Sunday, April 20, 2025
முகப்புசெய்திஇந்தியாபொருளாதார வீழ்ச்சி : மறைக்கும் நிர்மலா ! வீதிக்கு வரும் ஆதாரங்கள் !

பொருளாதார வீழ்ச்சி : மறைக்கும் நிர்மலா ! வீதிக்கு வரும் ஆதாரங்கள் !

இந்த வீழ்ச்சி, ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் பரந்துபட்ட பலவீனத்தின் வெளிப்பாடாகவே இருக்கிறது. இந்தியா முழுவதும் பொருளாதார வீழ்ச்சி உச்சத்தை எட்டி உள்ள நிலையிலும், அதனை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார், நிர்மலா சீதாராமன்.

-

டிப்படையான எட்டு தொழில்துறை பிரிவுகளில் கடந்த ஆண்டு ஜூலையில் 7.3%-மாக இருந்த வளர்ச்சி இந்த ஆண்டு ஜூலையில் 2.1%-மாக குறைந்துவிட்டதாக அரசு வெளியிட்ட தரவுகளே தெரிவிக்கின்றன.

நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலிய சுத்திகரிப்பு,  உரம், எஃகு, சிமெண்ட் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட முக்கியமான 8 தொழில்துறைப் பிரிவுகள் கடும் சரிவைச் சந்தித்துள்ளன. இந்த விவரம் நேற்று (செப்-2, 2019) அரசால் வெளியிடப்பட்ட தரவுகளில் இருந்து எடுக்கப்பட்டது.

இத்தகவலின்படி நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் சுத்திகரிப்புப் பண்டம் ஆகியவற்றின் உற்பத்தி கடந்த ஜூலை மாதத்தில் இறங்குமுகமாக வீழ்ச்சியை நோக்கியே சென்றிருக்கிறது.

இங்கு குறிப்பிடப்படும் 8 தொழில்துறைப் பிரிவுகளில், கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் 5.9%-மாக இருந்த வளர்ச்சி, இந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 3%-மாக சரிந்தது.

இந்த 8 அடிப்படை தொழிற்துறைப் பிரிவுகளும் தொழிற்சாலை உற்பத்திப் பட்டியலில் (Index of Industrial Production (IIP)) உள்ள பண்டங்களின் பங்கில் சுமார் 40.27% பங்களிக்கின்றன.

எஃகு தொழிற்துறைப் பிரிவில் கடந்த ஆண்டு (2018) ஜுலையில் 6.9%-மாக இருந்த வளர்ச்சி, இந்த ஆண்டில் 6.6%-மாகவும், சிமெண்ட் தொழிற்துறைப் பிரிவில் கடந்த ஆண்டு ஜுலையில் 11.2%-மாக இருந்த வளர்ச்சி, இந்த ஆண்டில் 7.2%-மாகவும், மின்சார தொழிற்துறைப் பிரிவில் கடந்த ஆண்டு ஜுலையில் 6.7%-மாக இருந்த வளர்ச்சி, இந்த ஆண்டில் 4.2%-மாகவும், சரிந்துள்ளது.

இருப்பினும், உரத் தொழிற்துறைப் பிரிவில் மட்டும் கடந்த ஆண்டு ஜூலையில் 1.3%-மாக இருந்த வளர்ச்சி, ஓரளவு முன்னேறி 1.5%-மாக வளர்ந்திருக்கிறது.

படிக்க:
வாயில் மண்ணை திணித்து … மின்சாரம் பாய்ச்சி … காஷ்மீர் கொடூரங்கள் !
தஞ்சை டெல்டா விவசாயிகளை வஞ்சிக்கும் எடப்பாடி அரசு !

ஏப்ரல் – ஜூலை காலகட்டத்திற்கான வளர்ச்சி விகிதத்தைப் பொறுத்தவரையில், இந்த 8 தொழிற்துறைப் பிரிவுகளிலும், கடந்த 2018-ம் ஆண்டு இதே காலகட்டத்திலிருந்த 5.9% வளர்ச்சி இந்த ஆண்டில் 3%-மாக –அதாவது, கிட்டத்தட்ட பாதியாகக் குறைந்துள்ளது.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், இந்த அடிப்படையான 8 தொழிற்பிரிவுகளின் வளர்ச்சி விகிதம் சரிவைக் கண்டுவருகிறது. கடந்த மார்ச் மாதத்தில் 5.8%-மாக இருந்த வளர்ச்சி விகிதம், ஏப்ரல் மாதத்தில் 5.2%-மாகவும், மே மாதத்தில் 4.3%-மாகவும், ஜூன் மாதத்தில் 0.7%-மாகவும் சரிந்தது.

உற்பத்தி மற்றும் நுகர்வின் அளவு குறைந்து அதன் காரணமாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) அளவீட்டில் சரிவு ஏற்படத் தொடங்கியதைத் தொடர்ந்து இத்தகவல்கள் வெளியாகின்றன. கடந்த 25 காலாண்டுகளில் இல்லாத அளவிற்கு மொத்த உள்நாட்டு  உற்பத்தி (GDP) 5%-மாகக் குறைந்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் (GDP Rate) தொடர்ந்து ஐந்தாவது காலாண்டாக வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. கடைசியாக மார்ச் 2013-ம் ஆண்டு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.3%-மாக இருந்தது. அதுதான் மிகவும் குறைவான அளவாக இருந்தது. தற்போது அதனை நெருங்கி வந்துகொண்டிருக்கிறது மோடி அரசு.

இந்த வீழ்ச்சி, ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் பரந்துபட்ட பலவீனத்தின் வெளிப்பாடாகவே இருக்கிறது. கடந்த 2018-ம் ஆண்டின் ஏப்ரல் – ஜூன் காலாண்டில் 12.1%-மாக இருந்த உற்பத்தி வளர்ச்சி,  இந்த ஆண்டு ஏப்ரல் – ஜுன் காலாண்டில் 0.6%-மாக இருக்கிறது. விவசாயம், வனம் மற்றும் மீன்பிடித்துறைப் பிரிவில் கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் இருந்த 5.1% வளர்ச்சியானது, இந்த ஆண்டு 2.0%-மாகக் குறைந்துள்ளது.

இந்தியா முழுவதும் பொருளாதார வீழ்ச்சி உச்சத்தை எட்டி உள்ள நிலையிலும், இந்தியாவின் ’முதல் பெண் நிதித்துறை அமைச்சரான’ நிர்மலா சீதாராமன், அதனை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார். பொருளாதார மந்தநிலை குறித்து நிருபர்கள் கேள்விகேட்டால்கூட, கேமராவுக்கு முன்னேயே அதிகாரத் தொனியில் மிரட்டி அவர்களை வாய்மூடச் செய்கிறார். நிருபர்கள் வாயை மூடலாம். நடுக்கடலில் கப்பலில் விழுந்த ஓட்டையை மறைக்க முடியுமா என்ன ?


நந்தன்
நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்