தொழிலாளர்களின் பலத்த எதிர்ப்புகளுக்கிடையே, மெட்ரோ ரயில்நிலைய கட்டுப்பாட்டாளர்கள் பொறுப்பும் இனி தனியார்வசம் ஒப்படைக்கப்படுவதாக அறிவித்திருக்கிறது, சி.எம்.ஆர்.எல். நிர்வாகம். நிர்வாகத்தின் இத்தகைய முயற்சி தொழிலாளர்களின் நிரந்தர வேலைக்கான வாய்ப்பை பறித்திருப்பதோடு, அன்றாடம் பயணிக்கும் ஆயிரக்கணக்கான பயணிகளின் பாதுகாப்பையும் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. இதனை எதிர்த்து கேள்விகேட்கும் தொழிலாளர்களையும், தொழிற்சங்கத்தையும் தொடர்ந்து பழிவாங்கும் வேலையைச் செய்துவருகிறது, சி.எம்.ஆர்.எல். நிர்வாகம்.
கடந்த ஏப்ரல்-27, 2019-ல் தொழிற்சங்கம் அமைத்ததற்காக பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் 8 பேருக்கு உடனடியாக எந்தவித நிபந்தனையுமின்றி பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை மெட்ரோ தொழிலாளர்கள் நடத்தினர். அப்போதே, சி.எம்.ஆர்.எல். நிர்வாகத்தைப் படிப்படியாக தனியார்மயமாக்க மேற்கொள்ளப்படும் சதிகளையும் இதனை எதிர்க்கும் தொழிற்சங்கத்தையும் தொழிற்சங்க நிர்வாகிகளையும் பழிவாங்குவதையும் ஆதரங்களோடு அம்பலப்படுத்தியிருந்தனர்.
சங்கம் தொடங்கியதற்காக, 8 தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதோடு, இதனைக் கண்டித்து, சட்ட விதிகளின்படியே வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் 9 பேரையும் தற்காலிக பணியிடைநீக்கம் செய்தது சி.எம்.ஆர்.எல். நிர்வாகம். இன்றுவரையில் அவர்களுக்கு பணிவழங்காமல், தொழிலாளர்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து, மெட்ரோ ரயில் இயக்குபவர், டிக்கெட் வழங்குபவர், நிலைய பரிசோதகர், பாதுகாப்புப் பணிகளில் என படிப்படியாக தனியார் ஒப்பந்தப் பணியாளர்களைப் புகுத்தியது சி.எம்.ஆர்.எல். நிர்வாகம்.
இந்நிலையில்தான், சி.எம்.ஆர்.எல்-ல் இருந்துவரும் ஒரே நிரந்தரப்பணியான முக்கியப் பொறுப்பான நிலைய கட்டுப்பாட்டாளர் (Station Controller) பணியையும் பறித்து, அதற்கு பதிலாக Station Incharge என்ற பெயரில் எந்தவித பயிற்சி, அனுபவம் இல்லாத தனியார் ஒப்பந்த ஊழியர்களை நியமித்திருக்கிறது நிர்வாகம்.
மாதம் 28,000 சம்பளத்துக்கு நிரந்தரப் பணியாளர்கள் பணியில் சேர தயாராக இருக்கும்போது, ரூ.68,000-க்கு ஒப்பந்த பணியாளர்களை பணியிலமர்த்த துடிப்பது யாருக்காக? என்று கேள்வியெழுப்புகிறார்கள் மெட்ரோ தொழிலாளர்கள். இது தொடர்பாக, சென்னை மெட்ரோ இரயில் லிமிடெட் எம்ப்ளாயீஸ் யூனியன் சார்பில் கீழ்க்காணும் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.
எச்சரிக்கை : முழுவதும் தனியார்மயமாகும் மெட்ரோ இரயில் நிலையங்கள்!!
சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களில் இதுவரை இருந்த CMRL-ன் ஒரே ஒரு நிரந்தர பணியாளர் ஆகிய நிலைய கட்டுப்பாட்டாளர் (Station Controller) இனி இருக்க மாட்டார்கள் என நிர்வாகம் அறிவிப்பு…!
அதற்கு பதிலாக Station Incharge என்ற பெயரில் எந்தவித பயிற்சி, அனுபவம் இல்லாத தனியார் ஒப்பந்த ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் நமக்கு என்ன பாதகம்? என்று நினைக்கும் மெட்ரோவாசிகளே…!
♦ மெட்ரோ நிலையங்களிலோ அல்லது மெட்ரோ இரயிலோ நீங்கள் பயணம் செய்யும் போது, மெட்ரோ ரயில் பழுதாகி உங்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உங்களை காப்பாற்ற திறம்பட செயல்படுவதற்கென டெல்லி, பெங்களூர் மெட்ரோக்களில் சிறப்பு பயிற்சி பெற்று, இதுநாள் வரை எவ்வித அசம்பாவிதமும் நடைபெறா வண்ணம் பாதுகாத்து சேவை செய்த நிரந்தர ஊழியர்கள் இனி இல்லை..! (சென்னை வெள்ளத்தின் போது சிறப்பாக மெட்ரோவை இயக்கியவர்கள் இந்த நிரந்தர ஊழியர்களே)
♦ முன்னர் பலத்த எதிர்ப்புகளுக்கு இடையில் இரயில் ஒட்டுநர் பணிகளை தனியாருக்கு தாரை வார்த்த போது, பயிற்சியற்ற அத்தகைய ஒட்டுநர்களால் இரயில்கள் பழுதாகி நின்று மக்கள் பாதித்த போதெல்லாம், நிரந்தர ஊழியர்களாகிய இந்த நிலைய கட்டுப்பாட்டாளர்கள் தான் மக்களை காப்பாற்றினார்கள். இனி யார் காப்பாற்றுவார்கள்?
♦ மக்களை ஏமாற்றிட நினைக்கும் மெட்ரோ நிர்வாகம் தனியார் ஊழியர்களுக்கு நிரந்தர ஊழியரைப் போல் சீருடை கொடுத்து தில்லு முல்லு செய்துள்ளது. (மக்களே!!! சீருடையின் மேல் கைகளில் தனியார் நிறுவன பெயர் உள்ளதை கவனியுங்கள்)

♦ இந்தியாவில் எந்த மெட்ரோவிலும் நடக்காத வகையில், நிரந்தர பணிகளில் இவ்வாறு முறையற்ற தனியார் ஊழியர்களை ஈடுபடுத்தி பாதுகாப்பை கேள்வி குறியாக்கிடும் சென்னை மெட்ரோ நிர்வாகமே… தமிழர்கள் உயிர் என்ன சோதனை எலிகளா?
♦ உங்களின் வரிப்பணத்தை கொண்டு செயல்படுத்தப்படும் சென்னை மெட்ரோவில், அதிகாரிகளின் பினாமி பெயரில் செயல்படும் குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களுக்கு இந்த Station Incharge பணியை கொடுத்துள்ளனர். இதற்கென மெட்ரோ நிர்வாகம் நபர் ஒன்றிக்கு செலவிடும் தொகை சுமார் ரூ. 65,000. இது நிரந்தர ஊழியர்களின் மாத சம்பளத்தை போல இருமடங்கு..!
அந்த குறிப்பிட்ட தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பெறுவதோ ரூ. 18,000/- மீதம் அதிகாரிகளின் பாக்கெட்டிலா? இந்த தனியார்மயமாக்கலால் யாருக்கு லாபம்?
சில கேள்விகள் உங்களுக்காக..
1. இந்த பணிக்கு முறையாக டெண்டர் விடப்பட்டதா?
2. போதிய எண்ணிக்கையில் பயிற்சி பெற்ற நிரந்தர ஊழியர்கள் இருக்கையில் ஏன் இந்த ஒப்பந்த ஊழியர்கள்?
3. டிக்கெட் கொடுப்பதும் அதை சரி பார்ப்பதும் ஒரே தனியார் நிறுவன ஊழியர்கள் என்றால் ஊழல் நடக்காதா? (மண்ணடி மெட்ரோ பார்க்கிங் தனியார் ஊழியரின் 2 இலட்சம் ரூபாய் ஊழலை கண்டுபிடித்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்த நிரந்தர ஊழியர் இப்போது அந்த பணியிலேயே இல்லை என்பது எத்தனை பேருக்கு தெரியும்)
4. தமிழக இளைஞர்களின் நிரந்தர வேலைவாய்ப்பு மற்றும் இட ஒதுக்கீடு எங்கே? இலட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் நிலையில், கொத்தடிமைகள் போல் நம் பிள்ளைகளை தனியார் ஒப்பந்த முறையில் வேலைக்கு அமர்த்தும் செயலை அரசு நிறுவனமே செய்யலாமா?
5.சென்னை மெட்ரோ நிர்வாகம் இதே பணிக்கு கடந்த 2016 ஆண்டு 41 காலி பணியிட அறிவிப்பு செய்து தேர்வு செய்யப்பட்ட நிரந்தர ஆட்களை நியமிக்காமல் இப்படியான ஒரு அவசர தனியார்மயத்திற்கான அவசியம் என்ன?
6.ஊழலுக்கு துணை போகும் நிர்வாக அதிகாரிகளின் மேல் Vigilance நடவடிக்கை எடுக்காமல் இருக்க என்ன காரணம்? தமிழக அரசின் தலையீடா?
படிக்க:
♦ சென்னை மெட்ரோ : பணிப்பாதுகாப்பு இல்லை ! பயணம் மட்டும் பாதுகாப்பாக இருக்குமா ?
♦ சென்னை மெட்ரோ : நவீன ரயிலை இயக்கும் தொழிலாளிகளின் அவல நிலை !
மக்களே, சென்னைவாசிகளே சிந்தியுங்கள்…!
♦ இந்த மெட்ரோவிற்காக…
உங்கள் நிலங்களை இழந்தீர்கள்; பூங்காக்களை இழந்தீர்கள்; அதிக கட்டணக்கொள்ளையால் பணத்தை இழக்கிறீர்கள்; உங்கள் மகனோ மகளோ பெற வேண்டிய அரசு வேலையை இழக்கிறீர்கள்; இதுவரை அனுபவித்த விபத்தில்லா மெட்ரோ பயணத்தை இழந்து உயிரையும் உடைமைகளையும் இழப்பதற்கு முன்பு விழித்திடுங்கள்…!
மெட்ரோ நம் சொத்து…! தனியார்வசமாக்கி நாசமாக்க விடமாட்டோம்!!
#savechennaimetro
தகவல் : புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
தொகுப்பு : வினவு செய்தியாளர்.