அனைவரும் கை தூக்கினர். அவர், “இன்று அவர் பொதுவாகதான் பேச உள்ளார் So, you will feel comfortable soon” என்று சொல்லி, சென்றார்.
ப்ரதர் மீண்டும் பேச ஆரம்பித்தார். பிடிக்கவில்லை என்று கை தூக்கியவர்களை மட்டும் பார்த்து, பார்த்து பேச ஆரம்பித்தார். கடவுளை பற்றி பேசுவதையே கேட்க உங்களுக்கு பொறுமை இல்லை என்றால், வாழ்க்கையை எப்படி பொறுமையாக கையாள்வீர்கள்? நான் உங்களுக்கு வாழ்க்கையைப் பற்றி இப்போது சொல்லித்தருகிறேன் என்று எங்களிடம் நேசம் காட்டுபவர் போல் பேச ஆரம்பித்தார்.
SUCCESS என்ற வார்த்தைக்கு அர்த்தம் சொல்லித்தரப்போகிறேன் என்று. S க்கு set your goal என்றும், U க்கு unlock your hidden potentialities என்றும், C க்கு commitment and concentration என்றும் அர்த்தம் சொன்னார். அதை நோட்டில் எழுதிவைத்துக்கொள்ள சொன்னார்.
எங்கள் கல்லூரியில் பெரும்பான்மையாக கிராமத்திலிருந்து வந்த ஏழை மாணவிகளே இருப்பர். அதை தெரிந்த அவர் நீங்கள் ஏழ்மையின் பிடியில் இருந்தாலும் கடவுள் உங்களை மீட்பார் என்று மிகவும் பாவப்படுவதுபோல் பேசினார். “உலகில் உள்ள பல இடங்களுக்கும் சென்று இதேபோல் வகுப்பு நடத்தியுள்ளேன். உலக புகழ் பெற்ற பல பணக்காரர்களுக்கு வகுப்பு நடத்தியிருக்கிறேன். பல கல்லூரி மாணவர்களிடையே பேசியிருக்கிறேன். அவர்கள் உங்களை விட பல மடங்கு வேகமாக மேலேமேலே வளர்ந்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களை பார்க்கையில் எனக்கு பாவமாக இருக்கிறது. சிலர் எனக்குதான் எல்லாம் தெரியும் என்பதுபோல் கர்வமாக அமர்ந்துக் கொண்டிருக்கிறீர்கள். ஒன்று மட்டும் தெரிந்து கொள்ளுங்கள், கடவுள் கிருபை இல்லாமல் வாழ்க்கையில் எதையும் செய்ய முடியாது.” என்று எங்கள் வளர்ச்சிக்கு திடீர் பாடம் எடுத்தார்.
வாழ்க்கை நிலையில்லாதது, எப்பொழுது எது நடக்கும்? யார் எதுவரை உயிரோடுருப்போம்? என்று யாருக்கும் தெரியாது. ஆகையால் சீக்கரமே கடவுளை ஏற்றுக்கொள்ளுங்கள்… பாவத்திலிருந்து தப்பிப்போம் என்றார்.
படிக்க:
♦ யேசுவே நீரும் இல்லை – அன்னை தெரசா !
♦ ஏசு நாதர் போராட மாட்டாரா ?
அவர், திடீரென “நான் பலவேலைகளுக்கு மத்தியில் மேகாலயாவிலிருந்து உங்களை பார்க்க வந்தேன். 3 நாள் முடிந்ததும் கொச்சின் செல்வதற்காக விமானத்தில் பிஸ்னஸ் க்ளாஸில் டிக்கெட் புக் செய்துள்ளேன்… அதற்கு, 10,000 ரூபாய் டிக்கெட்டுக்கு, என் அக்கௌண்ட்டிலிருந்து ரூபாய் 11,200 போயிருந்தது. என்னவென்று அந்த ரசிதை படிக்கையில், அம்பானி ரிலையன்ஸ் கம்பெனிகாரன் அந்த வரி, இந்த வரி என்று எனக்கு தெரியாமலேயே பிடித்திருக்கிறான் என்றார்.
பிறகு, எல்லா மதமும் ஒன்றைதான் கூறுகிறது. இந்து மக்களிடம் எனக்கு பிடித்தது ஒன்று இருக்கிறது. கிறித்தவர்கள் கொஞ்சம் சுயநலம் மிகுந்தவர்கள். கிறித்துவர்களில் நிறைய டாக்டர்களும், இன்ஜினியர்களும் இருப்பார்கள். ஆனால், இந்துக்கள்தான், பொதுவேலைகளிலும், அரசியலிலும் அதிகம் இருப்பார்கள். இந்த விஷயத்தில் அவர்களை நான் பாராட்டுவேன் என்று கூறினார். பேச்சின் கடைசியில் அனைத்து மதத்தவர்களையும் பேலன்ஸ் செய்தார்.
நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக, பாடகரும் இவரும் சேர்ந்து மாணவிகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த மேடைக்கு வருமாறு அழைத்தனர். மாணவிகள் அவர்களை மிமிக்ரி செய்து “வெச்சு” செய்தார்கள். இதை எதிர்ப்பார்க்காத அவர்கள் நிஜமாகவே அதிர்ச்சி அடைந்தனர்.

மேடையேறிய மாணவிகள், அல்லேலுயா… ஆஆ அல்லேலுயா.. ஆஆ என்று அடித்துகொண்டு புரண்டு அழுதார்கள். அரங்கம் கர ஓசையில் அதிர்ந்தது. இன்னொருத்தி “இப்ப நம்ம பிரதர் போல செய்துகாட்டுகிறேன்” ஒழுங்கா கவனிங்க இல்லன்னா சுட்ருவேன்… என்று கூறி, கீழே இருந்த கேமரா மேனிடம், “அஜ்மல் அந்த கேமராவ சரிப்பன்னுப்பா” என்று கீழே பார்த்து ஆரம்பித்து பிரதர் போல பேசி நடித்தாள். இரண்டு நாட்கள் எங்களை வாட்டிய பாதரை செமையாக கடுப்பேத்தினார்கள். இரண்டு நாள் இல்லாத அளவு அரங்கமே அதிர்ந்தது.
இதை எல்லாம் பார்த்து, உலகம் சுற்றிய பிரதர், “நான் பல நாட்டு பெண்களை பார்த்துள்ளேன். ஆனால், தமிழ்நாட்டு பெண்களை போல தைரியமுள்ள பெண்களை பார்த்ததில்லை” என்று கதறினார். நடுவில் தன் கடுப்பை மறைக்க மிமிக்கிரியை முடிக்க நினைத்தார். விசில் அடிக்க யாருக்கெல்லாம் தெரியும்? என்று அவர் திசைமாற்ற அதிலும் அவருக்கு ஆப்பு காத்திருந்தது. அவர், கேட்டு முடிப்பதற்குள்ளேயே அரங்கமே விசிலால் தெறித்தது. அவர் கீழே இருந்த சிஸ்டரை பார்த்து, “சிஸ்டர்… இது ஆண்கள் கல்லூரியா, பெண்கள் கல்லூரியா என்று எனக்கு தெரியவில்லை” என்று மிரண்டுபோனார்.
நடித்துகாட்டிய மாணவிகளுக்கும் வேறுவழியில்லாமல் பரிசு வழங்கப்பட்டது. பரிசு, அவர் வைத்திருந்த பல வெளிநாட்டு டாலர்கள் மற்றும் விலையுயர்ந்த வெளிநாட்டு பேனாக்கள் பரிசு வாங்கியவுடன் மாணவிகள், இரண்டு நாள் துக்கத்தை மறந்து புத்துணர்ச்சி பெற்றார்கள். அதே புத்துணர்ச்சியில், அவரும் திரும்பவும் கிறித்தவத்தை பற்றி சிறிது நேரம் பேசிவிட்டு சாப்பிட பிரேக் விட்டார். பிரேக் முடிந்ததும் நீங்கள் ஆவலாக எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கும் என் மனைவி பேச போகிறார். அவர் எங்கள் லவ் ஸ்டோரியையும் சொல்லுவார் என்று டிரெண்டிங்காக பேசி உசுப்பேத்தினார்.
அவர் மனைவி பேச ஆரம்பித்தார். “நான் சிறுவயதில் மிகவும் கவலைப்பட்டிருக்கிறேன். உடுத்த உடையில்லாமல், சாப்பிட உணவில்லாமல் எங்கள் வீட்டில் வறுமையில் வாடியிருந்தோம். கடவுளின் கிருபையால்தான் இந்த இடத்தில் இருக்கிறேன், நான் செவிலியருக்கு படித்துவிட்டு சென்னையில் இரண்டு வருடம் வேலை பார்த்தேன். அங்கே ஒருவன்மீது காதல். வேற்று மதம் என்பதால் வீட்டில் பெரிய பிரச்சனை. என்னை வீட்டில் அடைத்து வைத்தனர். நான் ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் கேரளாவிலுள்ள ஒரு கிறித்தவ ரீடீரிட் சென்டருக்கு கவுன்சிலிங்குக்காக சென்றேன். அங்குதான் இவரை சந்தித்தேன்.”
அங்கு இருவருக்கும் காதல் மலர்ந்ததை சுவாரஸ்யமாக கூறினார். பிறகு, “உங்களை பற்றி பிறர்,பின்னாடி பேசுகிறார்கள் என்று கவலை படாதீர்கள் அவர்கள் பின்னாடி பேசுகிறார்கள் என்றால் நீங்கள் முன்னாடி இருக்கிறீர்கள் என்றுதானே அர்த்தம்” அப்படி கவலைப்பட்டிருந்தால், இன்று நான் ஒரு லட்சம் சம்பளத்தில் வேலையில் இருக்க மாட்டேன் எல்லாம் கடவுள் கொடுத்தது” என்றார்.
பக்கத்தில் இருந்த தோழி “நான், அரியர் இல்லாம கிரஜூவேஷன் வாங்குவேனான்னு தெரியல… இவருக்கு, ஒரு லட்சம் சம்பளமா கடவுள் கொடுத்தாராம்… நம்மள ரொம்ப கடுப்பேத்துறாங்க… டி” -னு அலுத்துக்கொண்டாள்.
பேசி முடித்ததும் பிரதர், இன்று பொதுவாக பேசி இந்த நாளை வீணடித்து விட்டோம். நாளை கிறித்தவர்கள் மட்டும்தான் இருக்க வேண்டும். அவர்களுக்கு உண்மையான ரீடீரிட் (retreat) நடத்தப்படும் என்ற கூறி எங்களைப் போன்ற சாத்தான்களை வழியனுப்பிவைத்தார்..
நாங்கள் ஆளை விட்டால் போதுமென்று கிளம்பினோம். “நீங்க மட்டும் எஸ்கேப் ஆவுறீங்களேடி…” என்பது போல் பார்த்தார்கள் கிறித்தவ மாணவிகள். பாவம் அந்த தேவதூதர்கள் !
– அவந்திகா