புதுச்சேரியில் திருபுவனை பகுதியில் பிளாஸ்டிக் நாற்காலிகள், பிளாஸ்டிக் டப்பாக்கள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களைத் தயாரிக்கும் சுப்ரீம் இண்டஸ்ட்ரீஸ் தொழிற்சாலையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – சுப்ரீம் இண்டஸ்ட்ரீஸ் கிளை கிளைச் சங்கமாக செயல்பட்டு வருகிறது.
சங்கம் துவங்கி மூன்று வருடங்களாகியும், சங்கத்தை அழைத்துப் பேசுவது என்ற நடைமுறையும் இல்லை. சங்கம் தரும் கடிதங்களை வாங்கும் வழிமுறையும் இல்லை. ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட தொழிலாளர் பிரச்சினைகளைப் பேசுவதற்கு பலமுறைகளில் முயற்சி செய்தும் நிர்வாகம் முகம் கொடுக்கவே இல்லை.
இந்நிலையில் நமது சங்கம் ஆலையில் செயல்படுவதை நிர்வாகத்திற்கு உறைக்கும் விதமாக, 04.09.2019 அன்று ஆலைவாயிலில் பெயர்ப்பலகை வைத்து, கொடியேற்றுவது என தொழிலாளர்கள் முடிவு செய்தனர். அதற்காக 26.08.2019 அன்றே, பகுதி போலிசு நிலையத்திலும், மாவட்ட கண்காணிப்பாளரிடமும் முறையாக அறிவிப்பு செய்து பாதுகாப்பு கோரி கடிதம் கொடுத்தனர். பொதுப்பணித் துறையிடமும் அனுமதிக் கடிதம் கொடுத்து நிகழ்ச்சி ஏற்பாடுகளை கவனித்து வந்தனர். இதற்கு முன் வரை சங்கத்தை ஒரு பொருட்டாக மதிக்காத நிர்வாகம், கொடியேற்று நிகழ்ச்சியை அறிவித்தவுடன், அதைத் தடுப்பதற்கு பல்வேறு வழிகளில் குட்டிக் கரணம் போட்டுப் பார்த்தது.
ஏற்கனவே, திருபுவனை பகுதி பிப்டிக் தொழிற்பேட்டையில் எந்த பெயர்ப்பலகையும் வைக்கக் கூடாது சங்கக்கொடியும் பறக்கக் கூடாது என்பதில் முதலாளிகள் குறியாக இருந்தனர். அதற்காக, உள்ளூர் ரவுடிகளை தங்களது நிறுவனத்தில் சில வேலைகளைக் கொடுத்து ஒப்பந்ததாரர் என்ற பெயரில் அடியாள்படையாக வைத்துக் கொண்டு அராஜகங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் ஒப்பந்ததார ரவுடிகளுக்கு எதிராக பிப்டிக் தொழிற்பேட்டையில் 2014 ஆகஸ்டு – 05 அன்று பேரணி ஆர்ப்பாட்டம் நடத்திய போது பேரணியில் புகுந்து தொழிலாளர்களை ஒப்பந்தாரர ரவுடிகள் தாக்க முற்பட்டனர். இது வரையில் தங்களைப் பார்த்து பயந்து ஓடிய தொழிலாளர்களைப் பார்த்திருந்த அந்த ரவுடிகள் முதன்முதலாக, திருப்பி அடிக்கும் தொழிலாளர்களைப் பார்த்தனர். தொழிலாளர்களிடமிருந்து வெளிப்பட்ட வர்க்க கோபத்தை எதிர்கொள்ள முடியாமல் அந்த ரவுடிகள் தெறித்து ஓடினர்.
ஆகஸ்டு 05-ல் நடந்த இந்த சம்பவம், தொழிலாளர்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. இதுவரையில் தொழிலாளர்களை மிரட்டி வந்த ரவுடிகள் கூட்டத்தை ஓட ஓட விரட்டியது தொழிலாளி வர்க்கம். அன்று முதல் புதுச்சேரியின் நம்பிக்கை பெற்ற சங்கமாகத் திகழ்ந்து வருகிறது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி. தற்போது இந்த கொடியேற்றம், பெயர்ப்பலகை நிகழ்ச்சியைத் தடுப்பதன் மூலம், மீண்டும் ஒப்பந்ததார ரவுடிகளின் ராஜ்ஜியமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன், சுப்ரீம் ஆலை நிர்வாகம் இந்நிகழ்ச்சியைத் தடுக்க தீவிரம் காட்டி வந்தது.
இதனடிப்படையில் தான், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் புதுச்சேரி மாநில பொதுச் செயலாளர் தோழர். மகேந்திரன் அவர்களின் மாமனாரிடம், நிர்வாகத்தின் கைக்கூலிகளைக் கொண்டு ஏற்கனவே ஒப்பந்ததார ரவுடிகளின் கோஷ்டி மோதலில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வேலழகனைப் போல, உங்கள் மருமகனையும் யாராவது வெட்டிப் போடப் போகிறார்கள் எனச் சொல்லி, மிரட்டியுள்ளது.

அதற்கு, தொழிலாளி வர்க்கத்திற்காகப் பாடுபடும் தனது மருமகனைப் பற்றித் தெரியும் எனவும், ஆறிலும் சாவு, அறுபதிலும் சாவு. ஒரு மனிதன் எப்படிச் செத்தான் என்பதைத் தான் மக்கள் பேச வேண்டும் என்றும் பதிலடி கொடுத்து வந்துவிட்டார்.
தனது மிரட்டல் பலிக்காமல் பல்லிளித்துப் போகவே, போலிசை ஏவி விட்டது நிர்வாகம். கொடியேற்ற நிகழ்ச்சிக்குப் பாதுகாப்புக் கேட்டு 10 நாட்களுக்கு முன்னரே கடிதம் கொடுத்தும் பேசாத, இன்ஸ்பெக்டர், நேற்று (03.09.2019) தோழர் மகேந்திரன் அவர்களை அழைத்து, கொடியேற்ற நிகழ்ச்சியை ஒருவாரம் தள்ளி வைத்து நடத்தச் சொல்லிக் கேட்டார். தோழர் காரணம் கேட்ட போது, ஒரு தரப்பில் பிரச்சினை வருகிறது என்று சொல்லியும், பிறகு யோசித்து, தனக்கு அனுமதிக் கடிதம் வரவில்லை என்றும் ஒரு காரணத்தை சேர்த்துக் கொண்டார்.
நாம் பத்து நாட்களுக்கு முன்னரே நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக அவரிடம் அறிவித்து பாதுகாப்பு கோரியுள்ளதை தோழர் நினைவூட்டினார். மேலும், பொதுப்பணித்துறையிடம் முறையாக அனுமதி பெற்றதையும் விளக்கினார். பின், சற்றே நிதானித்து, ஒரு வாரம்… பத்து நாள் தள்ளி வைத்து நடத்துமாறும், வேறு சில பிரச்சினைகள் தனது காதுக்கு வந்துள்ளது என்று கூறியும் நிகழ்ச்சியை நடத்த விடாத வகையில் போலிசு இன்ஸ்பெக்டர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். ஆனால், கடைசிவரை, அந்த ‘வேறு சில பிரச்சினைகள்’ பற்றி சொல்லவே இல்லை.
படிக்க:
♦ தொழிற்சங்க உரிமையை காக்க கிளர்ந்தெழுவோம் ! புதுச்சேரி புஜதொமு ஆர்ப்பாட்டம் !
♦ கேரள வெள்ளம் : மானிய அரிசி கிடையாது | பாஜக-வின் கோரமுகம் !
ஏற்கனவே நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள், பிரச்சாரம், கொடி, பலகை வேலைகள் நடந்துள்ளது. சுவரொட்டி பரவலாக ஒட்டி பிரச்சாரங்கள் செய்யப்பட்டு விட்டது. இந்நேரத்தில் நிகழ்ச்சியை நடத்தாமல் இருக்க முடியாது என ஆணித்தரமாக சொல்லி விட்டு வந்து விட்டார், தோழர். மகேந்திரன்.
ரவுடிகளை விட்டு மிரட்டியும், போலிசை வைத்து நைச்சியமாகப் பேசியும் நிகழ்ச்சியை நடத்தவிடாமல் தடுக்க மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காமல் போனது. அதனால், சுப்ரீம் நிர்வாக அதிகாரிகள், நேற்று (03.09.2019) இரவு முதல் சங்க நிர்வாகிகளில் அகப்பட்டவர்களிடம் எல்லாம் பேசுவது, இல்லாதவர்களுக்கு மொபைலில் மெசேஜ் அனுப்புவது என எப்படியாவது நிகழ்ச்சியைத் தடுத்து விட வேண்டும் என தொடர்ச்சியாக முயற்சி செய்து வந்தனர்.
மேலும், 04.09.2019 அன்று காலை முதல் சுப்ரீம் நிறுவனத்தின் அருகாமைப் பகுதியில் கிட்டத்தட்ட 10 பேர் ஒப்பந்ததாரர் என்ற பெயரில் (ரவுடிகள்) சுற்றி வந்த வண்ணம் இருந்தனர். மீண்டும் ஒரு ஆகஸ்டு – 05 சம்பவத்தை எதிர்கொள்வது பற்றி தொழிலாளர்களை ஒருங்கிணைத்து பேசிய போது, உள்ளூர் என்ற அடிப்படையில் தங்களது ஊர்க்காரர்கள் சொந்தக்காரர்களைத் திரட்டி அந்த ரவுடிகளை எதிர்கொள்ளத் தயாரானார்கள் தொழிலாளர்கள். தங்களுக்கு எதிராக மக்கள் திரளுவதை அறிந்த ரவுடிகள், சற்று நேரத்திற்கெல்லாம் இடத்தைக் காலி செய்தனர்.
மறுபுறம், காலை 06.00 மணிக்கெல்லாம் ஆலை வாயிலுக்கு வந்த நிர்வாக அதிகாரிகள், கொடி, பெயர்ப்பலகை அமைக்கும் சங்க நிர்வாகிகள் ஒவ்வொருவரிடமும், நிகழ்ச்சியை நடத்த வேண்டாம் எனவும், நிறுவனத்தின் துணைத் தலைவரிடம் பேசச் சொல்வதாகவும் கூறி வந்தனர். ஒரு கட்டத்தில், நிகழ்ச்சி ஏற்பாட்டிற்காக செய்த செலவுகள் மொத்தமும் கொடுத்து விடுவதாகவும், நிகழ்ச்சியை நிறுத்தும் படியும் கோரி, அந்த பணத்தை நிர்வாகிகளின் பாக்கெட்டில் திணிக்க முயற்சித்தனர். ஆனால், தொழிலாளர்கள் இறுதி வரை விடாப்பிடியாக நின்று நிகழ்ச்சியை நடத்திக் காட்டினர்.
காலை 8.30 மணிக்கு திட்டமிட்டபடி ஆலைவாயிலில் சுப்ரீம் நிறுவனத் தொழிலாளர்களுடன், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்பு மற்றும் கிளைச் சங்கத் தொழிலாளர்களின் பரவலான பங்கேற்புடன், நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
சுப்ரீம் இண்டஸ்ட்ரீஸ் கிளைச் சங்கத்தின் தலைவர். தோழர். தனுசு அவர்கள் தலைமையேற்று, இந்நிகழ்ச்சி நடத்த வேண்டியதன் அவசியத்தை விளக்கினார். கிளைச் சங்கச் செயலாளர் தோழர். முத்தையன் நிகழ்ச்சி பற்றி கருத்துரை வழங்கியும் நிறுவனத்தில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் சுருக்கமாகப் பேசினார்.
பு.ஜ.தொ.மு.- புதுச்சேரி மாநிலத் தலைவர் தோழர். சரவணன், தொழிற்சங்கம் துவங்கியதன் நோக்க்கத்தையும், நமது தொழிற்சங்கம் செயல்படும் முறை பற்றியும் விளக்கி, இன்றைய நிகழ்ச்சியை நடத்துவதற்கான அவசியத்தை நிர்வாகம் தான் ஏற்படுத்தியுள்ளது என்பதை விளக்கினார்.
பு.ஜ.தொ.மு.– தமிழ்நாடு மாநில இணைச் செயலாளர் தோழர். பழனிசாமி, சங்கத்தின் பெயர்ப்பலகையை திறந்து வைத்து, தொழிற்சங்கம் தோன்றிய வரலாற்றுக் காரணிகளை விளக்கியும், தொழிலாளர்களை அரசியல்படுத்துதலும் சமூக ரீதியான செயல்பாடுகளும் தான் ஒரு போராட்டத்தை முழுமையடையச் செய்கிறது என்பதை தற்போதுள்ள பொருளாதார வீழ்ச்சி, வேலையிழப்பு ஆகிய விசயங்களுடன் ஒப்பிட்டு பேசினார். எனவே, அரசியல் தான் தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுக்கிறது. இதை உணர்ந்து நமது போராட்ட முறையை கட்டியமைக்க வேண்டும் என்பதையும் விளக்கினார்.
சுப்ரீம் கிளைச் சங்கத்தின் துணைத்தலைவர் தோழர். பாலசுப்ரமணியன் அவர்கள் நன்றியுரை கூறியும், தொழிலாளர்களுக்கு இனிப்புகள் வழங்கியும் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது.
படிக்க:
♦ கிருஷ்ணரும் சில பிய்ந்துபோன செருப்புகளும் !
♦ புதுச்சேரி வரலாற்றில் திருப்பம் – ரவுடிகளை வீழ்த்திய புஜதொமு
இந்த நிகழ்ச்சியை நடத்த விடாமல் தடுப்பதற்கு பல்வேறு முயற்சிகள் செய்து “தலையால் நின்று தண்ணி குடித்து”ப் பார்த்தும் முடியாமல் போகவே, அங்கு நின்றிருந்த போலீசை வைத்து, நிகழ்ச்சியை சீக்கிரம் முடிக்கச் சொல்லி தொடர்ந்து வற்புறுத்தி வந்தது. எனினும், திட்டமிட்ட அடிப்படையில் நிகழ்ச்சி முறையாகவும், முழுமையாகவும் நடத்தி முடிக்கப்பட்டது.
தனது அத்தனை முயற்சிகளும் பலிக்காமல் போனதால் வெறுப்பான நிர்வாகம், சங்கத்தில் இல்லாத சில தொழிலாளர்களை அழைத்துப் பேசியுள்ளது. தற்போது நிறுவனத்தில் கொடியேற்றி, பெயர்ப் பலகை திறந்துள்ளதால், எங்களது வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது என்று கையெழுத்துப் பெற்று, போலீசிடம் பெயர்ப்பலகையை அகற்ற வேண்டும் என புகார் கொடுக்க முயற்சித்து வருகிறது.
மற்றொருபுறம், வேலைக்கு உள்ளே வரும்போது கொடியேற்றம், பெயர்ப்பலகை நிகழ்ச்சி என்று சொல்லி சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் எங்களை வேலைக்கு வராமல் தடுத்தனர் என்று சில தொழிலாளர்களை வைத்து நிர்வாகம் புகார் பெற்றுள்ளது. இந்த புகார் கடிதங்களைக் கொண்டு பெயர்ப்பலகையை எடுப்பதற்கும், தொழிற்சங்க நிர்வாகிகளை மிரட்டி முடக்குவதற்குமான வேலைகளில் இறங்கியுள்ளது.
தொழிலாளர்களுக்கு எதிராக தொழிலாளரை நிறுத்தியுள்ளது. வர்க்க உணர்வும், அரசியல் புரிதலும் இல்லாததால் அந்தத் தொழிலாளர்கள் நமது சங்கத்திற்கு எதிராகப் புகார் கொடுத்துள்ளனர். நமது போராட்டமென்பது புகார் கொடுத்துள்ள அந்தத் தொழிலாளர்களின் உரிமைகளையும் உள்ளடக்கியது என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அதற்காக தொழிலாளர்களை அரசியல்படுத்தும் வேலைகளை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தொடர்ந்து கொண்டு சென்று வருகிறது.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி. தொடர்புக்கு: 95977 89801.