Monday, April 21, 2025
முகப்புசெய்திஇந்தியாவாயில் மண்ணை திணித்து ... மின்சாரம் பாய்ச்சி ... காஷ்மீர் கொடூரங்கள் !

வாயில் மண்ணை திணித்து … மின்சாரம் பாய்ச்சி … காஷ்மீர் கொடூரங்கள் !

நாங்கள் வலிதாங்காமல் அலறுவதைத் தடுக்க, எங்கள் வாயில் மண்ணை திணித்தார்கள். அவர்களுடைய சித்திரவதையைத் தாங்காமல் சுட்டுவிடுங்கள் என கெஞ்சியும்கூட பார்த்தோம்...

-

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்து கடந்த ஆகஸ்டு 5-ம் தேதி முதல் மத்திய அரசால், ரத்து செய்யப்பட்டதிலிருந்து, அம்மாநிலம் முடக்கப்பட்டுள்ளது. இந்திய ஊடகங்கள் மூலம் ஆளும் அரசு காஷ்மீரில் அமைதி நிலவுவதாகத் தொடர்ந்து புனைந்துகொண்டிருக்கும் நிலையில், அங்கே வீடுகளில் புகுந்து பொதுமக்களைக் கைது செய்து பல்வேறு சித்திரவதைகளை செய்வதாக சர்வதேச ஊடகங்கள் ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டு வருகின்றன.

சிறுவன் ஒருவன் பாதுகாப்புப் படையினரால் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டது குறித்து அவருடைய தந்தை கதறி அழுத வீடியோ ஒன்றை வாஷிங்டன் போஸ்ட் கடந்த வாரம் வெளியிட்டிருந்தது.

அந்த வீடியோவில், அந்தத் தந்தை நிசார் அகமது மிர், ஆகஸ்டு 24-ம் தேதி தன்னுடைய மகனை படையினர் தூக்கிச் சென்றதாக கூறினார். அந்த வீடியோ ஆகஸ்டு 26-ம் தேதி எடுக்கப்பட்டு, தகவல் தொடர்புகள் தடைபட்டிருந்த நிலையில் ஆகஸ்டு 29-ம் தேதி வெளியாகியிருக்கிறது.

“நள்ளிரவில் வந்த போலீசு எனக்கு எத்தனை மகன்கள் எனக்கேட்டது. மூன்று மகன்கள் என பதிலளித்தேன். காவலர் அனைத்து அறைகளையும் சோதனையிட்டார்; யாரும் இங்கிருந்து தப்பியோடவில்லை என்றேன்.  நான் என்னுடைய பிள்ளைகளை அழைத்து காவலர்கள் முன் நிறுத்தினேன். நான் அவர்களை மறைத்து வைத்திருக்கலாம். ஆனால், நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை எனும்போது நாங்கள் ஏன் ஓடிஒளிய வேண்டும்” என அன்று நடந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார் மிர்.

“அதன் பின், அவர்கள் எங்களை அச்சுறுத்தத் தொடங்கிவிட்டார்கள். என்னுடைய மகனை காவலருடன் அனுப்பி வைத்தேன். அப்போது நள்ளிரவு கடந்துவிட்டது…” என்கிறார். இதுவரை அந்தச் சிறுவன் திரும்பிவிட்டானா என்பதும் தெரியவில்லை.

படிக்க:
முடக்கப்பட்ட காஷ்மீர் பள்ளத்தாக்கு : படக் கட்டுரை
காஷ்மீர் : இராணுவத்தின் அத்துமீறலை அம்பலப்படுத்திய ஷெஹ்லா ரஷித் மீது வழக்கு !

“அரசு மக்களை காப்பதாகக் கூறுகிறது. இல்லை அவர்களை எங்களை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். காவலர்கள் எங்களிடம் சிறுவர்களை அழைத்துச் செல்ல தங்களிடம் அரசின் ஆணை இருப்பதாகவும் யாரையும் விடக்கூடாது என அது சொல்லியிருப்பதாகவும் சொல்கிறார்கள். இது குண்டர்களின் ராஜ்ஜியம், இங்கே சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லை” எனவும் மிர் கூறியுள்ளார்.

பிபிசி வெளியிட்ட செய்தியில் 13 ஆண்கள் சித்திரவதை செய்யப்பட்டு அடிக்கப்பட்டிருப்பதாக கூறுகிறது. இந்த ஊடகத்தின் நிருபர், இரண்டு சித்ரவதைக்குள்ளான சகோதரர்களிடம் பேசுகிறார். தங்களைப் பற்றிய விவரங்களை மறைத்த நிலையில், சித்ரவதைக்குள்ளான காயங்களை அவர்கள் காட்டுகிறார்கள்.  அவர்கள் பயத்தின் காரணமாக காஷ்மீரின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதையும் தெரிவிக்கவில்லை.

“எங்களை அவர்கள் உதைத்தார்கள், இரும்பு கம்பிகள், கேபிள்களால் எங்களைத் தாக்கினர். மின்சார அதிர்ச்சியையும் கொடுத்தனர். எங்களை ஏன் அடிக்கிறீர்கள் என அவர்களைக் கேட்டோம். அவர்கள் எதையும் சொல்லவில்லை. அவர்கள் எங்களை அடித்துக்கொண்டே இருந்தார்கள்…

நாங்கள் மயங்கி விழுந்தபோது, எங்களுக்கு மின்சார அதிர்ச்சியைக் கொடுத்து எழுப்பினார்கள். நாங்கள் வலிதாங்காமல் அலறுவதைத் தடுக்க, எங்கள் வாயில் மண்ணை திணித்தார்கள். அவர்களுடைய சித்ரவதையைத் தாங்காமல் சுட்டுவிடுங்கள் என கெஞ்சியும்கூட பார்த்தோம்” என்கிறார் சகோதரர்களில் ஒருவர்.

தன்னுடைய தாடியை ஒருவர் கொளுத்த முயன்றதாகவும் மற்றொரு சகோதரர் கூறினார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து பிபிசி இந்திய இராணுவத்திடம் கேட்டபோது, எழுத்துப்பூர்வமாக அளித்த பதில், பொதுமக்களை இராணுவம் ஒருபோதும் அதுபோல நடத்தவில்லை என கூறியுள்ளது.

படிக்க:
“காஷ்மீர் திறந்தவெளி சிறைச்சாலையாக மாறிவிட்டது” : உண்மையறியும் குழு அறிக்கை !
டெல்லிக்கு காஷ்மீர்தான் வேண்டும் – காஷ்மீரிகள் தேவையில்லை

முன்னதாக காஷ்மீரில் போராட்டங்கள் நடப்பதாக பிபிசி வெளியிட்ட செய்தியை மறுத்திருந்தது இந்திய இராணுவம். ஆனால், தான் அளித்த செய்தியை உறுதிப்படுத்தி அதனை பின்வாங்க மறுத்துவிட்டது பிபிசி.

இந்திய மாநிலங்கள் பலவற்றில் அமைப்பாக்கப்பட்ட வன்முறையை ஆளும் பாஜகவின் அடியாட்களான இந்துத்துவ அமைப்பினர் செய்துகொண்டிருக்கும்போது, அகண்ட பாரதக் கனவில் காஷ்மீரை ஆக்கிரமித்துள்ளவர் அதை பாதுகாக்கப் போகிறோம் என அறிவிப்பதை எவரும் நம்பப் போவதில்லை. ஆனால், வாக்களித்து பெரும்பான்மையுடன் அமரவைத்து உன்னதங்களை நிகழ்த்துவார்கள் என நம்பும் காவி ஆதரவாளர்களுக்கு மேற்கண்ட செய்திகள் உண்மையைச் சொல்லும்.

கலைமதி
நன்றி: டெலிகிராப் இந்தியா