நாட்டின் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர்களுள் ஒருவரான ரொமிலா தாப்பரை அவமதிக்கும் விதமாக அவருடைய கல்வி, பணி தொடர்பான சுயவிவர குறிப்பை கேட்டுள்ளது ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக நிர்வாகம்.
மோடி தலைமையிலான பாஜக அரசு 2014-ம் ஆண்டு மத்தியில் ஆட்சியமைத்தது முதல், முற்போக்காளர்களை உருவாக்கியுள்ள நாட்டின் உயரிய பல்கலைக்கழகங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சிகளை எடுத்துவருகிறது. இதை வரலாற்றாசிரியர் ரொமிலா தாப்பர் போன்றோர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மோடி அரசின் கீழ் நாட்டில் சகிப்பின்மை வளர்ந்து வருவது குறித்து The Public Intellectual in India என்ற நூலையும் அவர் எழுதியுள்ளார்.

ரொமிலா தாப்பர் ஜே.என்.யூவில் 1970 முதல் 1991 வரை பேராசிரியராகப் பணியாற்றியவர். 1993-ம் ஆண்டு முதல் கவுரவ பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். இது வாழ்நாள் முழுமைக்கும் – அவருக்கு வழங்கப்பட்ட மரியாதையாகும். ஊதியம் எதுவும் ஜேஎன்யூ நிர்வாகம் தராது, ஆனால் கவுரவ ஆசிரியருக்கு பல்கலைக்கழக வளாகத்தில் அறை ஒன்று ஒதுக்கப்படும். இதன் மூலம் பல்கலைக்கழகத்தின் நூலகத்தைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட வசதிகளை கவுரவ பேராசிரியர் பெற முடியும்.
இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நடைமுறை உள்ளநிலையில், உலக அளவில் அங்கீகாரம் பெற்ற 87 வயதான ரொமிலா தாப்பரிடம் சுய விவரக் குறிப்பைக் கேட்டுள்ளார் ஜே.என்.யூ பதிவாளர் பிரமோத் குமார்.
“பல்கலைக்கழகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கமிட்டி, தாப்பரின் சுயவிவரக் குறிப்பைப் பார்த்து, அவர் கவுரவ பேராசிரியராக பணியாற்றலாமா வேண்டாமா என்பது குறித்து தீர்மானிக்கும்” என கூறியுள்ளார் பிரமோத் குமார்.
பல்கலைக்கழக நிர்வாகத்தின் இந்த ‘புதிய’ நடைமுறை குறித்து தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ள பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர், கவுரவ பேராசிரியர்களிடம் ஒருபோதும் சுயவிவரக் குறிப்பு இதுநாள் வரை கேட்கப்பட்டதில்லை என்கிறார். இது வாழ்நாள் முழுமைக்குமான பதவி எனவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
படிக்க:
♦ மோடி பட்டப்படிப்பில் படித்த பாடங்கள் பாடத்திட்டத்திலேயே இல்லையாம் !
♦ புத்தகம் வைத்திருப்பது சட்ட விரோதமா ?
“இது முழுக்க முழுக்க அரசியல் நோக்கம் கொண்ட நடவடிக்கை. பேராசிரியர் தாப்பர் கல்வியை தனியார்மயமாக்கும் கொள்கையை கடுமையாக எதிர்க்கக்கூடியவர். தன்னிச்சையான அமைப்புகளை அழிப்பது, ஜேஎன்யூ உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் எதிர்ப்புக்குரலை ஒடுக்க நினைப்பது உள்ளிட்டவற்றை விமர்சித்தவர்” என்கிறார் பெயர் சொல்ல விரும்பாத மூத்த பேராசிரியர்.
இந்நிலையில், தன்னுடைய சுய விவரக் குறிப்பை ஜேஎன்யூ நிர்வாகத்துக்கு அனுப்பப் போவதில்லை என ரொமிலா தாப்பர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
“இது வாழ்நாள் முழுமைக்குமாக அளிக்கப்பட்ட பதவி. ஜே.என்.யூ நிர்வாகம் அடிப்படை நடைமுறைக்கு எதிராகப் போய்க்கொண்டிருக்கிறது” என அவர் கூறியுள்ளார்.
நோபல் பரிசுக்கு இணையான குலுஜ் விருது பெற்ற பேராசிரியரை, ஜே.என்.யூ நிர்வாகம் வேண்டுமென்றே அவமதிக்கிறது. அதற்காக உடனடியாக அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என இடதுசாரி மாணவ அமைப்பினரும் காங்கிரசின் மாணவர் அமைப்பும் வலியுறுத்தியுள்ளது.
ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவர் என். சாய் பாலாஜி, “கல்வித் திறன், அர்ப்பணிப்பு மற்றும் ஆய்வுத் தரம் ஆகியவற்றில் புகழ்பெற்ற பேராசிரியர் ரொமிலா தாப்பரிடமிருந்து சுய விவரக் குறிப்பை கேட்பது அரசின் பெரிய நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகும். இந்த அரசு ஆய்வு மற்றும் கற்றலை அழிக்கவிரும்புகிறது” என விமர்சித்துள்ளார்.
மேலும், “பதிவாளர் சுயவிவரக் குறிப்பை அனுப்பக் கேட்டு மின்னஞ்சல் அனுப்பியிருப்பது மோசமான செயல். ஜேஎன்யூ துணை வேந்தருக்கு கொஞ்சமாவது மூளை இருந்தால், தாப்பரிடம் அவர் உடனடியாக மன்னிப்புக் கேட்க வேண்டும். காரணமில்லாமல் ஜேஎன்யூவை அழிக்க நினைப்பதையும் நிறுத்த வேண்டும்” எனக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதுவரை இல்லாத நடவடிக்கையை புதிதாக புகுத்தியிருப்பதாக விளக்கம் அளித்துள்ள ஜேஎன்யூ நிர்வாகத்தின் நோக்கங்கள் வெளிப்படையானவை. அரசுக்கான அடியாளாக செயல்பட்டு, ஜேஎன்யூ வளாகத்திலிருந்து முற்போக்கு அறிவுஜீவிகளை விரட்டப் பார்க்கிறது நிர்வாகம்.
அனிதா
நன்றி: இந்தியா டுடே, டெலிகிராப் இந்தியா.